Published:Updated:

` போலி பில்; 450 கோடி முறைகேடு!' - ஜி.எஸ்.டி மோசடியில் சிக்கிய ஈரோடு தொழிலதிபர்

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்நிறுவனம் 1,000 கோடிக்கும் மேலான அரசின் திட்டங்களை கையிலெடுத்து செய்து வந்திருக்கிறது.

Annai Infra Developers MD
Annai Infra Developers MD

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ‘அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் லிமிடெட்' என்னும் நிறுவனம். 2008-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தண்ணீர் விநியோகம், சாலைகள் அமைத்தல், நீர்த் தேக்கங்கள் கட்டுதல், வடிகால் அமைப்புகளை உருவாக்குதல் போன்ற கட்டுமானப் பணிகளைச் செய்து வந்துள்ளது.

அன்னை இன்ஃப்ரா நிறுவனத்தின் கட்டுமானம்
அன்னை இன்ஃப்ரா நிறுவனத்தின் கட்டுமானம்

தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா எனத் தென்னிந்திய மாநிலங்கள் முழுக்க, அரசின் ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்து வந்தது. இந்நிலையில், இந்நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் நேற்று ஜி.எஸ்.டி புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் செய்யாத வேலைகளுக்காக போலி ரசீதுகளை உருவாக்கி, இந்நிறுவனம் மோசடி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. ரூ.450 கோடி அளவுக்கு நடந்த ஜி.எஸ்.டி மோசடியால், ‘அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சுப்பிரமணியம் அசோக்குமாரை, ஜி.எஸ்.டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ஜி.எஸ்.டி புலனாய்வு பிரிவினரின் பத்திரிகை செய்தி
ஜி.எஸ்.டி புலனாய்வு பிரிவினரின் பத்திரிகை செய்தி

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்நிறுவனம் 1,000 கோடிக்கும் மேலான அரசின் திட்டங்களைக் கையில் எடுத்து செய்து வந்திருக்கிறது. அதுபோக, தண்ணீர் விநியோகம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு என அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்படும் 10 லட்சம் கோடியில், ஒரு சதவிகித ஆர்டரைப் பெற்றாலே 10,000 கோடி கிடைத்துவிடும் என்ற நோக்கத்தில் இந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் செயல்பட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ‘அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சுப்பிரமணியம் அசோக்குமார், பெருந்துறை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.பெரியசாமியின் உறவினர் என்று சொல்லப்படுகிறது.