Published:Updated:

லஞ்சம் கொடுத்ததாக முறையிட்ட முதியவர் - மக்கள் முன்னிலையில் ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றும் சூரங்கோட்டையைச் சேர்ந்த மாரி என்பவரை அனுகியுள்ளார் தங்கராஜ். முதியோர் உதவித்தொகை பெற தங்கராஜிடம் மாரி லஞ்சம் கேட்டுள்ளார்.

திரும்ப கிடைத்த பணத்துடன் முதியவர் தங்கராஜ்.
திரும்ப கிடைத்த பணத்துடன் முதியவர் தங்கராஜ். ( உ.பாண்டி )

முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக முதியவர் கொடுத்த லஞ்ச பணத்தை வருவாய்த்துறை ஊழியரிடமிருந்து மீட்டுக் கொடுத்தார் மாவட்ட ஆட்சியர். அரசு அலுவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

குறைதீர்  கூட்டத்தில் ஆட்சியர் வீரராகவ ராவ்.
குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் வீரராகவ ராவ்.

ராமநாதபுரம் தாலுகாவுக்கு உட்பட்டது மாடக்கொட்டான் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (61). விவசாயக் கூலி வேலை செய்து வரும் இவர், தனக்கு 60 வயது ஆன நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன் முதியோர் உதவித்தொகை கேட்டு ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், இவருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.

`லஞ்சம் கொடுக்கற எண்ணத்தையே மறந்துடுவாங்க!' - ஊழல் எதிர்ப்பு வாசகம் மூலம் அசத்தும் தென்காசி வி.ஏ.ஓ

இதனால் ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவகத்தில் உதவியாளராகப் பணியாற்றும் சூரங்கோட்டையைச் சேர்ந்த மாரி என்பவரை அனுகியுள்ளார் தங்கராஜ். முதியோர் உதவித்தொகை பெற தங்கராஜிடம் மாரி லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து 1,000 ரூபாயை மாரியிடம் கொடுத்துள்ளார் தங்கராஜ். இதன் பின்னரும் தங்கராஜுக்கு உதவித்தொகை வந்து சேரவில்லை.

முதியோர் உதவி தொகைக்காக லஞ்சம் பெற்ற ஊழியர் மாரி.
முதியோர் உதவி தொகைக்காக லஞ்சம் பெற்ற ஊழியர் மாரி.

இதனால் பணம் வாங்கிய உதவியாளர் மாரியைச் சந்தித்து முறையிட்டுள்ளார். ஆனால், மாரியோ உதவித்தொகை விரைவில் வந்துவிடும் எனச் சொல்லி சமாளித்து வந்துள்ளார். இந்நிலையில், ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு மாற்றலாகிச் சென்றுள்ளார் மாரி. இதனால் தன்னிடம் பணம் வாங்கிய மாரியை சந்திக்கச் சென்ற தங்கராஜ் ஏமாற்றத்துடனே திரும்பியுள்ளார்.

இதன்பின்னர், முதியோர் உதவித்தொகை கேட்டு மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்துள்ளார் தங்கராஜ். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஆட்சியர். ஆனாலும், தங்கராஜுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை. இந்நிலையில், கீழக்கரைக்கு மாற்றலாகிச் சென்ற வருவாய்த்துறை உதவியாளர் மீண்டும் ராமநாதபுரத்துக்கு பணிமாறுதலாகி வந்துள்ளார்.

லஞ்ச பணத்தைத் திரும்ப பெற்ற முதியவர் தங்கராஜ்
லஞ்ச பணத்தைத் திரும்ப பெற்ற முதியவர் தங்கராஜ்

இந்நிலையில், இன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்த முதியவர் தங்கராஜ், ஆட்சியரிடம் மனுக்கொடுத்துவிட்டு, ''தனக்கு உதவித்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. அதைக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. உதவித்தொகை கொடுப்பதற்காக என்னிடம் வாங்கிய பணத்தையாவது உதவியாளர் மாரியிடமிருந்து வாங்கித் தாருங்கள்'' எனக் கெஞ்சியுள்ளார்.

இதையடுத்து குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த உதவியாளர் மாரியை அழைத்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், முதியவரிடம் பணம் பெற்றது குறித்து கேட்டுள்ளார். ஆனால், மாரியோ மழுப்பியபடியே நின்றுள்ளார். இதனால் கோபமடைந்த ஆட்சியர், ``உண்மையை ஒப்புக்கொண்டால் நடவடிக்கை எடுக்க மாட்டேன்'' என விரட்ட, மாரி பணம் பெற்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, முதியவர் தங்கராஜிடமிருந்து மாரி வாங்கிய 1,000 ரூபாயைத் திருப்பிக் கொடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். மாரி லஞ்சமாகப் பெற்ற பணத்தை அனைவர் முன்னிலையிலும் முதியவரிடம் திருப்பிக் கொடுத்த நிலையில், இனி இது போல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என இருவரையும் எச்சரித்த ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் மாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.