Published:Updated:

`ஒரு ரேஷன் கடைக்கு மாதம் ரூ.1000 மாமூல்!'' - இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார்

நீலகிரி மாவட்டம் ஊட்டி வட்டார வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத பணம் ரூ.30,845 கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 Santhini
Santhini

ரேஷன் கடைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்மார்ட் கார்டு முறை பயன்பாட்டில் உள்ளது. மக்கள் குடிமைப் பொருள்களை வாங்கும்போது எந்திரம் மூலம் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு மாத இறுதியில் அந்தந்த வட்டார வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பித்து மாதப் பட்டியல் அளிக்கப்படும். இந்தநிலையில் ஊட்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் கடந்த மாதத்தின் பட்டியல் நேற்று வழங்கப்பட்டது. இப்படி சோதனைக்கு எந்திரங்களுடன் வந்த ரேஷன் கடை ஊழியர்களிடம் ஊட்டி வட்டார வழங்கல் அலுவலர் சாந்தினி ரூ.500 லஞ்சமாகப் பெற்றதாகத் தெரிகிறது. கடந்த ஓராண்டாகவே ஒவ்வொரு மாதமும் இதே சம்பவம் நடைபெற்றுள்ளது.

Ooty Taluk Supply Office
Ooty Taluk Supply Office

இதை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் மேற்கொண்டனர்.தொடர் சோதனை மற்றும் விசாரணையில் கணக்கில் வராத ரூ.30,845 கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, சிறப்பு தாசில்தார் சாந்தினி மற்றும் லஞ்சம் வாங்க உதவியாக இருந்த தியாகு மற்றும் பாலாஜி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

`லஞ்சம் கொடுக்க முடியல; 6 மாதம் வட்டாட்சியராக நியமியுங்கள்!' -ஆட்சியரை அதிரவைத்த இளைஞர்

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஊட்டி வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 113 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகளில் உள்ள எந்திரங்களைக் காண்பித்து மாதப் பட்டியல் வழங்க 52 ரேஷன் கடை ஊழியர்கள் வந்திருந்தனர். சோதனைக்கு வரும் விற்பனையாளர்களிடம் மாதம்தோறும் ரூ.500 லஞ்சம் பெற்றுள்ளார் அலுவலர் சாந்தினி.

Taluk office Ooty
Taluk office Ooty

இவருக்கு லஞ்சம் வாங்க உதவியாக இருந்து இடைத்தரகர்களாக செயல்பட்ட தியாகு மற்றும் பாலாஜி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தோம்" என்றார்.

இது தொடர்பாக ஊட்டி வட்டத்துக்கு உட்பட்ட ரேஷன் கடை ஊழியர் ஒருவரிடம் பேசினோம்,``கடந்த பல மாதங்களாக இப்படி நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் மாதப் பட்டியல் வழங்கும்போது ஒரு கடைக்கு ரூ.500 கட்டாயம் வழங்க வேண்டும் அதே போல் ரேஷன் கடைக்கு விசிட் வருவார்கள். அப்போது ரூ.500 வழங்க வேண்டும். மொத்தம் மாதம் ரூ.1,000 வழங்க வற்புறுத்துகின்றனர்" என்றார்.