அரசியல்
சமூகம்
Published:Updated:

75 பைசா வித்தியாசத்தில் கைமாறிய ரூ.7 கோடி டெண்டர்!

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

அமைச்சரை வட்டமிடும் விளையாட்டுத் துறை முறைகேடு

“இதற்கு முன் அப்படியொரு நிறுவனத்தை நாங்கள் கேள்விப்பட்டதுகூட இல்லை. அனுப்புநர் முகவரிகூட இல்லாத நிறுவனத்துக்காக, ஒட்டுமொத்த அதிகாரிகளும் வேலை பார்க்கிறார்கள். வெறும் 75 பைசா வித்தியாசத்தில் ஏழு கோடி மதிப்புள்ள டெண்டரை வாரிக் கொடுத்துவிட்டார்கள்” - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மீதுதான் இப்படியொரு அதிர்ச்சிக் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

75 பைசா வித்தியாசத்தில் கைமாறிய ரூ.7 கோடி டெண்டர்!

தமிழக அரசு சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிராமப்புற இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதுதான் இந்தப் போட்டிகளின் நோக்கம். ஊரக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப் படுகின்றன. இந்தப் பதக்கங்களைக் கொள்முதல் செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் முறையாக டெண்டர் விடப்படுகிறது. இந்த ஆண்டு பதக்கங்களை வழங்குவதற்கான நிறுவனங்களைத் தேர்வுசெய்ய, கடந்த ஜூன் மாதம் டெண்டர் தேதி அறிவிக்கப் பட்டது. ஜூலை 15-ம் தேதி டெண்டர் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியாக நிர்ணயிக்கப்பட்டது. 7.10 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த டெண்டருக்கான கேட்புத் தொகையாக (இ.எம்.டி) ரூ.3,61,000 என வரையறை செய்யப் பட்டது. தமிழக அரசின் அறிவிப்பைப் பார்த்துவிட்டு 12 நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன.

டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள், ``12 நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களுக்கு ஜூலை 16-ம் தேதி அழைப்பு வந்தது. நாங்களும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்துக்குச் சென்றோம். அன்று மதியம் 3.30 மணியளவில் டெண்டர் தொடர்பான அறிவிப்பை வெளியிட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 10 லட்சம் செட்டுகளை (ஒரு செட் என்பது 3 மெடல்கள்) உள்ளடக்கிய 30 லட்சம் மெடல்களுக்கான டெண்டர் இது. `ஏழு நிறுவனங்களில் யாருக்கு டெண்டர் போகும்?’ என எதிர்பார்ப் புடன் காத்திருந்தோம். அப்போது அங்கு வந்த அதிகாரிகள், சரவணன் என்பவரின் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவதாக அறிவித்தனர். எங்களுக்கு அதிர்ச்சி... ‘யார் இந்த சரவணன், அவருடைய நிறுவனத்தின் பெயர் என்ன?’ என விசாரித்தபோது மேலும் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன” என ஆதங்கப்படுகின்றனர்.

75 பைசா வித்தியாசத்தில் கைமாறிய ரூ.7 கோடி டெண்டர்!

அவர்களிடம், “குறைந்த தொகையைக் குறிப்பிட்டு, எல்-1 ஆக தேர்வு செய்யப்படும் நிறுவனத்துக்குக் கொடுப்பதுதானே டெண்டர் விதிமுறை?” என்றோம். ``உண்மைதான். நாங்கள் 30 வருடங்களுக்கும் மேலாக இந்தத் துறையில் தொழில் செய்துவருகிறோம். ஆண்டு வருமானம் ரூ.10.50 கோடி ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே இந்த டெண்டரில் பங்கேற்க முடியும். குறிப்பிட்ட நிறுவனம் கடந்த ஐந்து வருடங்கள் ஈட்டிய ஆண்டு வருமான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். பான் எண், விற்பனை வரி எண் உட்பட நிறைய ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். இவை அனைத்தையும் சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்க வேண்டும். இவை அனைத்தும் 400 - 500 பக்கங்களைக் கொண்டவை. டெக்னிக்கல் பிட் மற்றும் ப்ரைஸ் பிட் என இரண்டு ஆவணங்களைத் தனித்தனியாகச் சமர்ப்பிக்க வேண்டும். ப்ரைஸ் பிட்டில்தான் டெண்டர் தொகை குறித்துத் தெரிவிக்கப் பட்டிருக்கும். டெக்னிக்கல் பிட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்த பிறகே எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். சரவணன் அனுப்பிய கவரில் ஆவணங்கள் சரியாக இணைக்கப்படவில்லை.

டெக்னிக்கல் பிட்டில் வைக்கப்பட வேண்டிய மெடல்களின் மாதிரிகளை அவர் ப்ரைஸ் பிட்டில் வைத்து அனுப்பியிருந்தார். இப்படிப்பட்ட ஒருவருக்கு மொத்த டெண்டரும் கைமாறியுள்ளது. நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்களைப் படிப்பதற்கே ஒருநாள் தேவைப்படும். சரவணனின் ஆவணங் களை எப்படிச் சரிபார்த்தார்கள் என்றும் தெரியவில்லை. இந்த டெண்டரில் அரசியல் தலையீடு இருக்கிறது. அமைச்சருக்குச் சாதகமாக அதிகாரிகள் நடந்துகொள்கிறார்களோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதில், அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், சரவணன் என்ற பெயரில் வந்த கவரில் அனுப்புநர் முகவரியே இல்லை. வழக்கமாக டெண்டருக்கான ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு அதிகாரிகளிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வரும். ஏராளமான சந்தேகங்களைக் கேட்பார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் காலம் ஆய்வுப் பணிகள் நடக்கும். அதேபோல், இந்த முறையும் ஆவணங்களைச் சரிபார்க்கவே ஒரு மாத கால அவகாசம் எடுத்துக்கொள்வார்கள் என்று நினைத்தோம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக டெண்டரைச் சமர்ப்பித்த மறுநாளே எங்களுக்கு அழைப்பு வந்தது. பொதுவாக, டெண்டரில் எல்-1 ஆக தேர்வாகிறவர்களுக்கு 50 சதவிகிதப் பணிகளும், மீதமுள்ள 50 சதவிகிதப் பணிகளை டெக்னிக்கல் மற்றும் தொகை நிர்ணயத்தில் தேர்வான மற்ற நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுப்பார்கள். ஆனால், `இந்தமுறை எல்-1 ஆகத் தேர்வான சரவணனின் நிறுவனத்துக்கே முழுப் பணிகளும் ஒப்படைக்கப்படும்’ என்று அதிகாரிகள் உறுதியாகக் கூறிவிட்டனர்.

இரண்டாவதாகக் குறைந்த தொகையைக் குறிப்பிட்டு எல்-2 ஆக டெல்லியைச் சேர்ந்த ஷிவ் நரேஷ் கம்பெனியும், மூன்றாவதாகக் குறைந்த தொகையைக் குறிப்பிட்டு எல்-3 ஆக புனே ஸ்மித் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் தேர்வாகின. இந்த நிறுவனங்களுக்கு எந்தப் பணிகளும் வழங்கப்படவில்லை. இத்தனைக்கும் ஏலத்தில் எல்-1 ஆக தேர்வான சரவணன் என்பவர் குறிப்பிட்டிருந்த தொகை ரூ.57.20 பைசா (மூன்று மெடல்களுக்கான தொகை). டெண்டரில் எல்-2 நிறுவனம் குறிப்பிட்டிருந்தது 57 ரூபாய் 95 பைசா, எல் 3 நிறுவனம் குறிப்பிட்டிருந்தது 61 ரூபாய். ஆக, வெறும் 75 பைசா வித்தியாசத்தில் தேர்வாகி யிருக்கிறார் சரவணன். இப்படியொரு வித்தி யாசத்தை அதிகாரிகள் துணையில்லாமல் கொண்டுவந்திருக்க வாய்ப்பில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பும் இதேபோன்று ஒரு குளறுபடி நடந்தது. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தடையுத்தரவும் வாங்கப்பட்டது. இதன் காரணமாக 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் டெண்டர் விடப்படவில்லை. இதே குளறுபடியை அரசியல் செல்வாக்கை வைத்து மீண்டும் அரங்கேற்றியுள்ளனர்” என்று வேதனையோடு பேசி முடித்தார்கள்.

75 பைசா வித்தியாசத்தில் கைமாறிய ரூ.7 கோடி டெண்டர்!

டெண்டரில் தேர்வான சரவணனைத் தொடர்புகொண்டபோது அவரின் மேலாளர் விக்னேஸ்வரன் பேசினார். ‘‘நீங்கள் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை. நேர்மை யான முறையில்தான் டெண்டர் பெற்றுள்ளோம். மேல் விவரங்கள் தேவைப்பட்டால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி களிடம் பேசுங்கள்’’ என்றார்.

டெண்டர் குளறுபடி தொடர்பாகத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் சந்திரசேகர் சகாமுரியைத் தொடர்புகொண்டோம். “மீட்டிங்கில் சார் பிஸியாக இருக்கிறார். டி.ஜி.எம்-மிடம் பேசுங்கள்” என்று தகவல் வரவே, துணைப் பொதுமேலாளர் சாமுவேல் ராஜா டேனியலிடம் பேசினோம். ``நானும் மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்” என்றார்.

இதையடுத்து, தமிழகப் பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனி டம் பேசினோம். அவர் சார்பாக நம்மிடம் பேசிய அவரின் உதவியாளர் கதிர் முருகன், ``இப்படியொரு தகவலே இப்போதுதான் எங்கள் கவனத்துக்கு வருகிறது. பதக்கங்களை வழங்குவதற் கான முழுப் பணிகளையும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமே மேற்கொண்டு வருகிறது. அதற்கென்று ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதற்குள் நாங்கள் தலையிடுவதில்லை. டெண்டரைப் பற்றி மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். ஐ.ஏ.எஸ் அதிகாரியையும் மீறி குளறுபடி நடந்துள்ளதா என்பதை ஆய்வுசெய்கிறோம்” என்றவரிடம், “அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டாலும், முறைகேடு எனப் புகார் வரும்போது அமைச்சர் பெயரைத்தானே சொல்கிறார்கள்” என்று கேட்டோம். அதற்கு அவர், ``நிச்சயமாக... டெண்டரில் நடந்த விஷயங்கள் தொடர்பாக அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசெல்கிறேன்” என்றார் உறுதியாக.

விளையாட்டு வினையாகும் முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!