Published:Updated:

``இது என் கையெழுத்தே இல்லை... போலி கையெழுத்து!" - அ.தி.மு.க-வின் டாப் 5 ஊழல்கள் #EndCorruption

ஜெயலலிதா, சசிகலா
ஜெயலலிதா, சசிகலா

`ஜெயலலிதாதான் இந்த ஊழல் புகாரைப் பரப்பியிருக்கிறார். இதன் பின்னணியில் இந்திரா காங்கிரஸ் வேலை செய்கிறது' எனப் பகீர் புகார் ஒன்றை வெளியிட்டார் காளிமுத்து.

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, `அடுத்த முதல்வர் யார்?' என்று தி.மு.க-வில் மிகப்பெரிய கேள்வி எழுந்தது. `கருணாநிதியா... நெடுஞ்செழியனா?' என்ற இருமுனைப்போட்டியில் கருணாநிதியை முதல்வராக்கக் குரல் கொடுத்தார், அப்போதைய தி.மு.க பொருளாளர் எம்.ஜி.ஆர். பின்னாளில் அதே எம்.ஜி.ஆர்தான் கருணாநிதிக்கு எதிராகக் கணக்குக்கேட்டு கட்சித் தொடங்கி கடைசியில் அதே முதல்வர் பதவியையும் பறித்தார். ஒன்றிரண்டு ஆண்டுகளில்லை. 13 ஆண்டுகள் பதவியின்றி பரிதவித்தார் கருணாநிதி. 

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

கருணாநிதி முதல் முறை முதல்வராக இருந்தபோது,`ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தி.மு.க-வினர் சொத்து சேர்த்துவிட்டனர்' என எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில்,`கட்சியினர் தங்கள் சொத்துக்கணக்கைத் தரவேண்டும்' என்றார் எம்.ஜி.ஆர். பின்னர் அவரே தி.மு.க-விலிருந்து தூக்கப்பட்டார். பிறகு, 1972-ம் ஆண்டு அ.தி.மு.க-வைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். தொடர்ந்து தேர்தல் பொதுக்கூட்டங்களில், `கருணாநிதியின் ஆட்சியில் லஞ்சம், ஊழல், அதிகார முறைகேடுகள் அதிகம் நடந்திருக்கின்றன. இந்நிலையை மாற்றி, தூய்மையான அண்ணாவின் ஆட்சியைக் காண்போம்' என்று முழங்கினார் எம்.ஜி.ஆர். அவரது ஆட்சியிலும் ஊழல் புகார்கள் எக்கச்சக்கமாக எழுந்தன. ஆனால், மக்கள் அதை நம்பவில்லை. இறுதிவரை அவர் முதல்வராக இருந்ததும் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாகத்தான்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊழல் புகார்கள் வரிசைகட்டி நின்றன. மக்களே நேரடியாக வெறுக்கும் அளவுக்கு அந்த ஊழலும் சொத்துக்குவிப்பும் பகிரங்கமாக நடந்தன. டான்சி ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளால் முதல்வர் பதவியை மட்டுமன்றி நிம்மதியையும் இழந்து தவித்தார் ஜெயலலிதா. தற்போதைய `அ.தி.மு.க 3.0'வை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தற்போதைய தமிழக அரசின் மீதும் ஏராளமான ஊழல் புகார்கள் அணிவகுக்கின்றன.  

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என அ.தி.மு.க-வின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முக்கியமான ஐந்து ஊழல்களின் தொகுப்பு இதோ...

வேளாண் ஊழல்!

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், வேளாண்துறை அமைச்சராக இருந்தார் காளிமுத்து. வேளாண்துறை நிதியை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வதாகவும், அதற்குக் கைம்மாறாக அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமெனவும் ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, 1982-83-ம் ஆண்டில் வேளாண்துறை நிதி வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டது.

காளிமுத்து
காளிமுத்து

காளிமுத்துவின் சிபாரிசில், அவரது நண்பர்கள் ராபின் மெயின், சாகுல் அமீது, சோமசுந்தரம் உள்ளிட்ட சிலர் ஒன்றரை முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் பெற்றனர். அந்தப் பணத்தில் 15 லாரிகள் மற்றும் டிராக்டர்கள் வாங்கியதாகவும் வங்கியில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் தவணைத் தொகையை முறையாகச் செலுத்தவில்லை. எனவே, அவர்கள் வாங்கிய வாகனங்களைப் பறிமுதல் செய்ய முயன்ற வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடன் பெற்றவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது உறுதிசெய்யப்பட, சி.பி.ஐ-யிடம் புகார் செய்யப்பட்டது. 

1984-ம் ஆண்டு இந்த வேளாண் ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காளிமுத்து மற்றும் அவரின் நண்பர்கள், அதிகாரிகள் உட்பட 32 பேர் இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். காளிமுத்துவின் நண்பர் ராபின் மெயின் சி.பி.ஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட, தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. நாளிதழ் தலைப்புகளைத் தினமும் அதுவே ஆக்கிரமித்தது.

இந்த ஊழல் குற்றச்சாட்டுகளைவிடவும் பெரிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. `ஜெயலலிதாதான் (அப்போதைய அ.தி.மு.க கொள்ளைப் பரப்புச் செயலாளர்), இந்த ஊழல் புகாரை பரப்பியிருக்கிறார். இதன் பின்னணியில் இந்திரா காங்கிரஸ் வேலை செய்கிறது' என பகீர் புகார் ஒன்றை வெளியிட்டார் காளிமுத்து. இந்த வேளாண் ஊழல் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஜி.ஆர். மீண்டும் அவரது அரசு தொடர்ந்த நிலையில், இந்த ஊழல் புகார் அ.தி.மு.க ஆட்சிக்குத் தலைவலியாகவே இருந்தது. இந்த ஊழல் குறித்து எம்.ஜி.ஆர் புலம்பியதும் உண்டு. இந்நிலையில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா அணியில் சேர்ந்தார் காளிமுத்து. பிறகு, தி.மு.க-வில் சேர்ந்தவர் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார். 2001-ம் ஆண்டு தன் ஆட்சிக்காலத்தில் காளிமுத்துவை, சபாநாயகராக ஆக்கினார் ஜெயலலிதா. 

காளிமுத்து
காளிமுத்து

காலங்கள் ஓடினாலும், இவ்வழக்கு `விடாது கறுப்'பாக தொடர்ந்தது. 2005-ம் ஆண்டு இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு சம்மன் அனுப்பியது உச்ச நீதிமன்றம். `காளிமுத்து பதவி விலகவேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப, `ராஜினாமா செய்யத் தேவையில்லை' என்றார் ஜெயலலிதா. இவ்வழக்கினால் உடல்நிலைப் பிரச்னைகளை எதிர்கொண்ட காளிமுத்து, 2006-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். 

32 ஆண்டுகள் நடைபெற்ற இவ்வழக்கில், 2016-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. அப்போது, காளிமுத்து உட்பட இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட 16 பேர் உயிருடன் இல்லை. மற்ற 16 பேரில், 5 பேருக்கு மட்டும் சிறைத்தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.

டான்சி நில ஊழல்!

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1991-ம் ஆண்டு முதல் முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. இவரின் 1991 - 96-ம் ஆண்டுக்கால ஆட்சியில், பல்வேறு ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு புகார்கள் எழுந்தன. அதில் டான்சி ஊழல் முக்கியமானது. 

ஜெயலலிதா, சசிகலா
ஜெயலலிதா, சசிகலா

தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலங்களை, ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. டான்சி நிறுவன நிலங்களை, சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு வாங்கியது `சசி என்டர்பிசைசஸ்' நிறுவனம். இது ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த நிறுவனம். இதனால் அரசுக்கு 4.16 கோடி இழப்பு ஏற்பட்டதாகப் புகார் கிளம்பியது.

இவ்விஷயத்தை கையில் எடுத்தார், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்று ஜெயலலிதா மீது வழக்குத் தொடுக்க அனுமதி கேட்டார். `டான்சி நில பேரத்தை ரத்து செய்ய வேண்டும்' என 1993-ம் ஆண்டு தி.மு.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. சுப்பிரமணியன் சுவாமியும் ஜெயலலிதாவுக்கு எதிராகப் புகார் தெரிவித்தார். 1996-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க, இவ்விவகாரத்தில் அதிக வேகம் காட்டியது.  ‘‘டான்சி நிலம் வாங்கியதில் எனக்கு எதுவும் தெரியாது. பத்திரத்தில் நான் கையெழுத்துப் போடவில்லை. ஆனால், போலி கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்" என பரபரப்பை கிளப்பினார், ஜெயலலிதா.

டான்சி ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளால் முதல்வர் பதவியை மட்டுமின்றி நிம்மதியையும் இழந்து தவித்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து அவர்களை விடுதலை செய்தது, சிறப்பு நீதிமன்றம். அந்தத் தீர்ப்புக்குத் தடை விதித்த உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யவில்லை. அப்போது 2001-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால், முதல்வர் பதவியை விட்டு விலகினார் ஜெயலலிதா. பின்னர் 2003-ம் ஆண்டு இவ்வழக்கிலிருந்து விடுதலையான ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.

அ.தி.மு.க-வின் டாப் 5 ஊழல்கள் பற்றி இவ்வளவு நேரம் படிச்சோம்! கொஞ்சம் வரலாறைத் திரும்பிப் பார்ப்போமா?

1972 அக்டோபர் 8-ம் நாள் திருக்கழுகுன்றம் கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக அனல் பறக்க இப்படிப் பேசியவர் அ.தி.மு.கவை நிறுவிய எம்.ஜி.ஆர்!

“அண்ணாவின் பாதையில் இருந்து முதலமைச்சர் கருணாநிதி விலகிச் செல்கிறார். முதலமைச்சரின் உறவினர்களின் சொத்து விவரங்கள் முதலில் வெளியில் வரவேண்டும். அண்ணாவின் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு அண்ணாவுக்குச் சிலை வைத்தால் என்ன பயன்?’’என்று கேட்டார்.

அதே நாள் மாலை சென்னை ஆயிரம் விளக்கில் பேசிய பேச்சுதான் தமிழக அரசியல் வரலாற்றையே திருப்பிப் போட்டது!

அப்படி என்ன பேசினார் எம்.ஜி.ஆர்? APPAPPO ஆப்ல உங்களுக்கான பிரத்யேக ஹோம்பேஜ்ல போய் பாருங்க! -> http://bit.ly/MGRvsKalaignar

சொத்துக்குவிப்பு வழக்கு!

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் முறையாக முதல்வரானார். 1996-ம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்த அந்தக் காலகட்டம்தான், அவருக்குப் பெரும் சோதனைக்காலமும்கூட. அந்தக் காலகட்டத்தில் வெறும் ஒரு ரூபாயை ஊதியமாகப் பெற்றார். ஆனால், இந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா ஊழல் செய்து, வருமானத்துக்கு அதிகமாக 66.56 கோடி ரூபாய் சொத்துகளைக் குவித்திருப்பதாகப் புகார் கிளம்பியது. இப்புகாரில் 1996-ம் ஆண்டு ஜெயலலிதா மீது சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார், சுப்பிரமணியன் சுவாமி. 

2000-ம் ஆண்டுக்காலத்திலேயே இவ்வழக்கின் விசாணை இறுதிக்கட்டத்தை எட்டியது. ஆனால், 2001-ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதும் இவ்வழக்கு விசாரணைகள் இழுத்தடிப்பு செய்யப்பட்டன. ஜெயலலிதாவை பதறவைத்த ஊழல் இது எனலாம். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுக்காலம் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், மேல்முறையீட்டில் ஜெயலலிதாவை விடுதலை செய்தது கர்நாடக உயர்நீதிமன்றம். ஆனால், 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், பெங்களூரு தனி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்தது. ஆனால், அதற்குள் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார்.

நெடுஞ்சாலைத்துறை ஊழல்கள்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தற்போதைய எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில். ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்டமதிப்பீடு 713.34 கோடி ரூபாய். ஆனால், இத்திட்டத்துக்கு 1,515 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.  திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிச்சலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் திட்டத்துக்கு 720 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மேலும், மதுரை ரிங் ரோடு ஒப்பந்தத்துக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு ஐந்து வருடங்களுக்கான தொகையாக 2,000 கோடி ஒதுக்கப்பட்டது. 

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மேற்கண்ட நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு, 4,800 கோடி ரூபாய். இந்த ஒப்பந்தங்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் மற்றும் சேகர் ரெட்டி உள்ளிட்டோரின் நிறுவனங்களுக்குச் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகக் கடந்த ஆண்டு எதிர்க்கட்சிகள் புகார் கூறின. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தில் சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா ஊழல்!

எடப்பாடி பழனிசாமியுடன் விஜயபாஸ்கர்
எடப்பாடி பழனிசாமியுடன் விஜயபாஸ்கர்

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை கலந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்களை தமிழகத்தில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய 2013-ம் ஆண்டு தமிழக அரசு தடைவிதித்தது. இதுதொடர்பான அறிவிப்பைச் சட்டமன்றத்தில் வெளியிட்டார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. 

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஆனால், இதுபோன்ற போதைப் பொருள்கள் திருட்டுத்தனமாகத் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் கிளம்பின. இந்நிலையில், 2016-ம் ஆண்டு குட்கா தயாரிப்பாளர் மாதவ ராவ் என்பவரின் வீடு, ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதில், முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் சிலரின் ஒத்துழைப்புடன்தான் குட்கா பொருள்கள் தயாரிக்கப்படுவதும், இதற்காக அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதற்கான ஆதாரங்கள் இருப்பதும் தெரியவந்தது.

இந்த ஊழல் விவகாரத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் போலீஸ் டி.ஜி.பிகள் ஜார்ஜ், ராஜேந்திரன் ஆகியோர் மீது எதிர்க்கட்சிகள் வலுவான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கின்றன. உள்ளாட்சித்துறை மின் வாரியம், போக்குவரத்துத்துறை என இன்னும் பல துறைகளிலும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல்கள் நடந்திருப்பதாக தொடர் புகார்கள் எழுகின்றன. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் ஒவ்வொன்றும் ஒரு பூதமாக உருவெடுக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு