Published:Updated:

போலி இயந்திரங்கள் மூலம் சான்றிதழ்கள்... வாகனப் புகையில்கூடப் புரளும் ஊழல்! #EndCorruption

க.சுபகுணம்

இந்தப் பரிசோதனை மையங்கள், போலியாகச் சான்றுகளை வழங்குவதாகப் பல குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே வந்துள்ளன. அதை அடிப்படையாக வைத்து அதற்கு வழங்கப்படும் சான்றுகள் ஆன்லைனில் ஆய்வுசெய்து வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

வாகனங்கள் வெளியிடும் புகை அளவு அதிகமாகும்போது மக்களுக்குத் தோல் நோய்கள், சுவாசக் கோளாறு போன்றவற்றிலிருந்து புற்றுநோய் வரை பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. வாகனங்களிலிருந்து வெளியாகும் கரிம வாயுக்களால் சுற்றுச்சூழலிலும் பல சீர்கேடுகள் விளைகின்றன. இந்த நச்சுப் புகையைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தலைமைப் போக்குவரத்துத் துறை அலுவலகம்
தலைமைப் போக்குவரத்துத் துறை அலுவலகம்

நம் போக்குவரத்துத்துறை விதிகளின்படி, சாலையில் ஓடும் வாகனங்கள் அவை வெளியிடும் புகையை ஆய்வுசெய்து புகைச் சான்று (Pollution certificate) பெற வேண்டும். அந்த வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவைத் தாண்டி அதிகமான புகையை வெளியிட்டால், அவற்றுக்குச் சான்று வழங்குவது போக்குவரத்துச் சட்டப்படி குற்றம். இதை ஆய்வுசெய்து வாகனப் புகைச் சான்று வழங்கும் தனியார் மையங்கள் தமிழகம் முழுக்கப் போக்குவரத்து ஆணையர் அலுவலகக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. போக்குவரத்து ஆணையரின் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுக்கத் தனியார்களால் சுமார் 350 புகைப் பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன.

"இந்தப் பரிசோதனை மையங்கள், போலியாகச் சான்றுகளை வழங்குவதாகப் பல குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே வந்துள்ளன. அதை அடிப்படையாக வைத்து அதற்கு வழங்கப்படும் சான்றுகள் ஆன்லைனில் ஆய்வுசெய்து வழங்கப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வாகனப் புகை பரிசோதனைக் கருவி தயாரிப்பு நிறுவனமான SYS-ன் தமிழ்நாடு டீலர் ஏழுமலை, சுந்தர் ஆகியோர் போலிக் கருவிகளை விற்பனை செய்துள்ளார்கள்.

வாகனப் புகை
வாகனப் புகை

சீனத் தயாரிப்பில் உருவான வாகனப் புகை பரிசோதனை இயந்திரங்கள், வாகனப் புகையைப் பரிசோதிக்கும் போலி கணினி மென்பொருள்கள் போன்றவற்றை அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில் புழக்கத்துக்கு விட்டுள்ளனர். இவற்றை வைத்து அந்தந்த மைய உரிமையாளர்களே தேவையான அளவில் பதிவுசெய்து அனைத்து வாகனங்களுக்கும் சான்றிதழ் வழங்கியும் உள்ளனர்" என்கிறார் இதுகுறித்துப் புகார் கொடுத்தவரும் சட்டம் மற்றும் சமூக ஆர்வலருமான காசி மாயன்.

நமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 08.04.2019 மற்றும் 09.04.2019 ஆகிய இரண்டே நாள்களில் மட்டும் எஸ்.எஸ்.ஆர் என்ற வாகனப் புகை பரிசோதனை நிலையம் இந்தப் போலி எந்திரங்களையும் மென்பொருள்களையும் வைத்து 700-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குச் சான்று வழங்கியிருக்கிறார்கள். அதில் டீசல் வாகனங்கள் மட்டுமே 300-க்கும் மேற்பட்டவை.
Vikatan

அங்கீகாரம் பெறாத இயந்திரமோ, உரிமம் பெறாத பரிசோதனையாளரோ இல்லாமல் இந்தச் சான்று வழங்கப்படக் கூடாது. ஆனால், இந்த மையத்துக்கு உரிய அங்கீகாரமும் இல்லை, சான்று வழங்கியவர் உரிய பரிசோதனையாளர் உரிமம் பெற்றவரும் இல்லை. இது, மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 115 மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989 பிரிவு 116(B) ஆகிய விதிகளுக்கு விரோதமானது. சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்த அக்கறையில்லாமல் போலிச் சான்றிதழ்களை வழங்குவது இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு-420, 419, 467 மற்றும் 468-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

பூந்தமல்லியில் எஸ்.எஸ் வாகனப் புகைப் பரிசோதனை மையம் இரண்டே நாள்களில் 1,200-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குச் சான்றிதழ் வழங்கியுள்ளது. அந்த வாகனங்கள் அனைத்தும் இந்தச் சான்றிதழ்களின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தகுதிச் சான்று பெற்றுச் சாலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவை வெளியிடும் அதீத நச்சுப் புகையால் சூழலும் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது என்று இந்த விவரங்கள் தெரிந்த சில நேர்மையான அதிகாரிகள் புலம்புகின்றனர். நேர்மையாகவும் முழுமையாகவும் வாகனப் புகைப் பரிசோதனை செய்தால் நாளொன்றுக்கு அதிகபட்சம் 40 வாகனங்களுக்கு மட்டுமே சான்று வழங்கமுடியும். ஆனால், நடைமுறையில் பல மையங்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களுக்குப் போலிச் சான்றிதழ்களை வழங்கிக்கொண்டிருக்கின்றன.

வாகனப் புகை
வாகனப் புகை

சரி, இந்தப் பரிசோதனை மையங்கள் எப்படி இவ்வளவு தைரியமாகப் போலிச் சான்றிதழ்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன?

சட்டவிரோதமாகப் போலி இயந்திரங்களைத் தயாரித்து விற்கும் நிறுவனங்கள் சில போக்குவரத்து அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களின் ஆதரவோடுதான் செயல்படுகின்றன. இவை சுதந்திரமாகச் செயல்படுவதற்காகக் கீழ்மட்ட அதிகாரிகள் தொடங்கி போக்குவரத்து ஆணையர் வரைக்குமே லஞ்சம் கொடுக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றால், உண்மையாக ஆய்வுசெய்யும் பல தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்குள் வர்த்தகம் செய்ய விரும்புவதில்லை. அவர்களின் கவனம் மற்ற மாநிலங்களுக்குத் திரும்பிவிடுகிறது. இந்தப் போலி நிறுவனங்களிடம் வாங்கியவற்றை வைத்துப் போலியாகச் செயல்படும் மையங்களிடமும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அமைதியாகிவிடுவதால், பல தகுதியில்லாத வாகனங்கள் சாலையில் புகையைக் கக்கிக்கொண்டிருக்கின்றன.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு

இந்தச் சட்டவிரோத வாகனப் புகைப் பரிசோதனை நிலையங்கள் மற்றும் எந்திரத் தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர் காசிமாயன் போக்குவரத்து ஆணையருக்குப் புகார் கொடுத்துள்ளார்.

அவரிடம் பேசினோம், "வாகனப் புகை வெளியிடுவதைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகளே கையூட்டு வாங்கிக்கொண்டு இதை விட்டுவிடுகிறார்கள். போக்குவரத்து ஆணையர் உட்பட அனைவருக்குமே இந்தக் கையூட்டில் பங்குண்டு.

ஆஸ்துமா
ஆஸ்துமா

இந்தப் போலிச் சான்றிதழ் பிரச்னையை ஆதாரங்களோடு புகார் கொடுத்தோம். நான்கு மாதங்களாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகார்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தோம். அதற்கும் இதுவரை பதில் இல்லை. இது மிகவும் முக்கியமான பிரச்னை. இதனால், சுற்றுச்சூழல் மிகவும் மாசுபடுகிறது. ஆஸ்துமா போன்ற பிரச்னைகளால் பல குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்" என்று கூறினார்.

காற்று மாசுபாட்டுப் பிரச்னை நாடு முழுவதும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நாட்டின் பல தலைநகரங்களில் வாழும் மக்கள், இதனால் பல உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணமான வாகனப் புகையைக் கட்டுப்படுத்த வேண்டியது போக்குவரத்துத்துறை. அந்தத் துறையில் இதுபோல் மலிந்துகிடக்கும் ஊழல் மக்களுக்கு மேன்மேலும் பிரச்னையை உண்டாக்குமே தவிர, வேறு எதையும் கொண்டுவராது.

போக்குவரத்துத் துறை
போக்குவரத்துத் துறை

தமிழக அரசு உடனடியாக இதில் நடவடிக்கை எடுத்து, போக்குவரத்துத் துறையிலுள்ள ஊழலைச் சரிசெய்ய வேண்டும். இல்லையேல், இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இது குறித்து விளக்கம் பெறப் போக்குவரத்து ஆணையரைச் சந்திக்கப் பலமுறை முயன்றோம். ஆனால், அவரைச் சந்திக்க இயலவில்லை. இந்த ஊழல் புகார் குறித்து அரசுத் தரப்பு விளக்கங்கள் ஏதேனும் இருப்பின் அதைப் பிரசுரிக்கவும் தயாராக உள்ளோம்.