Published:Updated:

கொள்ளையோ கொள்ளை... கொரோனா கொள்ளை...

கொரோனா சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா சிகிச்சை

அலறும் ஆடியோ... மறுக்கும் மாநகராட்சி!

கொள்ளையோ கொள்ளை... கொரோனா கொள்ளை...

அலறும் ஆடியோ... மறுக்கும் மாநகராட்சி!

Published:Updated:
கொரோனா சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா சிகிச்சை

“கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அம்மாவின் ஆணைப்படி இயங்கிவரும் எடப்பாடியின் அரசு எடுத்துவரும் நடவடிக்கைளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பே பாராட்டுகிறார்... ஐ.நா.சபையே ஆச்சர்யம் பொங்கப் பார்க்கிறது” என்று கொரோனாவே வெட்கப்பட்டு ஓடிப் போகும் அளவுக்கு கலர் கலராக ரீல் விட்டுக்கொண்டிருக் கிறார்கள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேசமயம், ‘கொரோனாவை வைத்துக்கொண்டு, குப்பை தொடங்கி பிபிஇ கிட் வரை பல்வேறு முறைகேடுகள் தொடர்கின்றன. கோடி கோடியாகக் கொள்ளையடித்தபடி இருக்கின்றனர் ஆளுங்கட்சியினரும் அதிகாரிகளும்’ என்கிற குற்றச் சாட்டுக் குரல்கள் இன்னொருபுறம் ஓங்கி ஒலிக்கின்றன.

இது தொடர்பாக ஆராயப் புகுந்தபோது... ‘‘அடப்பாவிகளா, இப்படியெல்லாம்கூட கொள்ளையடிப்பீர்களா’’ என்று அதிர்ந்துதான் போனோம். முகக்கவசம், கிருமிநாசினி, பாதுகாப்பு உடைகள் என கொரோனா தொடர்பான அனைத்திலும் முறைகேடுகள் நடப்பதாகவும், பல லட்சம் ரூபாய் வரை கமிஷன் அடிக்கப்படுவதாகவும் ஏற்கெனவே சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம்சாட்டியபடியே உள்ளனர். இந்நிலையில், கொரோனா பாசிட்டிவ் கேஸ்களை வைத்து பணம் பார்க்கிறார்கள் என்று புதுவிதமான ஒரு மோசடி பற்றிய `பகீர்’ புகார் கிளம்பியுள்ளது.

கொள்ளையோ கொள்ளை... கொரோனா கொள்ளை...

மடிப்பாக்கத்தில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டினுள்ளே இருப்பவர்கள் வெளியே வர இயலாத வகையில் வீட்டைச் சுற்றித் தகர ஷீட் அடிக்க மாநகராட்சியின் சார்பில் வந்த சிலர், ‘தகரத்துக்கான காசை நீங்கள்தான் தர வேண்டும்’ என்று வீட்டுக்காரர் களிடமே 3,000 ரூபாயை வாங்கிச் சென்றுவிட்டனர் என்று ஒரு தகவல் நமக்குக் கிடைத்தது. மேற்கொண்டு தீவிரமாக பலரிடமும் விசாரித்தோம். தொற்று பாதிக்கப்பட்ட பலரிடமும் பேசியதில் ஒரு சிலர் மட்டும் ‘500 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை பணம் வாங்கினார்கள்’ என்று நம்மிடம் கூறினார்கள். விசாரணையை விரிவுபடுத்தியபோதுதான் தெரிந்தது, பாதிக்கப்பட்ட வீட்டைத் தனிமைப் படுத்துவதற்காக வரும் மாநகராட்சி ஊழியர்கள், சம்பந்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களின் வசதி வாய்ப்புக்கு ஏற்றவாறு பணம் வசூலிப்பது தெரியவந்தது.

