Published:Updated:

` ஒரு டாஸ்மாக் கடைக்கு 1,000 ரூபாய்!' - தீபாவளி வசூலால் சிக்கிய மதுரை கலால் ஏ.சி

தீபாவளி நெருங்கும் நேரத்தில்தான் லஞ்ச ஒழிப்புத்துறை என்ற ஒன்று இருப்பதே வெளியே தெரியவருகிறது. திமிங்கிலங்களை விட்டுவிட்டு குட்டி மீன்களை மட்டும் கண்காணிக்கிறார்கள் என்ற புகாரும் சொல்லப்படுகிறது.

மாரிமுத்து
மாரிமுத்து

தீபாவளி வசூலில் தீவிரமாக இறங்கிய கலால்துறை உதவி கமிஷனர் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வசூலில் ஈடுபட்டு வரும் பல்வேறு அரசுத்துறை ஊழியர்களும் அரண்டு போய் உள்ளனர்.

tasmac
tasmac

தீபாவளி நெருங்கும் நேரத்தில்தான் லஞ்ச ஒழிப்புத்துறை என்ற ஒன்று இருப்பதே வெளியே தெரியவருகிறது. திமிங்கிலங்களை விட்டுவிட்டு குட்டி மீன்களை மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்காணிக்கிறார்கள் என்ற புகாரும் சொல்லப்படுகிறது. தீபாவளி நேரத்தில் அரசுத்துறை உயர் அதிகாரிகளுக்கு அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சம் வழங்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், நகராட்சி அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தாசில்தார் அலுவலகம் எனத் தங்கள் கண்காணிப்பை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று மாலை மதுரை கருப்பாயூரணி டாஸ்மாக் கடையில் கலால் உதவி கமிஷனர் மாரிமுத்து லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையிலான போலீஸார் விரைவாகச் சென்று கண்காணித்தனர்.

மாரிமுத்து
மாரிமுத்து

வரிசையாக ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தீபாவளிக்கு வசூல் செய்து வந்த மாரிமுத்து, கருப்பாயூரணி கடையில் ரூ.1000 லஞ்சம் வாங்கியபோது பணத்துடன் சிக்கினார். மற்ற கடைகளில் வசூலித்த ரூ.35,000 அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. `இது என்னுடைய சொந்தப்பணம்' என்று மாரிமுத்து கூறியுள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்தான் தூத்துக்குடி வருவாய்த் துறையிலிருந்து கலால்துறைக்கு மாறி வந்தார். தினமும் டாஸ்மாக்கில் ரூ.1,000, கேளிக்கை விடுதி மற்றும் ஹோட்டல் பார்களில் ரூ.5,000 என வசூலித்துவந்த நிலையில் தற்போது தீபாவளி வசூலில் ஈடுபட்டு வந்தபோது பிடிபட்டுள்ளார்.

லஞ்சம்
லஞ்சம்

``சமீபத்தில் பொதுப்பணித்துறைப் பொறியாளர் வீட்டில் எட்டு லட்ச ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். ஆனால், சம்பந்தப்பட்ட பொறியாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுபோல் மதுரையில் சுரங்கத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்றவற்றையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்காணிக்க வேண்டும்'' எனக் கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.