Published:Updated:

டிஎன்பிஎஸ்சி முறைகேடு... `திமிங்கிலங்களைக்’ காப்பாற்றுகிறதா அரசு?

அமைச்சர் ஜெயக்குமார்
News
அமைச்சர் ஜெயக்குமார்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடந்துள்ள முறைகேடு தமிழகத்தையே உலுக்கியிருக்கும் நிலையில், மேலிடத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற முயற்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்ததாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 99 தேர்வர்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் மட்டுமல்லாமல், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட சிலரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்

இந்த விவகாரம் தமிழக அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரான ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின். மேலும், “டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் திமிங்கிலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளைப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள்” என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மேலும், “ஏதோ ஒரு சிறிய ரெக்கார்டு கிளர்க் மூலம் இந்த இமாலயத் தேர்வு முறைகேடு நடந்துவிட்டதாக மூடிமறைக்காமல், எத்தனை தேர்வுகளில் இவ்வாறு முறைகேடு நடந்துள்ளது என்பதை விசாரிக்க வேண்டும். குரூப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதேபோல, வேறு பல கட்சிகளும் 'டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்' என்று அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “இதற்கு சிபிஐ விசாரணை தேவையில்லை. ஓரிரு தேர்வு மையங்களில்தான் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்ய முடியாது. அப்படி ரத்துசெய்தால், தற்போது தேர்ச்சிபெற்றுள்ள தேர்வர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு பல குற்றச்சாட்டுகள் டிஎன்பிஎஸ்சி மீது எழுந்துள்ளன. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட உயர்ந்த பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப் 1, குரூப் 2 தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஏற்கெனவே புகார்கள் உள்ளன.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இந்நிலையில், “டிஎன்பிஎஸ்சி அமைப்பை ஒட்டுமொத்தமாகக் குற்றம் சாட்டிவிட முடியாது. அந்த அமைப்பின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கக்கூடாது” என்று டிஎன்பிஎஸ்சி -க்கு நற்சான்றிதழ் அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இதனால், இந்த முறைகேடு குறித்து மாநில போலீஸாரின் விசாரணை எந்தப் பாதையில் பயணிக்கும் என்பதை இப்போதே யூகிக்க முடிகிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேட்டை, இந்தியாவையே உலுக்கிய வியாபம் முறைகேட்டுடன் பலரும் இப்போது ஒப்பிடுகிறார்கள். ‘வியாபம்’ என்பது மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பணிகளுக்கு அலுவலர்களைத் தேர்வு செய்கிற அமைப்பு. அங்கு, 2008 முதல் 2018 வரை நடைபெற்ற பா.ஜ.க ஆட்சியின்போது, உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றதிலும் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டதிலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் ஊழலும் நடைபெற்றன.

டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார்
டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார்

வியாபம் நடத்திய போட்டித் தேர்வுகளின் மூலமாக முறைகேடான வழிகளில் அரசுப் பணிகளுக்கு ஏராளமானோர் நியமிக்கப்பட்டனர். அந்த மாநிலத்தின் அன்றைய ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் தொடங்கி, அதிகார உச்சத்தில் இருந்த பலரும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், ரூ.20,000 கோடி அளவுக்கு லஞ்சம் விளையாடியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆள்மாறாட்டம் செய்தவர்கள், இடைத்தரகர்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

முன்னாள் கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா, ஐபிஎஸ் அதிகாரி ஆர்.கே.ஷிவாரே, ஜெகதீஷ் சாகர், டாக்டர் வினோத் பண்டாரி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். சிபிஐ வசம் போன பிறகுதான், முழுமையான விசாரணை நடைபெற்று குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

வியாபம் முறைகேடும் ஆரம்பத்தில் ஒரு சிறிய அளவிலான முறைகேடு போலத்தான் பேசப்பட்டது. பிறகு, மிகப்பெரிய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தபோது, தேசமே அதிர்ந்துபோனது. தற்போது, டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேட்டை தமிழக ஆட்சியாளர்கள் சாதாரண ஒன்றாகப் பார்ப்பதுபோல தெரிகிறது. ஆகவேதான், டிஎன்பிஎஸ்சி-யில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆசிர்வாதம் இல்லாமல் இவ்வளவு பெரிய முறைகேடு நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று எதிர்க்கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் விமர்சிக்கின்றனர். அப்படி மேலிடத்தில் இருப்பவர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை தமிழக ஆட்சியாளர்கள் எடுத்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.