Published:Updated:

ஊழல் இருக்கு... ஆனா இல்லை! விகடன் சர்வேயில் மக்களின் பதில் #EndCorruption

#EndCorruption
#EndCorruption

178 நாடுகளுக்கிடையே 2018-ல் எடுக்கப்பட்ட ஆராய்ச்சியின்படி இந்தியா ஊழலில் 78-வது இடத்தில் இருக்கிறது. ஒலிம்பிக்கில் முந்துகிறார்களோ, இல்லையோ ஊழலில் சீனா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளை முந்தியிருக்கிறார்கள் இந்தியர்கள்.

ஊழல் என்பது அரசியல்வாதிகள் மட்டும் வாங்குவதில்லை; கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் கொடுப்பதில்லை. நம் ஒவ்வொரு வீட்டிலும் LPG கேஸ் முதல் ஆட்டோ மீட்டர் வரை லஞ்சம் பரவிக்கொண்டே இருக்கிறது.

#End Corruption
#End Corruption
Image by OpenClipart-Vectors from Pixabay

கம்பவுண்டரோ, கலெக்ட்டரோ லஞ்சம் என்பது ஊழல் செய்ய அதிகாரம் படைத்தவருக்கு நாம் தரும் உரிமை. இது சாதாரண பிரச்னை இல்லை. ஒருவர் கொடுக்கும் சிறு 50 ரூபாய் லஞ்சம், மற்றொருவரின் கல்விக்குத் தடை போடுகிறது; நல்ல மருத்துவத்தைத் துண்டிக்கிறது; சில நேரங்களில் சிலரின் உயிரைக்கூடப் பறிக்கிறது.

ஊழலை ஒழிக்க என்ன வழி எனச் சில பொது இடங்களில் நூற்றுக்கும் அதிகமான மக்களைச் சந்தித்து கேட்டோம். 50 விதமான பதில்கள் கிடைத்திருக்கலாம். ஆனால், கிடைத்தது என்னவோ 5 பதில்கள்தான். 75 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் கீழே இருக்கும் இந்த 5 பதில்களில் ஏதோ ஒன்றைத்தான் சொல்கிறார்கள்.

உலக ஊழல் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? #EndCorruption

''ஊழலை வளர்த்ததே மக்கள்தான். அவர்கள்தான் திருந்த வேண்டும். லஞ்சம் கொடுப்பதை நிறுத்திவிட்டால் போதும். எல்லாமே சரியாகிவிடும்.''

''ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் லஞ்சம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு அவரவர் படிப்புக்குத் தகுந்த சரியான வேலையைக் கொடுக்க வேண்டும். அப்படிக் கிடைத்தால் ஊழலுடன் சேர்ந்து நாட்டில் பெரும்பாலான பிரச்னை தீர்ந்துவிடும்.''

''மனிதாபிமானம் இருந்தால் ஊழல் தானாகவே ஒழிந்துவிடும்.''

''அரசு அதிகாரிகள் சுத்தமாக இருந்தாலே ஊழல் ஒழிந்துவிடும்.''

''ஊழலை ஒழிக்கவே முடியாது. பிறப்புச் சான்றிதழிலிருந்து இறப்புச் சான்றிதழ் வரைக்கும் ஊழல் இருக்கிறது. அதைக் கண்டிப்பாக ஒழிக்கவே முடியாது.''

முதல் கேள்வியிலேயே இங்கே ஊழல் இருப்பதாக 100 சதவிகிதம் மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இரண்டாம் கேள்வியாக "உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டிருக்கிறார்களா, நீங்கள் யாருக்காவது லஞ்சம் கொடுத்திருக்கிறீர்களா" எனக் கேட்டதற்கு, 75 சதவிகிதம் பேர் எங்களிடம் யாருமே லஞ்சம் கேட்டதில்லை என்றும், ''நான் இதுவரை லஞ்சம் கொடுத்ததே இல்லை'' என்றும் கூறினார்கள்.

#EndCorruption
#EndCorruption

யாரிடமும் லஞ்சம் கேட்கவில்லை, அப்படியென்றால், லஞ்சம் கேட்பவர் யார்? யாரும் லஞ்சம் கொடுப்பதில்லை என்றால், லஞ்சம் கொடுப்பவர் யார்?

ஊழல் இருக்கிறது என ஒப்புக்கொள்ளும் மக்கள் ஏன் லஞ்சம் கேட்பதையும், லஞ்சம் கொடுப்பதையும் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள் என மனநல ஆலோசகர் மற்றும் மருத்துவர் அசோகனிடம் கேட்டோம்.

மனநல மருத்துவர் அசோகன்
மனநல மருத்துவர் அசோகன்

"இது ரொம்பவே இயல்பான விஷயம். ஒரு நடிகர் அல்லது இயக்குநர் படத்தில் பேசும் அரசியலை நேரில் பேசுவதில்லை. அதேபோலத்தான் இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லோருக்குமே எதிர்க்கும் மனநிலை இருக்கிறது. ஆனால், அது நமக்கு எந்தப் பாதிப்பையும் தந்துவிடக் கூடாது என்று ஒரு எச்சரிக்கை உணர்வும் உள்ளது. அதோடு, தங்களின் மீது எழும் விமர்சனங்களையும் கேள்விகளையும் நினைத்துப் பயப்படுகிறார்கள். யாரும் பொய் சொல்லவில்லை. ஆனால், உண்மையை மறைக்கிறார்கள்.

மற்றவர்கள் மீது விமர்சனம் வைக்கும்போது தாங்கள் செய்த ஏதோ ஒரு தவறு நினைவுக்கு வருவதால் இந்த எச்சரிக்கை உணர்வு வந்துவிடுகிறது.
மனநல மருத்துவர் அசோகன்

ஊழல் என்றால் எங்கோ நடக்கும் சம்பவம் இல்லை. ஒவ்வொரு நாளும் நம் வீட்டில், நம் அலுவலகங்களில் நடைபெறுவதுதான். ஒருவருக்குச் சிபாரிசுமூலம் வேலைகொடுக்கும்போது அங்கு தகுதியான இன்னொருவரின் வேலை பறிக்கப்படுகிறது. ஒரு கல்வி நிலையத்தில் நாம் கொடுக்கும் அதிக கட்டணம், இலவச கழிப்பிடத்துக்குக் கட்டணம் கட்டிச் செல்வது, அரசு நிர்ணயித்த பார்க்கிங் கட்டணத்தைவிட அதிக கட்டணம் செலுத்துவது என எல்லாவற்றையும் ஊழல் கணக்குகளில்தான் சேர்க்க வேண்டும். வலுவான எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் இதை எதிர்க்கிறார்கள்; இல்லாதவர்கள், பொறுத்துக்கொள்கிறார்கள்.''

'நான் லஞ்சம் கொடுக்கிறேன்' என உண்மைகளை உடைத்துப்பேசுவதுதான் ஊழலுக்கு எதிரான முதல் குரலாக இருக்கும்.
அடுத்த கட்டுரைக்கு