Published:Updated:

`ரூ.300 இருந்தால்தான் விண்ணப்பம்!' - மானிய ஸ்கூட்டருக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஊழியர் #ViralVideo

ரூ.200-ஐ மாரிமுத்துவிடம் லஞ்சமாக கொடுத்த அவர், இதை தன் நண்பர் ஒருவர் மூலமாக செல்போனில் பதிவு செய்துள்ளார். இதன்பின் அந்த வீடியோ பதிவை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம்
முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம்

அம்மா ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்க வந்தவரிடம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர் ஒருவர் லஞ்சம் பெறும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம்.

முதுகுளத்தூர் அருகே உள்ள கேழல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாகிளி. இவரின் மகள் ராஜலட்சுமி பட்டப்படிப்பு முடித்துள்ளார். இந்த நிலையில், தமிழக அரசு பெண்களுக்கு மானிய விலையில் வழங்கிவரும் அம்மா ஸ்கூட்டரை பெறுவதற்கான விண்ணப்பத்தைக் கொடுப்பதற்காக முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த அலுவலகப் பணியாளர் மாரிமுத்து என்பவரிடம், தான் கொண்டுவந்த ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளார்.

`ஒரு ரேஷன் கடைக்கு மாதம் ரூ.1000 மாமூல்!'' - இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் வாங்கிய பெண்  தாசில்தார்

இதையடுத்து மாரிமுத்து, ராஜலட்சுமியிடம் `விண்ணப்பத்தை வாங்க வேண்டும் என்றால் ரூ.300 கொடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். மேலும், `பணம் கொடுக்கவில்லை என்றால் ஸ்கூட்டர் கிடைக்காது' எனவும் கூறியதாகத் தெரிகிறது. இதனால், பணம் கொடுக்க மறுத்த ராஜலட்சுமி, தனது விண்ணப்பத்தைத் திரும்பத் தருமாறு கூறி வாங்கி சென்றுவிட்டார். இதை அறிந்த ராஜலட்சுமியின் சகோதரர் ஒருவர், மானிய விலை ஸ்கூட்டருக்கான விண்ணப்பத்துடன் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று அலுவலக உதவியாளர் மாரிமுத்துவிடம் கொடுத்துள்ளார்.

ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம்
ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம்

அவரிடமும் பணம் கேட்டுள்ளார் மாரிமுத்து. இதையடுத்து, ரூ. 200-ஐ மாரிமுத்துவிடம் லஞ்சமாக கொடுத்த அவர், இதை தனது நண்பர் ஒருவர் மூலமாக செல்போனில் பதிவு செய்துள்ளார். இதன்பின் அந்த வீடியோ பதிவை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், மாரிமுத்து லஞ்சம் பெறும் பதிவை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இதன்மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் லஞ்சம் பெறும் காட்சி வைரலாகப் பரவி வருகிறது.

இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் கேட்டபோது, ``சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து உரிய புகார் வந்தால், அதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.