Published:Updated:

அப்ரூவராக மாறினார் இந்திராணி!- கார்த்தி சிதம்பரத்துக்கு புதிய சிக்கல்

எம்.குமரேசன்

கார்த்தி சிதம்பரத்துக்கு சிக்கல் அதிகரித்துள்ளதால், குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்திராணி
இந்திராணி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக இந்திராணி மாறியுள்ளார். இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்துக்குப் பிடி இறுகியுள்ளது. தற்போது மகள் ஷீரா பேராவைக் கொலை செய்த வழக்கில் இந்திராணி, அவரின் கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பீட்டர் முகர்ஜியும் இந்திராணியும் சேர்ந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்துக்கு ரூ.4 கோடி மதிப்பில் வெளிநாட்டு நிதி திரட்ட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ரூ.310 கோடி வரை வெளிநாட்டு நிதி திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கார்த்தி, இந்திராணி
கார்த்தி, இந்திராணி

அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி நடத்திய நிறுவனம் ரூ.10 லட்சம் வாங்கிக் கொண்டு இவ்வளவு பெரிய தொகையை நிதியாக திரட்டித் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ என இரு அமைப்புகளுமே இந்த வழக்கை தனியாக விசாரித்து வருகின்றன.

இந்த நிலையில், மும்பை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்திராணி தாக்கல் செய்த மனுவில், தான் அப்ரூவராக மாற விரும்புவதாக கூறியுள்ளார். சி.பி.ஐ-யிடம் நீதிமன்றம் கருத்து கேட்டபோது, இந்திராணி அப்ரூவராக மாற எந்தத் தடையுமில்லை என்று பதிலளித்துள்ளது. தொடர்ந்து, மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி வரும் 11-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திராணி அப்ரூவராக மாறியுள்ளதால் கார்த்தி சிதம்பரத்துக்குச் சிக்கல் அதிகரித்துள்ளது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

இந்த வழக்கில் கடந்த ஆண்டு கார்த்தி கைது செய்யப்பட்டார். ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு நிதி திரட்டிய வகையில் கார்த்தி நடத்தி வரும் நிறுவனங்கள் ரூ.3.5 கோடி வரை நிதி ஆதாயம் அடைந்ததாக சி.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.