Published:Updated:

கால்நடை துறையில் கல்லாகட்டும் புரோக்கர்கள்! - அதிரவைக்கும் ஆடியோ

கால்நடை துறை
பிரீமியம் ஸ்டோரி
கால்நடை துறை

கடந்த 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க ஆட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையில் உதவி மருத்துவர்கள் நியமனம் செய்ததில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளன

கால்நடை துறையில் கல்லாகட்டும் புரோக்கர்கள்! - அதிரவைக்கும் ஆடியோ

கடந்த 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க ஆட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையில் உதவி மருத்துவர்கள் நியமனம் செய்ததில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளன

Published:Updated:
கால்நடை துறை
பிரீமியம் ஸ்டோரி
கால்நடை துறை

‘‘ஈரோட்லருந்து வெட்னரி டாக்டர் பேசுறேன். 1,141 வெட்னரி போஸ்ட்டிங்குக்காக வேண்டி மகேஷ் அண்ணன்கூட சென்னையில பார்த்து நாலு லட்சம் கொடுத்திருந்தேனே...’’

‘‘ஆமா சொல்லுங்க...’’

‘‘போஸ்ட்டிங் அப்பாயின்மென்ட் ஸ்டே இருக்குறதா சொல்றாங்க. எலெக்‌ஷன் தேதி வேற இந்த மாசக் கடைசியில் அறிவிப்பாங்களாம். போஸ்ட்டிங் கன்ஃபார்மா போட்டுருவாங்களா?’’

‘‘அதைப் பத்திக் கவலைப்படவே வேணாம். மேல் மட்டத்துல பேசி எல்லாம் ரெடி பண்ணியாச்சு. இதையெல்லாம் போன்ல பேசிக்கிட்டு இருக்க முடியாது. அம்மா பிறந்தநாள் அன்னிக்கு சி.எம் கையால அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுக்க ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீங்க மட்டுமில்லை... என் மூலமா 22 டாக்டர்களுக்குப் பணம் வாங்கிக் கொடுத்திருக்கேன்.’’


- சமீப நாள்களாக இப்படியொரு ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக வலம்வரவே, அது குறித்து விசாரித்தோம்.

கடந்த பிப்ரவரி மாதத்தில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 1,141 உதவி மருத்துவர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இதற்காக லட்சக்கணக்கில் லஞ்சத்தொகை நிர்ணயிக்கப்பட்டு, புரோக்கர்கள் பலரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கும்வரை காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் ‘வெட்ட வேண்டியதை வெட்டியும் வெட்னரி போஸ்டிங் கிடைக்கலையே!’ என்று பதற்றமடைந்த, பணம் கொடுத்த டாக்டர் ஒருவர் புரோக்கரிடம் பேசியதுதான் அந்த ஆடியோ.

பாலாஜி - உடுமலை ராதாகிருஷ்ணன் - அனிதா ராதாகிருஷ்ணன்
பாலாஜி - உடுமலை ராதாகிருஷ்ணன் - அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு மாணவர் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் மருத்துவர் பாலாஜி, இந்த ஊழல் தொடர்பாகச் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘கடந்த 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க ஆட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையில் உதவி மருத்துவர்கள் நியமனம் செய்ததில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளன. 2012-ம் ஆண்டு விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகள் வழங்கும் திட்டத்துக்காக 787 உதவி மருத்துவர்களை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்தார்கள். ஆனால், அதற்கான அறிவிப்பே வெளியிடப்படவில்லை. அதை எதிர்த்து பலரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள்.

அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே 2014-ம் ஆண்டு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்த 110 பேரை பணி நியமனம் செய்தார்கள். இதை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தார்கள். இந்தநிலையில், 787 உதவி மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த நியமனத்தை ரத்துசெய்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே, தொகுப்பூதிய அடிப்படையில் 818 உதவி மருத்துவர்களை நியமித்தார்கள். இப்படிப் பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, சர்ச்சைக்குரிய வகையில் நியமிக்கப்பட்ட அனைவரும் தொடர்ந்து பணியாற்றினார்கள்.

ஏற்கெனவே இவ்வளவு குளறுபடிகள் இருக்கும் நிலையில், ஆட்சி முடியும் நேரம் எனத் தெரிந்தும், கடந்த பிப்ரவரி மாதம் 1,141 காலிப் பணியிடங்களுக்கு அ.தி.மு.க அரசு தேர்வு நடத்தியது. அத்துடன், வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி பலரிடமும் 4 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டையும் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், பணி நியமனம் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், 1,141 பேரும் இதுவரை பணிக்கு அமர்த்தப்படவில்லை.

கால்நடை துறையில் கல்லாகட்டும் புரோக்கர்கள்! - அதிரவைக்கும் ஆடியோ

தற்போது அமைந்திருக்கும் புதிய அரசு, மேற்கண்ட ஆடியோ ஆதாரத்தைவைத்து விசாரணை செய்து, மோசடிக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான விசாரணையை அறிவித்தாலே பணம் கொடுத்த பலரும் புகார் கொடுக்க முன்வருவார்கள்’’ என்றார்.

கால்நடை பராமரிப்புத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ‘‘இந்த வசூல் வேட்டைக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் ‘சுபிட்ச’மான பெண் ஊழியர் ஒருவர்தான் காரணகர்த்தா. ஓராண்டுக்கு முன்புதான் இவர் இந்தத் துறையில் நியமிக்கப்பட்டார். துறையின் வி.ஐ.பி-யுடன் தனக்கிருக்கும் பழக்கத்தைப் பயன்படுத்தி அதிகார மையமாகிவிட்டார். சரவணன், தணிகைவேல், செல்வம் என இடைத்தரகர்களைக் கையில் வைத்துக்கொண்டு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடமும் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்திருக்கிறார்’’ என்றார்கள்.

முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, ‘‘கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக நியமிக்கப்பட்ட உதவி மருத்துவர்கள் நியமனத்தில் எந்தக் குளறுபடியும் இல்லை. தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு அரசு தேர்வு நடத்தியிருக்கிறது. அப்படி இருக்கும்போது எப்படிப் பணம் பெற்றிருக்க முடியும்? இது காழ்ப்புணர்ச்சியின் காரணமாகக் கூறும் பொய்யான தகவல்’’ என்றார்.

கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘இது சம்பந்தமான தகவல்கள் என் கவனத்துக்கும் வந்து கொண்டிருக்கின்றன. துறைரீதியாக முழுமையாக ஆய்வுகள் செய்து, தவறு இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார் சீரீயஸாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism