Published:Updated:

ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் எதற்கெல்லாம் எவ்வளவு லஞ்சம் தெரியுமா? அதிர வைக்கும் `ஸ்கேன்' ரிப்போர்ட்

எஸ்.மகேஷ்

தமிழகத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிடப் பல மடங்கு கட்டணம் புரோக்கர்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது.

ஆர்.டி.ஓ. அலுவலக கட்டண விவர அறிவிப்பு பலகை
ஆர்.டி.ஓ. அலுவலக கட்டண விவர அறிவிப்பு பலகை

லஞ்சத்தின் நடமாட்டம் அதிகம் உள்ள அரசுத் துறைகளில் போக்குவரத்துத் துறையும் ஒன்று. வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலங்களுக்குள் (ஆர்.டி.ஓ.) விவரம் தெரியாமல் நுழைபவர்களின் பாக்கெட் காலியாகிவிடும். புரோக்கர்கள் மூலம்தான் வட்டாரப் போக்குவரத்துத் துறையின் அன்றாடப் பணிகள் நடப்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். இதனால் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் சந்தேகப்பார்வை இந்தத் துறையின்மீது எப்போதும் இருக்கும். லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினாலும் அதிகாரிகள் தப்பிவிடுவது வாடிக்கை.

வாகனப் பதிவுக்காகக் காத்திருக்கும் புதிய பைக்குகள்
வாகனப் பதிவுக்காகக் காத்திருக்கும் புதிய பைக்குகள்

போக்குவரத்துத் துறையில் லஞ்சத்தைத் தவிர்க்க ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இருப்பினும், அங்கு லஞ்சம் பெறப்படுவது குறைந்தபாடில்லை. போக்குவரத்து அலுவலகங்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் (இருசக்கர வாகனம், கார்) டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பு, புதிய வாகனப்பதிவு, எப்.ஃசி, டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவைகளுக்காகச் செல்லும் பொதுமக்கள் சந்திக்கும் அனுபவங்கள் பல.

தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் குறித்த தகவல்களைச் சேகரித்தபோது அவை அதிர்ச்சிகரமாக இருந்தன. அதன் ஸ்கேன் ரிப்போர்ட் விவரங்கள் இது.

தகவல் ஆணையர் முன்பே நடந்த தில்லுமுல்லு... ஆர்.டி.ஐ அம்பலம்! #EndCorruption #VikatanExclusive

திருத்தணியில் உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குச் சென்று அங்குள்ள நிகழ்வுகளை வீடியோவாகப் பதிவுசெய்தோம். அப்போது, அலுவலகத்திலிருந்த புரோக்கர்கள் அங்கிருந்து எஸ்கேப் ஆனது தனிக்கதை.

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு முன் எல்.எல்.ஆர். என்றழைக்கப்படும் ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வசதி உள்ளது. டூ வீலர் லைசென்ஸ் (எல்.எல்.ஆர்) பெற கட்டணமாக ரூ.230-ம் (சிங்கிள் கிளாஸ்) ரூ.380-ம் (டபுள் கிளாஸ்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்களுக்கு சிங்கிள் கிளாஸ் ரூ.800-ம், டபுள் கிளாஸ் ரூ.1,100-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், டிரைவிங் ஸ்கூல் மூலமாகத்தான் பெரும்பாலானவர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெறுகின்றனர். இதற்கு, போக்குவரத்துத் துறை அலுவலகங்களின் அணுகுமுறையே முக்கியக் காரணம்.

ஆர்.டி.ஓ-அலுவலகம்
ஆர்.டி.ஓ-அலுவலகம்

அதாவது, தனிப்பட்ட முறையில் ஆன்லைன் மூலம் எல்.எல்.ஆர் பெற விண்ணப்பிக்கும்போது அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பொதுமக்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. இதனால்தான் 99 சதவிகிதத்தினர் டிரைவிங் ஸ்கூல் மூலம் விண்ணப்பிக்கின்றனர். மோட்டார் வாகன ஆய்வாளர் முன்னிலையில் டூவீலர், கார்களை ஓட்டிக்காட்டும்போது செய்யும் தவறுகள் சரிகட்டப்படுகின்றன. தனிப்பட்ட முறையில் சென்றால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். தவறுகளைச் சரிக்கட்ட அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட இருமடங்கு அல்லது மூன்று மடங்கு கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் டூவீலர் லைசென்ஸ் பெற 5,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் பதவிக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இதையடுத்து புதிய வாகனங்களைப் பதிவுசெய்ய அரசின் கட்டணம் டூவீலருக்கு ரூ.300-ம், காருக்கு ரூ.600-ம், ஆட்டோ அல்லது இதர வாகனங்களுக்கு ரூ.1,000-மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட ஷோரூம்களில் இந்தக் கட்டணத்தைவிட மூன்று மடங்கு வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்தத்தொகையிலும் ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்கள், அதிகாரிகளுக்கும் பங்குள்ளது.

