Published:Updated:

"அ.தி.மு.க-வின் ஊழல் ஆதாரங்களை எப்படி திரட்டுகிறோம்?" - ஆர்.எஸ்.பாரதியின் பதில்

தற்போதைய ஆளுங்கட்சியினர் மீது பல்வேறு ஊழல்களைத் தகுந்த ஆதாரங்களுடன் திரட்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

R.S.பாரதி
R.S.பாரதி

ஆளும் அ.தி.மு.க-வினர் மீது ஊழல் புகார்கள் அதிகரிக்க என்ன காரணம்?

இதுவரை தமிழகத்தில் பல்வேறு ஆட்சிகள் நடந்துள்ளன. ஆனால், தற்போது நடைபெறும் ஊழல்கள்போல இதுவரை நடந்ததே கிடையாது. இங்கு நடைபெறும் ஆட்சியானது, ஊழல் செய்வதற்காகவே ஓர் ஆட்சி நடைபெறுவதுபோலக் காட்சியளிக்கிறது. இந்த ஊழல்கள் தொடர்பாகப் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி தி.மு.க-வின் சார்பில் பல வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறோம். அது நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இந்த ஊழல் புகார்களுக்கான ஆதாரங்களை எப்படித் திரட்டுகிறீர்கள்?

தி.மு.க-விற்கு என்று தனியாகச் சட்டத்துறை உள்ளது. இதன்மூலமாக, நடைபெற்றுவரும் ஊழல்களை எல்லாம் சேகரித்து வருகிறோம். இந்த ஊழல்களைத் தெரிந்த பல நடுநிலையாளர்கள், அரசு அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் பலர் தானாக முன்வந்து, எங்களிடத்தில் அந்தப் புகார்களைத் தெரிவிக்கின்றனர். அந்தப் புகார்களுக்குத் தேவையான ஆதாரங்களை நாங்கள் RTI மூலம் திரட்டுகிறோம். இப்படிப் பல்வேறு வகையில் தகுந்த ஆதாரங்களைத் திரட்டி, அதன்மூலம் வழக்குகளைத் தொடர்கிறோம். தகுந்த ஆதாரங்களோடு வழக்குகள் தொடரப்பட்டதன் காரணமாகத்தான், நீதிமன்றமே வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களில் ரூ.3,120 கோடி ஊழல் என்று நீங்கள் அளித்த புகார்களின் இன்றைய நிலை என்ன?

விசாரணையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். நீதிமன்றம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 'என் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால், கட்சிப் பதவியையும் துறந்துவிட்டு அரசியலைவிட்டு விலகிவிடுகிறேன்' என்று சவால்விட்டிருந்தார். அதுகுறித்து?

குற்றச்சாட்டு நிரூபணமானால் பதவி விலகவேண்டியது மட்டுமல்ல, அவர் சிறைக்குத்தான் போகவேண்டும். அதற்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக ஊழல் புகார்கள் அளித்தும், வருமானவரித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?

அதற்குக் காரணம், பி.ஜே.பி ஆளுகிற மாநிலங்களைவிட, தமிழகத்தை ஆளுகிற தமிழக முதல்வர் எடப்பாடி, இந்தியப் பிரதமருக்கும், பி.ஜே.பி-க்கும் மிகவும் விசுவாசமாக இருக்கிறார். எங்களுக்குக் கிடைத்த தகவல்கள்படி, கர்நாடகத்தில் நடந்த சட்டமன்றத் தாவல்களில், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க பெரும் பங்கு பணம் தமிழகத்தில் எடப்பாடி தரப்பிலிருந்து சென்றிருப்பதாகக் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பணத்தை வைத்துக்கொண்டு தேர்தல்களை நடத்தப் பார்க்கின்றனர்' என்று தாங்கள் புகார் வாசித்தும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது குறித்து?

இந்தியாவில் இருக்கிற பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின்மீது நம்பிக்கையை இழந்துவருகின்றன. இதுவரை காணாத அளவிற்குத் தேர்தல் ஆணையர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் உள்ளதைக் காணமுடிகிறது. 'மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம் - கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது' என்ற நிலைதான் இன்றைய தமிழக மக்களின் நிலையாக உள்ளது.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினரின் சொத்துகள் குறித்து புகார் வாசித்திருந்தீர்களே ?

அவருடைய சொத்துகள் எங்கெங்கே உள்ளன என்பதைத் தகுந்த ஆதாரங்களோடு கொடுத்திருக்கிறோம். அதுதொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீங்கள் அளித்த புகாரில் நடவடிக்கை இல்லை என்றால், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். புகார் அளித்ததோடு, தி.மு.க-வின் பணி முடிந்ததா?

நாங்கள் தொடர்ந்த அனைத்து வழக்குகளுமே நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது நாங்கள் தொடர்ந்த டான்சி வழக்கில்தான் அவர் சிறைக்குச் சென்றார். இப்போது உயிருடன் இருந்திருந்தால், சசிகலாவிற்குப் பக்கத்துச் சிறையில்தான் அவர் இருந்திருப்பார். தீர்ப்பு வழங்கப்படுவதில் சிறிது காலதாமதம் ஏற்படலாம். ஆனால், நிச்சயம் நீதி கிடைத்தே தீரும். அதுபோல, ஆளும்கட்சி ஆட்சியில் இருக்கும்போது இத்தனை வழக்குகளையும் நாங்கள் தொடுத்திருக்கிறோம். இதுவே நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பின்பு வழக்கு தொடர்ந்தால், அவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வார்கள். ஆனால், அனைத்து வழக்குகளையும் அவர்களின் ஆட்சிக்காலத்திலேயே நாங்கள் தொடர்ந்திருக்கிறோம்.

நங்கநல்லூர் கூட்டுறவு கட்டடச் சங்கம், தங்களின் பதவிக்காலத்தில், 1.50 கோடி ரூபாய் அளவிற்கு, மோசடி நடந்துள்ளது என எழுப்பிய புகார் குறித்து உங்களின் கருத்து என்ன?

1996 முதல் 2001-ம் ஆண்டுவரை நங்கநல்லுார் கூட்டுறவு கட்டடச் சங்கத் தலைவராகப் பதவி வகித்தேன். கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தக் காலகட்டத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது நான், டான்சி வழக்கு தொடர்ந்திருந்தேன். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுமே என்மீது ஏதாவது ஊழல் செய்துள்ளேனா என்று விசாரணை செய்ய உத்தரவிட்டார்கள். ஆனால், எந்த முகாந்திரமும் இல்லை என்று அந்த வழக்கு தள்ளுபடி ஆனது. இன்றைய ஆளும் கட்சியின்மீது தொடர்ந்து ஆதாரங்களுடன் நான் பல்வேறு வழக்குகளைத் தொடர்வதினால், என்மீது புகார் தெரிவித்த நபர், இன்றைய முதல்வரிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இப்படி ஒரு புகாரைத் தெரிவித்துள்ளார். அப்படி என்மீது வழக்கு தொடரப்படுமேயானால், அதை நான் சந்திக்கத் தயார்.

தொடர்ச்சியாக ஆளும் கட்சியினர் மீது ஊழல் புகார்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால், உங்களுக்கு அழுத்தங்களோ, மிரட்டல்களோ வந்திருக்கிறதா..?

பயங்கரமான மிரட்டல்கள் பல வந்திருக்கின்றன. ஜெயலலிதாமீது நான் தொடர்ந்த டான்சி வழக்கில் எனக்காக வாதாடிய சண்முகசுந்தரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 32 இடங்களில் வெட்டப்பட்டார், அவர். இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் தாண்டித்தான் நாங்கள் கட்சியில் பணியாற்றி வருகிறோம். இதெல்லாம் எங்களுக்குச் சர்வசாதாரணம். பிறப்பது ஒருமுறை... இறப்பது ஒருமுறை. அப்படிப்போகும் உயிர், கட்சிக்காகப் போகுமேயானால் சந்தோஷமே.

தி.மு.க-வின் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதே, அதுகுறித்து?

கருணாநிதி
கருணாநிதி

தலைவர் கலைஞர் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்துள்ளார். இதில் அவர்மீதோ, அவர் அமைச்சரவைமீதோ தொடரப்பட்ட எந்த வழக்கின்மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அதுபோல், தண்டனை கிடைக்கவில்லை. அதேநேரத்தில், அ.தி.மு.க அமைச்சரவையில் ஜெயலலிதா உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.