Published:Updated:

இறந்தவர்களின் குடும்ப அட்டையில் கொள்ளையடிக்கும் அரசு ஊழியர்கள்... அதிர வைக்கும் உண்மைச் சம்பவம்!

இத்தகைய கொள்ளையில் ஈடுபடும் பொதுமக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி இந்தக் கொள்ளையர்களில் பெரும்பாலானவர்கள் ரேஷன் கடை ஊழியர்களே!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டில் (மின்னணு அட்டை) உள்ள குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டார் என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

தனிநபராக இருக்கும் உங்கள் நண்பரோ, உறவினரோ திடீரென மரணித்துவிட்டார். தனிநபரான அவருடைய ரேஷன் அட்டையில் வேறு உறுப்பினர்களே இல்லை. இந்தச் சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

முறைப்படி வட்டவழங்கல் துறைக்குத் தெரிவித்து, இறந்துபோன நபரின் பெயரை அட்டையிலிருந்து நீக்க வேண்டும். தனிநபர் என்றால், அந்த அட்டையையே ஒப்படைத்துவிட வேண்டும். அதைச் செய்யாமல் தொடர்ந்து பயன்படுத்துவது, இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி கடுங்குற்றமாகக் கருதப்படும். இதற்கு சிறைத்தண்டனையும் உண்டு. ஆனால், இதைப்பற்றியெல்லாம் துளிகூட அஞ்சாமல், திருட்டுத்தனமாக இத்தகைய குடும்ப அட்டைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி ஒரு கூட்டமே கொள்ளையடித்துக் கொண்டிருப்பதுதான் பேரதிர்ச்சி.

Ration Card
Ration Card

இத்தகைய கொள்ளையில் ஈடுபடும் பொதுமக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி இந்தக் கொள்ளையர்களில் பெரும்பாலானவர்கள் ரேஷன் கடை ஊழியர்களே!

இவர்கள் இறந்துபோனவர்களின் குடும்ப அட்டைகளை, தங்களின் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வாங்கி வைத்துக்கொண்டு கொள்ளையடிக்கும் வேலையைச் செய்துவருகிறார்கள். ரேஷன் கடை ஊழியர்களாக இருப்பது பெரும்பாலும் உள்ளூர்க்காரர்கள்தான். ஆகையால், தங்கள் ஊரில் யார் இறந்துபோனார்கள் என்பது அவர்களுக்கு உடனடியாகத் தெரிந்துவிடும். ஒருவேளை, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் இறந்திருந்தால், அவரின் பெயரை நீக்காமல் பொருள்களின் அளவை மட்டும் குறைத்துக் கொடுத்துவிட்டு, மீதிப் பொருள்களைக் கள்ளச்சந்தையில் விற்கிறார்கள். தனிநபர் மட்டுமே இருக்கும் குடும்ப அட்டையாக இருந்தால், அவர் இறந்தவுடன் அந்த அட்டையை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி அந்த ரேஷன் கார்டை வாங்கிச் சென்று தாங்களே மொத்தமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இழவு வீட்டில்கூட கிடைத்தவரை லாபம் என்று சுருட்டும் அளவுக்கு மனது மரத்துவிட்ட அரசு ஊழியர்களில் இந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய இடமுண்டு.

இறந்தவர்களின் பெயரில் ரேஷன் கடைகளில் தரும் பொருள்கள் மற்றும் பணத்தையெல்லாம் `சொர்க்கத்தி'லிருந்தபடி அவர்கள் வாங்கிக்கொண்டிருக்க, தகவல் மட்டும் நரகத்திலிருக்கும் நமக்கு வந்துவிடுகிறது. பாழாய்ப்போன நாம் வாழ்வது நரகத்தில்தானே. இப்படி ஓர் அனுபவத்துக்கு ஆளாகி, அரசு இயந்திரத்தின் மீது தாளாத கோபத்திலிருக்கும் ஜானகிராமனின் கதை பரிதாபமே!

இப்படியாக, நம்மிடம் விரட்டி மிரட்டி வாங்கிச் செல்லும் அந்தக் குடும்ப அட்டைகளை வைத்து அவர்கள் கொள்ளையடிப்பது தெரிந்தாலும், நேற்று வரை ஆதாரபூர்வமாக வெளியில் வந்ததில்லை. ஆனால், இப்போதெல்லாம் அது அடுத்தடுத்த நொடியே எஸ்.எம்.எஸ் வடிவாகவே நம் கைப்பேசிக்குள் வந்து விழுந்துவிடுகிறது.

Ration Shop/ Representational Image
Ration Shop/ Representational Image

புயல், வெள்ளம், சுனாமி, கொரோனா, பொங்கல் என்று பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கம் தரும் வேட்டி, சேலை, மண்ணெண்ணெய் மற்றும் 2,500 ரூபாய் பணம் என அனைத்துமே கொள்ளைபோவது மொபைல்கூடாகவே தெரிந்துவிடுகிறது. அனைத்து குடும்ப அட்டைகளுமே மின்னணு அட்டைகளாக இணையத்தில் இணைக்கப்பட்டுவிட்டதால், அதுசார்ந்த அனைத்துத் தகவல்களும் உடனுக்குடன் எஸ்.எம்.எஸ் மூலம் வந்துவிடுகின்றன. அதன்வழியாகத்தான் தன் அண்ணனின் குடும்ப அட்டை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததைத் தெரிந்து அதிர்ச்சியடைந்தார் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, பட்டிபுலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவருடைய அண்ணன் ஹரிகிருஷ்ணன். அண்ணனுக்கு மனைவி, குழந்தைகள் என்று வேறு உறவுகள் இல்லையென்பதால் தனியாக ரேஷன் கார்டு வைத்திருந்தார் ஹரிகிருஷ்ணன். இவர் 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதியன்று இறந்துபோனார். சில நாள்கள் கழித்து இந்த விஷயம் குறித்து ஜானகிராமனிடம் பேசிய உள்ளூர் ரேஷன் கடை ஊழியர், ``அந்த மின்னணு அட்டையைக் கொடுங்கள்; வட்டவழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்" என்று கேட்டு வாங்கிச் சென்றுள்ளார்.

நியாய விலைக்கடை/ Representational Image
நியாய விலைக்கடை/ Representational Image
விகடன்

பெரும்பாலும், ஒரு வீட்டில் அண்ணனோ, தம்பியோ இறந்துபோனால், அவருடைய சிம் கார்டு வீட்டில் யாரோ ஒருவரிடம்தான் பெரும்பாலும் இருக்கும். அந்த செல்போன் இறந்தவருடைய பெயரிலிருந்தால், அதைப் பயன்படுத்துவது குற்றம் என்பது தனிக்கதை. ஒருவேளை அது நம் பெயரில் வாங்கிக்கொடுத்ததாக இருந்தால் எந்தப் பிரச்னையுமில்லை.

அண்ணனின் போனில் இருந்தது ஜானகிராமனின் சிம் கார்டுதான். அவர் இறந்துவிட்டதால் அதை மூலையில் தூக்கிப் போட்டிருந்தார்.

கொரோனா சமயத்தில் ஆன்லைன் வகுப்பு என்று அரசாங்கம் அறிவித்த வேளையில், தன் அக்காவின் மகளுக்காக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி, அண்ணன் பயன்படுத்திய சிம் கார்டை தூசுத்தட்டி அதில் போட்டிருக்கிறார். அப்போதுதான் அவருடைய அண்ணன், `சொர்க்க லோகத்தில்' இருந்தபடியே ரேஷன் பொருள்களை வாங்கிக் கொண்டிருக்கும் உண்மை அவருக்குத் தெரிய ஆரம்பித்தது.

ஒவ்வொரு மாதமும் ரேஷன் பொருள்கள் வாங்கியதாக அந்த நம்பருக்குத் தகவல் வரவே கொதித்துப்போனார். ஹரிகிருஷ்ணனுடைய குடும்ப அட்டைக்கு கொரோனா சமயத்தில் தமிழக அரசு கொடுத்த ஐந்நூறு, ஆயிரம் ரூபாய்களும் சமீபத்திய பொங்கலின்போது தமிழக முதல்வர் எடப்பாடி அள்ளிவிட்ட 2,500 ரூபாயும் கொடுக்கப்பட்டுவிட்டதாக எஸ்.எம்.எஸ் வந்தது. ஆக, கடந்த ஆண்டில் கொரோனா நிதியாக வழங்கப்பட்ட தொகை உள்பட அனைத்தையும் அண்ணன் பெயரில் ஸ்வாகா செய்யப்பட்டிருப்பது அவருக்குத் தெரியவந்தது.

இறந்துபோன ஹரிகிருஷ்ணன் மொபைல் எண்ணுக்கு ரேஷன் கடையிலிருந்து வந்துள்ள தகவல்கள்
இறந்துபோன ஹரிகிருஷ்ணன் மொபைல் எண்ணுக்கு ரேஷன் கடையிலிருந்து வந்துள்ள தகவல்கள்

இந்த மாதமும்கூட பொருள்கள் வாங்கியதாக எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. பொதுவாக, அந்தப் பகுதியில் இந்த வகை அட்டைக்கு 2 லிட்டர்தான் மண்ணெண்ணெய் வழங்குவார்கள். அண்ணன் ஹரிகிருஷ்ணன் பெயரிலிருந்த அட்டைக்கோ மூன்று லிட்டர் வரைகூட அளக்கப்படுகிறது.

சரி என்னதான் தீர்வு?

கடைசியில் ஜானகிராமன் கையில் எடுத்தது ஆன்லைன்.

தமிழக பொது விநியோக திட்டத்தின் இணையதளத்துக்குச் சென்றார். அண்ணனின் மின்னணு அட்டையை முடக்குவதற்கான ஆப்ஷன்களை க்ளிக் செய்தார். கையிலிருந்த மொபைலுக்கு ஒரு குறிப்பு எண் வந்தது. அதை மீண்டும் பதிவிட்டார். அடுத்தநொடியே `அட்டை முடக்கப்பட்டுவிட்டது' என்கிற தகவல் எஸ்.எம்.எஸ் வடிவில் வந்துவிட்டது

இதுகுறித்துப் பேசிய ஜானகிராமன், ``2019-ல அண்ணன் இறந்து ரெண்டு மாசம் கழிச்சு, ரேஷன் கடைக்குப் பொருள்கள் வாங்க ஒருநாள் போனப்போ, அவரோட ரேஷன் கார்டை ரத்து செய்யணும், கொண்டுவந்து கொடுங்க'னு சொன்னாங்க. நாங்களும் சரினு திருப்பிக் கொடுத்துட்டோம். அப்புறம், ரொம்ப நாளா எங்களுக்கு இதுல பொருள் கொடுத்துட்டுத்தான் இருக்காங்க-னு தெரியவே இல்ல. லாக்டௌன் நேரத்துல, அக்கா பொண்ணுக்கு ஆன்லைன் வகுப்புக்காக அண்ணனோட சிம் கார்டை எடுத்தோம். அப்போதான், லாக்டௌனுக்கு பணம் கொடுத்தது, பொருள்கள் கொடுத்துட்டு இருந்தது எல்லாமே அண்ணன் நம்பருக்கு மெசேஜா வந்துச்சு. அப்புறம்தான் உடனே இதுக்கு என்ன பண்றதுனு விசாரிச்சு, ஆன்லைன்ல போய் உடனே கார்டை ரத்து செஞ்சேன்" என்றார்.

நியாய விலைக்கடை/ Representational Image
நியாய விலைக்கடை/ Representational Image
விகடன்

இப்படி இறந்தவர்களின் கார்டுகளை மட்டுமல்ல, உயிரோடு இருப்பவர்களின் பெயர்களிலும் பொருள்களை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பது தொடர்கிறது. பொருள்கள் வாங்காமலே வாங்கியது போல எஸ்.எம்.எஸ் வந்துவிடுகிறது. அதைப் பார்த்துவிட்டு நம்மில் எத்தனை பேர் கொதித்துப் போய் ரேஷன் கடையில் விசாரிக்கிறோம். பெரும்பாலும் இல்லை என்பதுதானே நம் பதிலாக இருக்கிறது. இதுவும் ஒருவகையில் குற்றமே! ஆம், திருட்டுக்குத் துணைபோகும் குற்றம். அரசாங்கப் பொருள்கள் கொள்ளைபோவதற்கு துணைநிற்கும் குற்றமும்கூட. விழித்துக்கொள்வோம். கேள்வியெழுப்புவோம். மக்களுக்குச் சேர வேண்டிய பொருள்கள் கள்ளச்சந்தைக்குப் போவதைத் தடுப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு