Published:Updated:

உ - ஊழல்

ஊழல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஊழல்

`99 வயது முதியவரை 23 ஆண்டுகள் அலையவிட்ட அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் அனல் கக்கியிருந்தது

வியாபாரிகளிடம் ஒரு வழக்கம் உண்டு. புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள், மஞ்சள்தூளைத் தண்ணீரில் பிசைந்து சுவரில் ‘உ - லாபம்’ என்று எழுதுவார்கள். ஊழல் அதிகாரிகளின் கூடாரமாக மாறிவரும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்திலும் அப்படி எழுதிவைத்துவிடலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ‘முதல்வர் வேட்பாளர் யார், கட்சியைக் கைப்பற்றுவது யார்?’ என்ற அதிகாரப் போட்டியில், லஞ்சத்தின் கொட்டத்தை அடக்க இந்த அரசுக்கு வக்கில்லை! ஏராளமான ஊழல் வழக்குகளைக் களங்கங்களாகச் சுமந்து நிற்கும் இந்த ஆட்சியாளர்களுக்கும் திராணியில்லை!
உ - ஊழல்

சமீபத்தில் தியாகி பென்ஷன் தொடர்பான வழக்கு ஒன்றில், `99 வயது முதியவரை 23 ஆண்டுகள் அலையவிட்ட அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் அனல் கக்கியிருந்தது. அக்டோபர் 19-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிலம் சர்வே தொடர்பான வழக்கு ஒன்றில், `பத்திரப் பதிவுத்துறை எழுத்தர்கள், லஞ்சம் வாங்கித்தரும் ஏஜென்ட்டுகளாகச் செயல்படுகிறார்கள். பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்குக் கீழேதான் நடைபெறுகின்றன. வருவாய்த்துறையிலிருந்துதான் லஞ்சமே தொடங்குகிறது’ என்று சாட்டையைச் சுழற்றியிருந்தது. இன்னொரு வழக்கில், `விளைபொருள்களை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகளிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம்’ என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை காறி உமிழாத குறையாகக் கூறியிருந்தது!

இன்னொரு பக்கம், நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் லஞ்சத்தைச் சுட்டிக் காட்டிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ‘விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவது அவமானகரமான செயல்’ என்று ஏதோ புதிதாகக் கண்டுபிடித்ததுபோல திருவாய் மலர்ந்திருக்கிறார். ஆனால், நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்தால் என்ன... காறி உமிழ்ந்தால் என்ன... ‘எங்களுக்கு கட்டிங் ஒன்றே பிரதானம்’ என்று கரும்பு பிழிவதைப்போல மக்களை நசுக்கி, ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கிறது துருப்பிடித்துபோன அரசு இயந்திரம்.

அரசுத்துறைகளில் லஞ்சம், ஊழலெல்லாம் பழகிப்போன விஷயம்தானே... இப்போது எதற்காக இந்த நாற்றத்தைக் கிளற வேண்டும் என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. ‘இன்னும் ஆறு மாதங்கள் தான் இந்த ஆட்சி... அதற்குள் முடிந்தவரை சுருட்டிக்கொள்வோம்’ என்று பல துறைகளிலும் நடக்கும் கொள்ளைகள் எல்லைமீறிப் போய்க் கொண்டிருக்கின்றன. பொத்தாம் பொதுவாக எல்லாம் சொல்லவில்லை... புள்ளிவிவரங்களுடனேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். இந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை வெறும் 15 நாள்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டு, ஏராளமான லஞ்சத் தொகை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. வரிசையாகப் பார்ப்போம்...

* அக்டோபர் 2-ம் தேதியன்று ஸ்ரீபெரும்புதூர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் சுமார் நான்கு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

* அக்டோபர் 6-ம் தேதியன்று திருவண்ணாமலை நகராட்சியில் சொத்துவரிப் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய அதிகாரியை, பொறிவைத்துப் பிடித்தனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர். இதேநாளில், இதே புகாரில் மதுரை மாநகராட்சி அதிகாரி ஒருவரும் சிக்கினார்.

* அக்டோபர் 7-ம் தேதி கிருஷ்ணகிரியில் கிணற்றுக்கு இலவச மின்சாரம் கேட்ட விவசாயியிடம் முப்பதாயிரம் ரூபாய் கேட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் சிக்கினார்.

* அக்டோபர் 12-ம் தேதி கோவை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் 2,14,550 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

* அக்டோபர் 13-ம் தேதி ஈரோடு கொதிகலன்கள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் 1,61.000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

* அக்டோபர் 14-ம் தேதி வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாடு வாரிய முதன்மைப் பொறியாளர் பன்னீர்செல்வத்தின் அலுவலகத்திலும் வீட்டிலும் மூன்று கோடிக்கும் அதிகமான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

* அக்டோபர் 15-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் மையத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் 87,790 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

* அக்டோபர் 16-ம் தேதி ஆரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் 45,600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அன்றைய தினமே
நாமக்கல் மாவட்ட நகர ஊரமைப்பு திட்டத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 5,25,700 ரூபாயும், சேலம் மாவட்டம் சூரமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 85,000 ரூபாயும், கடலூர் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் 32,600 ரூபாயும், ஓசூர் செக்போஸ்ட்டில் 1,74,000 ரூபாயும், அவிநாசி பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் 16,100 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன.

* அக்டோபர் 17-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட செக்போஸ்ட்டில் 39,900 ரூபாயும், மறுபடியும் மறுநாளே சேலம் மாவட்டம், சூரமங்கலம் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் 1,68,000 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன.

படிக்கும்போதே மூச்சு0முட்டுகிறது அல்லவா... மேற்கண்ட சம்பவங்களில் பொதுமக்கள் தொடங்கி விவசாயிகள் வரை பாதிக்கப்பட்டவர்கள் எப்படியெல்லாம் வயிறெரிந்து கதறியிருப்பார்கள்!

உ - ஊழல்

நோ கமிஷன்... நோ கரன்ட்!

மேற்கண்ட சம்பவங்களில் வேலூர் மண்டல இணை தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளரிடம் கைப்பற்றப்பட்ட ரொக்கமும், கணக்கில் வராத சொத்துகளும் கிறுகிறுக்க வைக்கின்றன. இவரது வீட்டிலிருந்து, சுமார் மூன்றரைக் கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை கைப்பற்றியது லஞ்ச ஒழிப்புத்துறை. தமிழகம் முழுவதும் பல நூறு ஏக்கர் நிலங்களை வாங்கிப்போட்டிருக்கிறார் இந்த அதிகாரி. லஞ்சத் தொகையைக் கையாள்வதற்காக தனியாக ஓர் அலுவலகத்தையே நடத்தியிருக்கிறார். மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் கீழ் ஏழு மண்டலங்கள் வருகின்றன. 38 மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் இருக்கிறார்கள். ஒரு மண்டல அதிகாரியின் வீட்டிலிருந்தே மூன்றரைக் கோடி ரூபாய் கைப்பற்றப் பட்டிருக் கிறதென்றால், மற்ற ஏரியாக்களின் நிலையைச் சொல்லத் தேவையில்லை!

புதிதாக எந்த நிறுவனத்தைத் தொடங்குவதாக இருந்தாலும் சரி... விரிவாக்கம் செய்வதாக இருந்தாலும் சரி... அதற்கு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தடையில்லாச் சான்று அவசியம். திட்டத்தின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய்க்குக் கீழ் இருந்தால், இணைப் பொறியாளர் அலுவலகத் திலும், அதற்கு மேலான தொகை களுக்கு சென்னை தலைமை அலுவலகத்திலும் சுற்றுச்சூழல் அனுமதி தரப்படுகிறது. இதற்கென ஒவ்வொரு மாதமும், மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டு, அனுமதி வழங்கப்படும். திட்டத்தைப் பொறுத்து லஞ்சத் தொகையை நிர்ணயிக்கிறார்கள். ‘கட்டிங்’ வந்து சேராதவரை, அனுமதி கிடைக்காது. அந்த மாதக் கூட்டத்தில் அனுமதி கிடைக்கவில்லையென்றால், அடுத்த கூட்டத்துக்காக ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். ஒரு மாதம் தொழில் செய்ய இயலாது. இதற்கு அஞ்சியே தொழில் தொடங்கு பவர்கள் லஞ்சத்தைக் கொட்டி விடுகின்றனர்.

லஞ்சம் தர மறுத்தால், ‘இந்த நிறுவனத்தால் மாசு ஏற்படுகிறது’ எனக் காரணத்தைச் சொல்லி சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மின் இணைப்பை நிறுத்திவிடுவார்கள். இதைச் சரிசெய்து மீண்டும் மின் இணைப்பைப் பெறுவதற்கு குறைந்தது 60 நாள்களாகும். இதில் ஏற்படும் நஷ்டத்துக்கு பயந்தே, அதிகாரிகள் கேட்ட பணத்தை நிறுவனங்கள் கொடுத்துவிடுகின்றன.

இதில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு ரேட் வசூலிக்கப்படுகிறது. சென்னை, கோவை மண்டலங்களில் மட்டுமே மாதம் இரண்டு கோடி ரூபாய் வரை லஞ்சம் கரைபுரண்டு ஓடுகிறது என்கிறார்கள். இதனால், அந்த மண்டலங்களில் பதவியைப் பெற ஏகத்துக்கும் போட்டி நிலவுகிறது. மண்டலப் பொறுப்புக்கு வரும் அதிகாரிகள், ‘ஒவ்வொரு மாதமும் இவ்வளவு பணம் புரட்டித் தருகிறேன்’ என்று துறை மேலிடத்தில் உத்தரவாதம் அளித்துத்தான் பொறுப்பைப் பெறு கிறார்கள். சென்னை மண்டலத்தில் ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் ஏரியாக்களெல்லாம் நம்பர் ஒன் வசூல் ஏரியாக்கள் என்கிறார்கள்.

நானே வி.ஏ.ஓ... நானே மந்திரி!

சென்னை அம்பத்தூர் அருகே வி.ஏ.ஓ அலுவலகம் ஒன்று செயல்பட்டது. இந்த அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருபவர்களுக்கு, பத்து ரூபாய்க்கு மனு எழுதிக் கொடுக்கும் வேலையை ‘காமெடி நடிகரின்’ பெயர்கொண்ட ஒருவர் செய்துவந்தார். வி.ஏ.ஓ அலுவலகம் வேறோர் இடத்துக்கு மாறுதலாகிச் சென்றவுடன், அந்த அலுவலகம் இருந்த இடத்தை வாடகைக்கு எடுத்த அந்த நபர், தனியார் சேவை மையம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். சாதிச் சான்றிதழ், பட்டா, வருமானச் சான்றிதழ், பென்ஷன் எனச் சகலத்தையும் முடித்துத் தருவதாக கல்லா கட்டுகிறார் அவர். தாலுகா அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகளும், ‘அவர்கிட்ட போய் கொடுங்க, சீக்கிரம் முடிச்சுத் தந்துடுவாரு’ என சொல்லும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக மாறியிருக்கிறார். அந்த பிரமுகரின் இன்றைய சொத்து மதிப்பு பத்து கோடி ரூபாய்க்கு மேல் இருக்குமாம். இவர்மீது கோட்டைக்குப் போடப்படும் பெட்டிஷன்கள் இவரிடமே திரும்பி வருவதுதான் மர்மம். ‘நானே வி.ஏ.ஓ... நானே மந்திரி... என்னையை மீறி எங்கய்யா போகப் போறீங்க?’ என பத்து பவுன் தங்கச் சங்கிலி மினுமினுக்கக் கொக்கரிக்கிறாராம் அந்த பிரமுகர்!

சென்னையையொட்டி ஓரகடம் ஏரியாவில் சர்வே துறையில் பணிபுரிந்த ‘பாஸ்’ பிரமுகர் போலி டாக்குமென்ட் தயாரித்துக் கொடுப்பதில் கில்லாடி. இந்த ஏரியாவைச் சேர்ந்த பலர் டபுள் டாக்குமென்ட் விவகாரத்தால் பாதிக்கப்பட்டு, நீதிமன்றப் படியேறியிருப்பதில் ‘பாஸ்’ பிரமுகரின் சித்து விளையாட்டுதான் பிரதான காரணம் என்கிறார்கள். பத்திரப் பதிவுத்துறையிலும் வருவாய்த்துறையிலும் தனக்கிருக்கும் செல்வாக்கால் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார் அந்த பிரமுகர். இவர்களெல்லாம் கொசுறுதான். சமீபத்தில் அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், நீதிமன்றம் வாயிலாக டபுள் டாக்குமென்ட்டுக்கு அங்கீகாரம் பெற்றது எப்படி எனப் பேசும் வீடியோ ஒன்று வைரலானது. நீதித்துறையையே கலங்கடிக்கும் வார்த்தைகளை அந்த வீடியோவில் அள்ளி வீசியிருந்தார் அந்த வழக்கறிஞர்.

வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இப்போதெல்லாம் நேரடியாகப் பணம் வாங்குவ தில்லை. டிரைவிங் ஸ்கூலை அணுகச் சொல்லிவிடுகிறார்கள். அரசு ஊழியர் பணம் வைத்திருந்தால் மட்டுமே ஊழல் தடுப்புத்துறையால் பிடிக்க முடியும்; தனியாரைப் பிடிக்க முடியாது என்பதால் இந்த ஏற்பாடு. அதேபோல பத்திரப் பதிவு செய்யும் தொகையில் பத்து சதவிகிதத்தை லஞ்சமாக வழங்கினால் மட்டுமே பத்திரப் பதிவு நடக்கும். ஒரு பதிவு அலுவலகம்கூட இதற்கு விதிவிலக்கல்ல... நேர்மையான அதிகாரிகளும், ‘நான் லஞ்சம் வாங்க மாட்டேன்’ என்று சொல்ல முடியாது. லஞ்சம் வாங்கவில்லையென்றால், அவர்கள் அந்தப் பதவியில் இருக்க முடியாது.

உ - ஊழல்

லஞ்ச ஒழிப்புத்துறையிலும் கறை!

தலைமைச் செயலாளராக இருந்த ராம மோன் ராவ் வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. அந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின. ராம மோகன ராவின் மகன் நடத்திவரும் கம்பெனியில் அப்போது பதவியிலிருந்த சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குப் பங்கு இருப்பதை வருமான வரித்துறை கண்டறிந்தது. இது குறித்து விசாரிக்குமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்ககத்துக்கு `நோட்’ போட்டது. கடந்த மூன்றாண்டுகளாக இந்த வழக்கில் எந்த நகர்வும் இல்லை. அதேபோல, ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர்மீதும் ஆதாரங்களுடன் ஊழல் புகார் அனுப்பப்பட்டது. துறையிலிருக்கும் சிலரே அந்த ஃபைலை சம்பந்தப் பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு அனுப்பிவிட்டனர். இதனால், புகார் கொடுத்தவர்கள் பீதியில் இருக்கிறார்கள்.

ஊழல் ஒழிப்புச் சட்டம் 1988-ல் புதிய திருத்தம் ஒன்று 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. முன்பெல்லாம், ஊழல் புகாரில் உயரதிகாரிகள் சிக்கினால் லஞ்ச ஒழிப்புத்துறை நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இந்தத் திருத்தம் வந்த பிறகு, அதிகாரிகள்மீது நடவடிக்கையெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் துறைத் தலைவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அனுமதி வாங்க வேண்டும். இப்படிப் பல கோப்புகள் துறைத் தலைவர்களின் அனுமதிக்காகக் கோட்டையில் காத்துக் கிடக்கின்றன. மூன்று மாதங்களுக்குள் அனுமதி தர வேண்டும் என்பது சட்டம். ஆனால், அதை யாரும் பின்பற்றுவதில்லை.

ஜெயந்த் முரளி
ஜெயந்த் முரளி

அக்டோபர் 1-ம் தேதி இந்தத் துறையின் புது இயக்குநராக ஜெயந்த் முரளி பதவி ஏற்றார். ஏற்கெனவே, இதே பதவியில் ஒரு வருடம் இருந்தவர், தற்போது அதே பதவிக்கு வந்திருக்கிறார். அவர் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் தமிழகத்தின் வெவ்வேறு துறைகளில் ஏகப்பட்ட ரெய்டுகள் நடந்திருக்கின்றன. இதற்கிடையே துறைக்குள்ளேயே விலைபோன கறுப்பு ஆடுகள் பட்டியலையும் தனியாக எடுத்திருக்கிறாராம் ஜெயந்த் முரளி. தவிர, பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளைக் கொத்தாக பணிமாறுதல் செய்யும் முடிவிலும் ஜெயந்த் முரளி இருக்கிறார் என்கிறார்கள்.

உ - ஊழல்

‘லஞ்சம், ஊழலெல்லாம் காலத்துக்கும் இருக்கும். அவற்றை எதுவும் செய்ய முடியாது’ என்று கருத்து சொல்லிவிட்டு, நம்மில் பலரும் நகர்ந்துவிடுகிறோம். ‘பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கியேப்பா... கேட்ட காசைக் கொடுத்துட்டு சட்டுபுட்டுனு காரியத்தை முடி’ என லஞ்சம் கொடுப்பதை நம்மில் பலர் தூண்டிவிடுகிறார்கள். இவையெல்லாமே பொதுபுத்தியின் விரக்தி மற்றும் அலட்சிய மனப்பான்மையே. ‘லஞ்சம் கொடுப்பது தவறில்லை’ என்று லஞ்சத்தை ஏதோ சேவைக் கட்டணம் கணக்காகச் சமூகத்தில் உளவியல் ரீதியாக ஆழ்மனதில் வேர்பரப்பியிருக்கிறார்கள் பாழாய்ப்போன ஊழல் அதிகாரிகள். 23 ஆண்டுகள் தியாகி பென்ஷனுக்காக நடையாய் நடந்த அந்த குரலற்றவர்போல நாடு முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் இன்றும் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அடங்கிக்கிடக்கும் குரல்கள் வெகுண்டெழுந்தால், நம்மால் மாற்ற முடியாதது எதுவுமில்லை!

2019-20-ல் துறைவாரியாக எத்தனை பேர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் விசாரணை செய்யப்பட்டார்கள்?
2019-20-ல் துறைவாரியாக எத்தனை பேர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் விசாரணை செய்யப்பட்டார்கள்?

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

“சிறை நிச்சயம்!”

உ - ஊழல்

“நெடுஞ்சாலைத்துறை டெண்டர் புகார் மனுவின்மீது துறை அமைச்சரும், முதல்வருமான பழனிச்சாமி மீது புகாரைப் பதிவு செய்ய அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த ஜெயந்த் முரளி உத்தரவிட்டார். அதில், ‘போதிய முகாந்திரமில்லை’ என்று நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை கூறியது. அதை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதற்கு முதல்வர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறார்கள். இதேபோல துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர்மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் புகார் கொடுத்தோம். எந்தப் புகாரிலும் ஆதாரம் இல்லாமல் நாங்கள் புகார் அளிப்பதில்லை. எனவே, இந்தப் புகார்களில் கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வரும். சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்குச் செல்வது நிச்சயம்!’’

- ஆர்.எஸ்.பாரதி, அமைப்புச் செயலாளர், தி.மு.க

“யாருக்கும் பயப்படாதீர்கள்!”

உ - ஊழல்

“நான் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றியபோது, மூன்று ஐ.ஏ.எஸ்., மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள்மீது வந்த புகார்களை விசாரித்திருக்கிறேன். இப்போதெல்லாம், சிறிய பதவிகளில் இருப்பவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஜெயலலிதா மீதான லஞ்ச வழக்கில் நான்தான் வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்தேன். அதற்காக, நான் அனுபவித்த டார்ச்சர் ஏராளம். இன்றைய அதிகாரிகளுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... யாருக்கும் பயப்படாதீர்கள். எவரும் உங்களை எதுவும் செய்ய முடியாது.”

- நல்லமநாயுடு, ஓய்வுபெற்ற எஸ்.பி, லஞ்ச ஒழிப்புத்துறை.

“தேவை, தன்னிச்சையான அமைப்பு”

உ - ஊழல்

“லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை நடைமுறையே மாற வேண்டும். இப்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஆளும்கட்சிக்குக் கீழ் செயல்படும் அமைப்பாக இருப்பதால், ஆள்பவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. இதைத் தவிர்க்க, தன்னிச்சையான அமைப்பாக அது செயல்பட வேண்டும்.”

- ஜெயராமன், அறப்போர் இயக்கம்