Published:Updated:

சேலம்: `ரூ.3.2 லட்சம், 34 தங்கக் காசுகள்!’ - ரெய்டில் சிக்கிய பத்திரப்பதிவு டி.ஐ.ஜி ஆனந்த்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டி.ஐ.ஜி ஆனந்த்
டி.ஐ.ஜி ஆனந்த் ( எம். விஜயகுமார் )

பிரிவு உபசார விழாவில் அதிகாரிகளிடம் டி.ஐ.ஜி ஆனந்த், பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், `லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை வழங்கக் கூடாது?’ என்று ஆவேசமாகக் குரல் கொடுத்திருக்கும் நேரத்தில், சேலம் பத்திரப் பதிவுத்துறை டி.ஐ.ஜி ஆனந்த் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியிருக்கிறார். சேலம் பத்திரப் பதிவுத்துறையின் டி.ஐ.ஜி-யாக இருந்தவர் ஆனந்த். இவர் சென்னையைப் பூர்வீகமாகக்கொண்டவர். சேலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றிவந்தார். சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள பத்திரப் பதிவு அலுவலகங்கள் இவருடைய கட்டுப்பாட்டில் இருந்தன.

ஆனந்த்
ஆனந்த்

இவருக்குப் பத்திரப் பதிவு அதிகாரிகள் மாதம்தோறும் கட்டாயமாகக் கையூட்டு கொடுக்க வேண்டும் என்றும், ஆத்தூரைச் சேர்ந்த பெண் பத்திரப் பதிவு அதிகாரி ஒருவருக்குத் தொடர்ந்து இவர் பாலியல் தொல்லை கொடுத்துவருவதாகவும் கடந்த வருடம் ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்த விவகாரம் பரபரப்பான நிலையில், அப்போது அந்தப் பெண் பத்திரப் பதிவு அதிகாரி அதை மறுக்கவே விவகாரம் சைலன்ட்டானது.

`இனி லஞ்சம் வாங்க மாட்டேன்; ஒருமுறை மன்னிச்சு விட்டுடுங்க!’ - கதறிய அதிகாரி

இந்தநிலையில் ஆனந்த், கடந்த 28-ம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து ஆனந்த் வசித்துவரும் சேலம், அழகாபுரம் வீட்டில் கடந்த 30-ம் தேதி அவருக்குப் பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதில், பத்திரப் பதிவு அலுவலர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் கலந்துகொண்டு கட்டாயம் அன்பளிப்பு வழங்க வேண்டுமென்று வற்புறுத்தியதாகச் சொல்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து பத்திரப் பதிவு அதிகாரிகள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு பணம், தங்கக்காசுகள், விலையுயர்ந்த அன்பளிப்புப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினார்கள். இது குறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி சந்திரமௌலிக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து அவருடைய தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆனந்த் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

ஆனந்தின் வீடு
ஆனந்தின் வீடு

பத்திரப் பதிவு அதிகாரிகள் அவரிடமிருந்து 3.2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், 13 லட்சம் மதிப்புள்ள 34 பவுன் தங்கக்காசுகளையும் கைப்பற்றினார்கள். பிறகு, ஆனந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெயரில் சென்னை, சேலத்தில் பல நூறு கோடி மதிப்புடைய அசையா சொத்துகளின் ஆவணங்களையும் போலீஸார் கைப்பற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், `அவருடைய வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கின்றன’ என்கிறார்கள்.

இது பற்றி பத்திரப் பதிவுத்துறையின் டி.ஐ.ஜி ஆனந்திடம் கேட்டதற்கு, ``நான் எந்த பதிலும் சொல்ல விரும்பவில்லை என்பதை மட்டும் எழுதிக்கொள்ளுங்கள்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு