Published:Updated:

`ரூ.1.50 லட்சம் லோனுக்கு இருபதாயிரம் ரூபாய் லஞ்சம்!' - குமுறும் விவசாயி

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

கூட்டுறவு வங்கியில் ரூ.1.50 லட்ச ரூபாய் லோன் கேட்ட விவசாயியிடம் அதிகாரிகள் தரப்பில் ரூ.20,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

விவசாயி சின்னச்சாமி
விவசாயி சின்னச்சாமி

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், விவசாயக் கடன் பெறுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக தேனி மாவட்ட கலெக்டரிடம் பரபரப்பு புகார் கூறினார் விவசாயி ஒருவர்.

தேனி ஆட்சியர் அலுவலகம்
தேனி ஆட்சியர் அலுவலகம்

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னச்சாமி. இவர், தனது நிலத்தில் திராட்சை மற்றும் வாழை பயிர் செய்துவருகிறார். இந்த நிலையில், தனது விவசாய நிலத்துக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் உரம் வாங்குவதற்காக ராயப்பன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 1.50 லட்ச ரூபாய் லோன் கேட்டுள்ளார். அதை கொடுப்பதற்கு 20,000 ரூபாயை அதிகாரிகள் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவசாயி சின்னச்சாமி, ``என்னுடைய நிலத்தில் உள்ள பயிர்களைக் காப்பாற்ற, ராயப்பன்பட்டியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்தேன். `20,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் லோன் கிடைக்கும்' என்றார்கள். `நானே சிறிய விவசாயி. நிலத்துக்கு செலவு செய்ய முடியாமல் தான் லோன் கேட்கிறேன்’ என அவர்களிடம் கூறினேன். `அதெல்லாம் தெரியாது. பணம் வேண்டும்' என்றார்கள். நான் `கொடுக்க முடியாது' என்றேன். இப்போதுவரை அலைக்கழிப்பு செய்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.

திராட்சை தோட்டம்
திராட்சை தோட்டம்

சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ``தேர்தல் நேரத்தில் லோன் கேட்டு வந்தார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக லோன் கொடுக்க முடியாது எனக் கூறினோம். இதுதான் நடந்தது. அவரிடம் லஞ்சம் ஏதும் கேட்கவில்லை” என்றனர்.