எந்த ஆட்சிக் காலத்தில் அதிகம் ஊழல் நடந்தது? #VikatanSurvey #EndCorruption

முகவரி மாற்றத்துக்கு ரூ.520-ம், பெயர் மாற்றத்துக்கு டூவீலருக்கு ரூ.175-ம், காருக்கு ரூ.325-ம், ஆட்டோவுக்கு ரூ.525-ம் இதர போக்குவரத்து வாகனங்களுக்கு ரூ.775-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், புரோக்கர்கள் மூலம்தான் 99 சதவிகிதம் இந்தப் பணிகள் நடக்கின்றன. இதனால் புரோக்கர்கள் கமிஷன், அதிகாரிகளின் கமிஷன் என இந்தக் கட்டணத்தைவிட 5 மடங்கு வரை கூடுதல் கட்டணம் பொதுமக்களிடம் பெறப்படுகிறது.

இதுதவிர, ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணிகளும் புரோக்கர்கள் இல்லாமல் நடைபெறுவதில்லை. போக்குவரத்துத் துறையின், 'சாரதி' என்ற இணையதளம் மூலம் புரோக்கர்கள் எளிதில் விண்ணப்பித்து காரியத்தைக் கச்சிதமாக முடித்துக்கொள்கின்றனர்.

ஆர்.டி.ஓ-அலுவலகம்
ஆர்.டி.ஓ-அலுவலகம்

இதைவிட பள்ளி வாகனங்கள், கனரக வாகனங்கள் (பஸ், லாரி சர்வீஸ்) ஆகியவற்றின் மூலம்தான் வட்டார போக்குவரத்து அலுவலங்களுக்குப் பணமழை கொட்டுகிறது. ஒவ்வொரு பள்ளி வாகனங்களுக்கும் குறிப்பிட்ட தொகை மாமூலாகக் கொடுக்கப்படுகிறது. அதுபோல பஸ், லாரி மற்றும் இதர வாகனங்களுக்கும் சம்பந்தப்பட்டவர்கள் மூலம் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கவனிக்கப்படுகின்றனர். வாகனங்களுக்கான பெர்மிட்டை ஆர்.டி.ஓ அலுவலகம் முதல் மேலிடம் வரை `வைட்டமின் சி' இல்லாமல் ஃபைல்கள் நகருவதில்லை. வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் டீலிங் பேசத் தனி புரோக்கர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலிருந்தும் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை (சில எல்கள்) அமைச்சர் தரப்பினருக்கு மாமூலாகக் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. மேலும், மாமூல் தொகை அதிகம் கிடைக்கும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பணியாற்ற கடுமையான போட்டி நிலவுகிறது. இதற்கு ஆர்.டி.ஓ. பதவிக்கு 25 எல் வரையிலும் மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கு 10 எல் வரையிலும் இடமாறுதலுக்காக வசூலிக்கப்படுகிறது. இதற்கென தனி நெட்வொர்க் செயல்படுகிறது.

பூந்தமல்லி, திருவான்மியூர், அண்ணா நகர், செங்குன்றம், கே.கே.நகர், வளசரவாக்கம், தாம்பரம், அயனாவரம், அம்பத்தூர் ஆகிய 9 ஆர்.டி.ஓ-க்களில் பணியாற்ற கடும் போட்டி நிலவுகிறது. இந்த ஆர்.டி.ஓ. அலுவலங்களில் மற்ற அலுவலகங்களைவிட அதிகளவில் வருவாய் கிடைக்கும். இதனால் இந்த அலுவலகங்களில் வழக்கமான மாமூல் தொகையைவிடக் கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது. மேலிடத்துக்குப் பணம் கொடுக்க வேண்டியதுள்ளதால்தான் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தாராளமாக லஞ்சம் தாண்டவமாடுகிறது. இதுதவிர, மாதத்தில் சில நாள்கள் வாகனச் சோதனையிலும் ஆர்.டி.ஓ-க்கள் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஈடுபடுவதுண்டு. மேலும், விபத்தில் சிக்கும் வாகனங்களை ஆய்வு நடத்தவும் அந்த ஃபைல்களில் கையெழுத்திடவும் குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எதற்கெடுத்தாலும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பணம் இல்லாமல் எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

“ இது உங்கள் சொத்து..!“ ஊழலுக்கு எதிராகப் போராடிய 'தோழர்' வடிவேலு #EndCorruption

அம்பத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேரில் சென்றோம். அப்போது, புதிய வாகனப் பதிவு மற்றும் டூவீலர், கார் டிரைவிங் லைசென்ஸ் பெற ஏராளமானவர்கள் அம்பத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் கூடியிருந்தனர். காரிலிருந்து இறங்கிய மோட்டார் வாகன ஆய்வாளருக்கு மரத்தடி நிழலில் இருக்கை கொண்டு வந்து போட்டார், புரோக்கர் ஒருவர். அதில் அமர்ந்த அந்த ஆய்வாளரின் கையில் ஃபைல்களை ஒவ்வொன்றாக எடுத்துக்கொடுத்தார், இன்னொருவர். வாகனத்தின் இன்ஜின் நம்பர், சேஸ் நம்பர் ஆகியவற்றை சத்தமாகச் சொல்ல அதை ஆய்வாளர் சரிபார்த்தார். அடுத்து, டிரைவிங் லைசென்ஸ் பெறக் காத்திருந்தவர்கள் வாகனத்தை ஓட்டிக் காட்டினர். அதனடிப்படையில் பாஸ் அல்லது பெயில் என ஆய்வாளர் டிக் அடித்தார். அதன்பிறகு மீண்டும் ஆய்வாளர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குச் சென்றார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் புரோக்கர்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தவுடன் புன்சிரிப்போடு வரவேற்கும் புரோக்கர்கள் தினமும் குறைந்தபட்சம் 5,000 ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதிப்பதாக விவரம் தெரிந்தவர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான் உள்ளது. மாவட்டத்துக்கு மாவட்டம் புரோக்கர்கள் வசூலிக்கும் கட்டணம் வித்தியாசப்படுமே தவிர, லஞ்சம் கொடுக்காமல் போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் எந்தக் காரியமும் நடப்பதில்லை.

முகவரி மாற்றத்துக்கு ரூ.520-ம், பெயர் மாற்றத்துக்கு டூவீலருக்கு ரூ.175-ம், காருக்கு ரூ.325-ம், ஆட்டோவுக்கு ரூ.525-ம் இதர போக்குவரத்து வாகனங்களுக்கு ரூ.775-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு

இதுகுறித்து பெயரைக் குறிப்பிட விரும்பாத ஆர்.டி.ஓ-க்கள் சிலர் நம்மிடம், ``ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் நீண்டகாலமாக இருந்துவருகிறது. ஆர்.டி.ஓ. அலுவலகம் என்றாலே பணமில்லாமல் எந்தக் காரியமும் நடக்காது என்ற மனநிலை மக்களிடையே உள்ளது. ஆன்-லைன் சேவையை அறிமுகப்படுத்திய பிறகு ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பணப் பரிவர்த்தனைக்கு வாய்ப்புகள் இல்லை. அதேநேரத்தில், குறிப்பிட்ட சில ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. தற்காலிக ஊழியர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளபடுகின்றன. அவர்கள்தான் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கும் புகாரில் சிக்குகின்றனர். பொதுமக்களுக்குப் போதிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தினாலும் புரோக்கர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாறுவது வாடிக்கையாக உள்ளது. ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்சம் யாராவது கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்" என்றனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் கேட்டபோது, ``குறிப்பிட்ட அரசுத் துறைகளைத் தொடர்ந்து ரகசியமாகக் கண்காணித்துவருகிறோம். அதில் போக்குவரத்துத் துறையும் ஒன்று. போக்குவரத்துத்துறை அலுவலகங்களில் எங்களுக்குக் கிடைக்கும் ஆதாரங்கள், புகார்கள் அடிப்படையில் அதிரடிச் சோதனை நடத்திவருகிறோம். புரோக்கர்கள்தான் அதிகளவில் எங்கள் சோதனையில் சிக்கிவருகின்றனர்" என்றனர்.

ஆன்-லைன் சேவையை அறிமுகப்படுத்தியபிறகு ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பணப்பரிவர்த்தனைக்கு வாய்ப்புகள் இல்லை. அதேநேரத்தில் குறிப்பிட்ட சில ஆர்.டி.ஓ அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. தற்காலிக ஊழியர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள்தான் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கும் புகாரில் சிக்குகின்றனர்.
ஆர்.டி.ஓ.

இதுகுறித்து போக்குவரத் துறை கமிஷனரைத் தொடர்பு கொண்டபோது அவர் மீட்டிங்கில் இருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். பல தடவை அவர் தொடர்பு கொண்டபோதும் அவரிடம் பேச முடியவில்லை.

டிரைவிங் ஸ்கூல் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் ‘‘ஆன்லைன் வசதி அமல்படுத்தியபிறகு, டிரைவிங் ஸ்கூல் வருமானம் குறைந்துவிட்டது. ஆனால், 'நாங்கள்தான் ஆர்.டி.ஓ. அலுவலக புரோக்கர்கள்' என்று சிலர் தவறான தகவல்களைக் கூறிவருகின்றனர். தமிழகம் முழுவதும் எங்கள் சங்கத்தில் 7,600-க்கும் மேற்பட்ட டிரைவிங் ஸ்கூல்கள் உள்ளன. கோவையில்தான் எங்களின் தலைமை அலுவலகம் உள்ளது. தற்போதுள்ள நிலைமை நீடித்தால் டிரைவிங் ஸ்கூல்களை மூடிவிட்டுச் செல்லும் நிலையில்தான் உள்ளோம்" என்றார்.