பிரகாஷ்
பிரகாஷ்

சென்னை மாநகராட்சி சார்பில் நகர் முழுவதும் நாளொன்றுக்கு 500-க்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் தினமும் 20,000-க்கும் அதிகமான நபர்கள் பங்கு பெறுகிறார்கள். அறிகுறிகள் கண்டறியப் படும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. காவல்துறை உதவியுடன் அந்தந்தப் பகுதியில் மக்களைக் கட்டாயப்படுத்தி காய்ச்சல் முகாமுக்கு அழைத்துவருவதும் நடக்கிறது. பகுதிவாசிகளை மட்டுமல்ல, அந்தப் பக்கமாக நடந்து செல்பவர்களைக்கூட கட்டாயமாக இழுத்துச் சென்று பரிசோதனை செய்கின்றனர். “இப்படிப் பரிசோதனைக்கு உட்படுத்து பவர்களில் பலருக்கும் ‘பாசிட்டிவ்’ என்றே ரிசல்ட் வருகிறது. இதற்குப் பின்னால் பெரிய அளவில் பணம் விளையாடுகிறது” என்கிற பேச்சு பலமாக அடிபடுகிறது.

“குறிப்பிட்ட நபர்களை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைக்க வேண்டும். ஒரு கொரோனா பாசிட்டிவ் கேஸ் பிடித்துக் கொடுத்தால், அந்த ஏரியா அதிகாரிக்கு 15,000 ரூபாய் கிடைக்கும்” என்று மாநகராட்சி தன்னார்வலர் ஒருவர் பேசுவதாக ஓர் ஆடியோ கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ‘இது உண்மையா?’ என்று பலரும் ‘உச்’ கொட்டிக் கொண்டிருக்கும் வேளையில்தான் மேற்கண்ட புகார்களும் கிளம்பிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தாலே உண்மை புரியும்.

கொள்ளையோ கொள்ளை... கொரோனா கொள்ளை...

இன்னொரு பக்கம் முகக்கவசத்தை வைத்துப் பணம் பார்ப்பதாகவும் புலம்பல்கள் கேட்கின்றன. “கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தவர்கள், வெறிச்சோடிக்கிடக்கும் சாலைகளில் காலை வேளைகளில் நடைப்பயிற்சி செய்கின்றனர். எல்லாவற்றையும் திறந்துவிட்டுள்ள சூழ்நிலையில், நடைப்பயிற்சிக்கு மட்டும் தடை போடுகின்றனர். ‘உடற்பயிற்சி செய்யும்போது முகக்கவசம் அணிவது உகந்ததல்ல’ என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால், ‘நடைப்பயிற்சி செய்யும்போது முகக்கவசம் அணியவில்லை’ என்று அபராதம் விதிக்கின்றனர் போலீஸார். இது எந்த வகையில் நியாயம்?” என்று பலரும் கேள்வி எழுப்பு கிறார்கள். கொரோனா காலகட்டத்தில் சென்னை மாநகராட்சியில் மட்டும் முகக்கவசம் அணியாதது, விதிமுறை மீறல் என்று அபராதமாக வசூல் செய்யப்பட்ட தொகை 1.70 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்கின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் கேட்டோம், ‘‘அந்த ஆடியோவிலுள்ள தகவலில் துளியும் உண்மை இல்லை. இந்திய அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், பல்வேறு முன்னெடுப்புகளை சென்னை மாநகராட்சி எடுத்துவருகிறது. காய்ச்சல் முகாம்கள், கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் தனியாக ஒரு தன்னார்வலர், நடமாடும் கொரோனா பரிசோதனை மையம், நடமாடும் மருத்துவர்கள் குழு... என்று சென்னை மாநகராட்சிப் பணிகளின் பட்டியல் நீளம். முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், முகக்கவசம் ஒன்றே கொரோனாவைக் கட்டுப்படுத்த தற்போது தீர்வாக இருப்பதால்தான் அபராதம் விதிக்க வேண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறது’’ என்று சொன்னார்.