Published:Updated:

`சதவீதம் கணக்கில் கமிஷன்!’- மதுராந்தகம் ஆணையரைச் சுற்றும் `போஸ்டர்' சர்ச்சை!

வி.சி.க போஸ்டர்
வி.சி.க போஸ்டர்

ரயில் இருப்புப் பாதை அருகே பிணங்களை எரிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. மின்விளக்கு அமைக்கும் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறுகிறார்.

மதுராந்தகம் நகராட்சி ஆணையர் நாராயணன் நகராட்சிப் பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக அவருக்கு எதிராக இரவோடு இரவாகக் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அவரைப் பற்றிய குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் மதுராந்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் நாராயணன் என்பவர் ஆணையராகக் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். ``இவர் பணிக்குச் சேர்ந்தது முதல் நகராட்சியில் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. எல்லாவற்றுக்கும் மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். ஒப்பந்தப் பணிக்குச் சரியான பணம் வராததால் குப்பை தேங்கிக் கிடக்கிறது. துப்புரவுப் பணி, சாலை வசதி, தெரு மின்விளக்குகள், குடிநீர் முறையாக வழங்குவது கிடையாது, குப்பைத் தொட்டிகள் வைப்பது கிடையாது. பிளாஸ்டிக் கவர்கள் ஒழிப்பது கிடையாது. பிளாஸ்டிக் பைகள் விற்கும் கடைகளை நகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை" என அப்பகுதியினர் நீண்டநாள்களாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மதுராந்தகம் நகராட்சி
மதுராந்தகம் நகராட்சி

இந்த நிலையில் நேற்றிரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக நகராட்சிப் பகுதி முழுவதும் ஆணையர் நாராயணனுக்கு எதிராகக் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நேரத்துக்கு மக்களைச் சந்திப்பதில்லை. ஏரி, குளங்களைத் தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. ரயில் இருப்புப் பாதை அருகே பிணங்களை எரிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. மின்விளக்கு அமைக்கும் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறுகிறார். சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது” என அந்த போஸ்டரில் புகார் வாசிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுராந்தகம் ஆணையர் நாராயணனிடம் பேசினோம். ``முற்றிலும் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். வீடுகள்தோறும் மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தனித்தனியாகப் பிரித்து உரம் தயாரிக்கிறோம். காந்திநகர் சுடுகாடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் எதுவும் செய்ய முடியாது. இதன் காரணமாக பிரச்னையை வேறுவிதமாகக் கிளப்பி வருகிறார்கள். ஊர் நன்றாக இருப்பது மக்களுக்குத் தெரியும்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு