அரசியல்
சமூகம்
Published:Updated:

ஊழல்மயமான டெங்கு ஒழிப்பு... பங்கு போட்ட அதிகாரிகள் செழிப்பு!

நகராட்சி அலுவலகம், நாமக்கல்
பிரீமியம் ஸ்டோரி
News
நகராட்சி அலுவலகம், நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணியில் நான்கு வருடங்களில் 20 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது என்று சென்னை நகராட்சி தீர்ப்பாயத்தில் புகார் அளித்துள்ளார் நாமக்கல் மாவட்ட சி.ஐ.டி.யூ பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் சண்முகம்.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைத்து நகராட்சிகளிலும் தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளின் நீர்த்தொட்டிகளில் டெங்கு கொசுக்களை உற்பத்திசெய்யும் லார்வாக்களை அழித்தல், தண்ணீர் தேங்காமல் பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.

இந்தத் திட்டத்தின்படி குமாரபாளையம் நகராட்சியில் ரூ.250 தினக்கூலி அடிப்படையில் ஐம்பது பேர் தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தத் தற்காலிகப் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டில்தான் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஊழல்மயமான டெங்கு ஒழிப்பு... 
பங்கு போட்ட அதிகாரிகள் செழிப்பு!

இதுகுறித்து சண்முகத்திடம் பேசினோம். ‘‘டெங்கு ஒழிப்புப் பணியில் ஐம்பது பேர் ஈடுபட்டிருப்பதாகக் கூறினாலும் அதில் 10 தொழிலாளர்களின் பெயர்கள் போலியாகச் சேர்க்கப்பட்டு, வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போலிக் கணக்குகள் மூலம் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 20 லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளனர். இந்தப் பணம் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் பலருக்கும் பங்கு போடப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளரின் நடவடிக்கைகள், நகராட்சி ஊழியர்களின் பதிவேடுகள் ஆகியவற்றைச் சோதனை செய்தாலே முறைகேடு நடந்தது நிரூபணம் ஆகும்’’ என்றார்.

தமிழ்நாடு நகராட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தின் நடுவரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சோ.அய்யர் தலைமையில் தற்போது இந்த விவகாரம் விசாரணைக்கு வந்துள்ளது. இந்தப் புகார் குறித்து குமாரபாளையம் நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் விளக்கமும் பெறப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பான விசாரணை நடைபெற்றுவரும்போதே, நகராட்சியில் வேலைசெய்யும் நகராட்சி ஆய்வாளர், சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர் விடுப்பில் செல்ல மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

சண்முகம்
சண்முகம்

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கிர் பாட்ஷாவிடம் கேட்டபோது, ‘‘குமாரபாளையம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணியில் முறைகேடு எதுவும் நிகழவில்லை. சுகாதாரத் துறையில் உள்ள சில அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகள் காரணமாக, இந்த விஷயம் பூதாகரமாக ஆக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

ஒழிக்கப்பட வேண்டியவை டெங்கு கொசுக்கள் மட்டுமல்ல... ஊழல் பெருச்சாளிகளும்தான்!