Election bannerElection banner
Published:Updated:

வேலூர்: `8 கணினி ஆபரேட்டர்கள் டிஸ்மிஸ்!’ - கிசான் திட்ட முறைகேட்டில் அதிரடி

விவசாயி - கிசான்
விவசாயி - கிசான்

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக, வேலூர் மாவட்டத்தில் எட்டு கணினி ஆபரேட்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில், விவசாயிகள் அல்லாத பல ஆயிரக்கணக்கானோர் போலியாக சேர்க்கப்பட்டு நிதி உதவி பெற்றிருக்கிறார்கள். இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி போலீஸார் தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், நிதி உதவி பெற்ற 13,000 பயனாளிகளில் ஏராளமானோர் வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

வேலூர்
வேலூர்

இதையடுத்து, மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு வட்டாரங்களுக்கும் சப்-கலெக்டர் தலைமையில் ஏழு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த குழுக்கள் பலகட்ட ஆய்வுகளை நடத்திவருகின்றன. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை அடுத்த கணியூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

இவர், சோளிங்கர் ஒன்றிய வேளாண் வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக, தற்காலிகப் பணியில் இருந்திருக்கிறார். கிசான் திட்ட மோசடியில் சுப்பிரமணிக்கு பங்கு இருப்பதால், சி.பி.சி.ஐ.டி போலீஸார் அவரைக் கைதுசெய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விவசாயி
விவசாயி

அதேபோல், தனிக்குழுக்கள் நடத்திய விசாரணையில் ஏழு வட்டாரங்களில் பணிபுரிந்துவரும் மேலும் எட்டு கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, எட்டு கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களையும் பணிநீக்கம் செய்து வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இவர்கள் யாரும் வெளியூர்களுக்கு செல்லக் கூடாது. விசாரணைக்கு அழைக்கும்போது கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு