Published:Updated:

ஆளுங்கட்சியினர் என்பதால் கைது இல்லையா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மதுரை ஆவின் கூட்டுறவுச் சங்கம்
மதுரை ஆவின் கூட்டுறவுச் சங்கம்

மதுரை ஆவின் கூட்டுறவுச் சங்கத்தில் கையாடல்

பிரீமியம் ஸ்டோரி

மதுரை ஆவின் நிறுவனத்தின், தொழிலாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணய சங்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 8 கோடி ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டிருந்தது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு ஆண்டு களுக்குப் பிறகு தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் ஆளுங்கட்சி தொடர்புடையவர்களை தப்பவிட்டுவிட்டு, சங்கத்தின் செயலாளர் மற்றும் கணக்காளரை மட்டும் கைது செய்திருப்பதாகக் கொந்தளிக்கிறார்கள் சங்கத்தின் தரப்பினர்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுச்சாமி. “மதுரை ஆவின் தொழிலாளர்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணய சங்கத்தில் சுமார் 8 கோடி ரூபாய் (ரூ.7,92,41,616) அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இந்தத் தொகை ஆவினில் வேலை செய்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் டெபாசிட் செய்த தொகை. இந்தத் தொகையைச் சங்கத்தின் தலைவராக இருந்த பாண்டி, துணைத் தலைவராக இருந்த பரமானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் கையாடல் செய்தது, 2017-18-ம் நிதியாண்டு கணக்குகள் தணிக்கை செய்யும்போது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி எங்கள் சங்கமும், டெபாசிட் செய்தவர்கள் தரப்பும் இரண்டு ஆண்டுகளாகக் கடுமையாகப் போராடியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

சு.ஆ.பொன்னுச்சாமி
சு.ஆ.பொன்னுச்சாமி

ஒருகட்டத்தில் மதுரை ஆவின் தொழிலாளர்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணய சங்கத்தில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப் பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் கடுமை காட்டிய பிறகே, மதுரை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், ‘தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி’ வணிக குற்றப் புலனாய்வு பிரிவுக்குப் புகார் அனுப்பினார். அதன் பிறகே தற்போது மதுரை ஆவின் தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கத்தின் செயலாளர் மதலையப்பன், கணக்காளர் ஜெகதீசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி - செல்லூர் ராஜூ
ராஜேந்திர பாலாஜி - செல்லூர் ராஜூ

பாண்டி, பரமானந்தம் ஆகியோரை சங்கத்திலிருந்து ஆறு மாதங்களுக்குப் பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் உத்தர விட்டுள்ளார். இவர்களுக்கு மதுரை மாவட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட ஆளுங்கட்சியில் செல்வாக்கு இருக்கிறது. அதை வைத்துக் கொண்டே இருவரும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பியிருக்கிறார்கள்” என்றார்.

மேற்கண்ட முறைகேடு குறித்து மதுரை சரக கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் சதிஷ்குமாரிடம் கேட்டோம். “முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டதால் நான்கு பேர்மீது காவல்துறை யினரிடம் புகார் செய்து, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சங்கத்தின் தலைவர், துணைத் தலைவரை ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளோம். மோசடி செய்த வர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு விரைவில் திரும்பக் கிடைக்கும். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது’’ என்றார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பேசினோம். “ஆளுங்கட்சியில் செல்வாக்கு; அமைச்சரிடம் செல்வாக்கு என்பதெல்லாம் தவறு. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே முடியாது. மேற்கண்ட முறைகேடு பற்றி என்னிடம் புகார் வந்ததும் விசாரணை நடத்த உத்தர விட்டேன். மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப் பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் வீடு, நிலம், சம்பளப் பணிப் பலன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும். சங்கத்தில் முதலீடு செய்தவர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. அவர்களின் பணம் விரைவில் வட்டியுடன் திரும்பக் கிடைக்கும்” என்றவரிடம், “தலைவர், துணைத் தலைவர் மீது ஏன் கைது நடவடிக்கை இல்லை?”

என்று கேட்டோம். அதற்கு, “இப்போதுதான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையை போலீஸ் முடிவு செய்யும்” என்றார்.

மதுரை ஆவின் கூட்டுறவுச் சங்கம்
மதுரை ஆவின் கூட்டுறவுச் சங்கம்

இது தொடர்பாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமும் விளக்கம் கேட்க அவரது அலைபேசியில் பலமுறை தொடர்புகொண்டும், அவர் நம் அழைப்பை எடுக்கவில்லை. அவரது மின்னஞ்சல் முகவரியான mlasivakasi@tn.gov.in-க்கு விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பி யுள்ளோம். அவர் பதில் அளிக்கும்பட்சத்தில் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலியல் புகாரிலும் தப்பிய இருவர்!

இரண்டு வருடங்க ளுக்கு முன்னர், ‘ஆவினில் தற்காலிக பணியில் சேர்ந்த பெண்களை நிரந்தரமாக்குகிறோம் என்று ஆசைகாட்டி, ஆவின் தொழி லாளர்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணய சங்கத்தின் தலைவர் பாண்டி, துணைத் தலைவர் பரமானந்தம் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்தனர்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதைய மதுரை, ஆவின் பொது மேலாளர் காவல்துறையில் புகாரளித்தார். கூடவே, பாண்டி, பரமானந்தம் இருவரும் சில நாள்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். ஆனால், ஒருகட்டத்துக்குப் பிறகு அந்தப் புகாரே பிசுபிசுத்துப் போனது.

“புகாருக்கு ஆளான இருவருமே அமைச்சர்வரை செல்வாக்கு பெற்றவர்கள். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்கள் தரப்பிலிருந்தும் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து, புகார்நிலையி லேயே காவல்துறை இந்த விஷயத்தை முடித்துவைத்து விட்டது. அந்தப் பொது மேலாளர் தான் பாவம், இடமாறுதலுக்கு உள்ளானார்’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு