Published:Updated:

ஐயாயிரம் கோடி அபேஸ்... கொரோனாவுக்கு நடுவே ஒரு கொடூர கொள்ளை!

டாஸ்மாக் கொடூர கொள்ளை
பிரீமியம் ஸ்டோரி
டாஸ்மாக் கொடூர கொள்ளை

தமிழகம் முழுவதும் உள்ள பார்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியினரின் பினாமி பெயர்களில்தான் நடக்கின்றன.

ஐயாயிரம் கோடி அபேஸ்... கொரோனாவுக்கு நடுவே ஒரு கொடூர கொள்ளை!

தமிழகம் முழுவதும் உள்ள பார்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியினரின் பினாமி பெயர்களில்தான் நடக்கின்றன.

Published:Updated:
டாஸ்மாக் கொடூர கொள்ளை
பிரீமியம் ஸ்டோரி
டாஸ்மாக் கொடூர கொள்ளை
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 5,800. இவற்றின் ஒரு நாள் விற்பனை 80 கோடி ரூபாய்! மாதம் கணக் கிட்டால் 2,400 கோடி ரூபாய்! கடந்த 21 நாள்களில் ஏறத்தாழ 1,700 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் விற்பனையாகியிருக்கும்.

ஆனால், கடைகள் மூடப்பட்டு விட்டதால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் இந்த 1,700 கோடி ரூபாய் சரக்குகள், கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு, பல ஆயிரம் நபர்களால் பங்கிடப்பட்டுள்ளன.

அதிரவைக்கும் இந்தக் கணக்கை விவரிக்கிறார்கள் விவரமறிந்த டாஸ்மாக் ஊழியர்கள்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘மதுவிலக்கை அமல்படுத்தக்கோரிப் போராடும் சமூக ஆர்வலர்களின் கணக்குப்படி, தமிழகத்தில் சுமார் ஒரு கோடி குடிநோயாளிகள் இருக்கின்றனர். இவர்களில் 30 சதவிகிதம் பேரால், தினமும் குடிக்காமல் இருக்கவே முடியாது. இவர்களில் வசதியானவர்கள் பலரும், பல நாள்களுக்குத் தேவையான சரக்குகளை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொண்டனர். நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த ‘குடி’மகன்கள் பலரும் சேமிப்பைக் கொண்டும், சிலர் வட்டிக்கு வாங்கியும்கூட சரக்குகளைப் பதுக்கிவிட்டனர். மற்றவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இத்தகைய நபர்கள்தான் கள்ளச்சாராயம், பெயின்ட் அடிக்கப் பயன்படும் தின்னர், வார்னிஷ் எனப் புதுப்புது போதைகளை நாட ஆரம்பித்து, சிலர் உயிரிழந்துவிட்டனர். இன்னும் சிலர் தற்கொலை செய்துகொண்டனர்.

ஐயாயிரம் கோடி அபேஸ்... கொரோனாவுக்கு நடுவே ஒரு கொடூர கொள்ளை!

இந்த போதை தேடும் கும்பல்தான், டாஸ்மாக் கடைகளை உடைத்து சரக்குகளைக் கொள்ளை யடிக்கும் வேலையிலும் இறங்கியிருக்கிறது. கடைகள் மூடப்பட்ட ஒரு வாரத்திலேயே மாநிலம் முழுவதும் ஏராளமான டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்டன. இதை காரணமாகக் காட்டியே, டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்களை ஓரிடத்தில் பாதுகாப்பாக வைப்பதாகக் கூறி, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கல்யாண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் வைத்து போலீஸ் பாதுகாப்பும் போட்டனர். தமிழகம் முழுவதும் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான கடைகளில் உள்ள மதுபானங்கள் இவ்வாறு இடம் மாற்றப்பட்டன.

மேற்கண்ட இடங்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியினர் மற்றும் அந்தந்த இடங்களில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியினர் பரிந்துரைத்த இடங்கள்தான். எனவே, போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் அவர்களையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு, மதுபானங்களை எடுத்து விற்பது கனஜோராக நடக்கிறது. இப்படி மூன்றிலிருந்து ஐந்து மடங்கு வரை அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகின்றன’’ என்று விவரித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள பார்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியினரின் பினாமி பெயர்களில்தான் நடக்கின்றன. தி.மு.க ஆட்சியிலும் இதே நிலைதான். இந்த பார்களை நடத்தும் பலரின் கையில்தான் இப்போது மதுபானங்கள் பாதுகாப்பு தற்காலிக குடோன்களும் சிக்கியுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக, வெளியில் நடமாட்டமே இல்லாத காரணத்தால், இந்த குடோன்களிலிருந்து மதுபானங்களை எடுத்து விற்பனை செய்வது இவர்களுக்கு மிகவும் எளிதாகவுள்ளது.

ஐயாயிரம் கோடி அபேஸ்... கொரோனாவுக்கு நடுவே ஒரு கொடூர கொள்ளை!

பார் நடத்துவோர், டாஸ்மாக் ஊழியர்கள் குறிப்பாக ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர், டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகள் சிலர், வாகன ஓட்டுநர்கள், உள்ளூர் போலீஸார் என இந்த நெட்வொர்க் மாநிலம் முழுவதும் கோடிகளில் பிசினஸ் செய்துகொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் இவர்கள் பெறும் லாபம் பல மடங்கு அதிகம். வெறும் 110 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர், முதல் ஒரு வாரத்தில் 400 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. இப்போது இதன் விலை 750 ரூபாய் என்கிறார்கள். அப்படியானால், ஃபுல் பாட்டிலின் விலை என்ன, லாபம் என்ன என்பதை கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

பெரியசாமி - அன்பரசன் - தங்கமணி
பெரியசாமி - அன்பரசன் - தங்கமணி

கோவை - கணபதி பகுதியில், டாஸ்மாக் கடையின் பின்புறம் திறந்து பகிரங்கமாக விற்பனை செய்வதைப் பார்த்த ஏரியா மக்கள் அதிர்ந்து போய்விட்டனர். அத்திப்பாளையம் பகுதியில் ஒரு பாரில் இருந்து 35 சரக்குப் பெட்டிகளை போலீஸார் கைப்பற்றினர். அவை அனைத்தும் அருகில் உள்ள டாஸ்மாக் கடையிலிருந்து கொண்டுசெல்லப் பட்டவை.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே கல்பாக்கம் பைபாஸ் சாலையில் குறுகிய இடைவெளியில் மூன்று மதுக்கடைகள் இயங்கின. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் மாலையில் இந்தக் கடைகளின் ஒட்டுமொத்த மதுபானங்களும் போலீஸ் பாதுகாப்புடன் அருகில் இருக்கும் மண்டபத்துக்கு மாற்றப்பட்டன. அடுத்தடுத்த நாள்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த கடைகளின் மதுபானங்களும் இங்கு வந்து சேர்ந்தன. ஆனால், முன்பக்க வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட சூழலிலேயே ஆளுங் கட்சிப் பிரமுகர்களின் ஆசியுடன் பின்வழியாக ஏராளமான சரக்குகள் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுவிட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கடையில் இருந்த சரக்குகள் அனைத்தும் காலியாகி, ‘நோ ஸ்டாக்’ என்ற நிலைக்கு வந்துவிட்டதாகச் சொல்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள். சென்னை - கோயம்பேடு அருகே ஒரு டாஸ்மாக் கடையில் கூரையை உடைத்து சரக்குகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். அந்தக் காரணத்தைவைத்தே பெருமளவு சரக்கை கொள்ளைபோனதாகக் காண்பித்து, மீதி சரக்கை விற்று பெரும் லாபம் பார்த்திருக்கிறார்கள் சிலர்.

டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி) மாநிலத் தலைவர் பெரியசாமியிடம் இதுகுறித்து கேட்டதற்கு, ‘‘சிலர்மீது இத்தகைய புகார்கள் வந்துள்ளன. கடையின் கடைசி நாள் சேல்ஸ் தொகையைக் கட்டிய பிறகு, செகண்ட் சேல்ஸ் என்ற பெயரில் மிகப் பெரிய தொகையை சிலர் கட்டியிருக்கின்றனர். திருவண்ணா மலையில் இப்படி தொகையைச் செலுத்தி விட்டு பெருமளவு சரக்கை வேறொருவர் வீட்டில் ஸ்டாக் வைத்ததாகத் தெரிய வந்துள்ளது. உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றும் நடவடிக்கையில்லை. இடமாற்றம் செய்யப்பட்ட சரக்குகளைக் கணக்கெடுத் திருந்தால் இந்தப் பிரச்னையே இல்லை. தற்காலிக குடோன்களை முறைப்படி சீல் வைத்தார்களா, பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்திருக்கிறார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஸ்டாக் உள்ள டாஸ்மாக் கடைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை களை செய்யவேண்டும். இப்படி எதுவுமே செய்யாமல் பணியாளர்கள்மீது மட்டும் குற்றம்சாட்டக் கூடாது’’ என்றார்.

‘‘டாஸ்மாக் கடைகளின் சாவிகள் பார் உரிமையாளர்கள்மூலம் ஆளுங்கட்சிப் பிரமுகர்களிடம் சென்றுவிட்டதாகச் சொல்கிறார்களே?’’ என்று டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பரசனிடம் கேட்டதற்கு, ‘‘டாஸ்மாக் நிர்வாகம் ஓர் அரசுத்துறை. கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அரசுப் பணியாளர்கள். அரசும் அரசுப் பணியாளர் களும் இருக்கும் போது எங்களால் என்ன செய்ய முடியும்?’’ என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

குடியை ஒழிக்க இயக்கம் நடத்தும் சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘‘மார்ச் 24 அன்று கடைகளில் உள்ள மதுபானங்களை ஸ்டாக் எடுத்து, அந்தக் கடைகளின் சாவிகளை வாங்கி சேஃப்டி லாக்கரில் அரசு வைத்திருந்தால் பிரச்னையே இல்லை. கடைகளை மீண்டும் திறப்பதற்கு முன்பாக, அதிரடி சோதனை நடத்தி சரக்கு ஸ்டாக்குகளை செக் செய்தாலே, அதிக விலைக்கு சரக்குகளைக் கள்ளத்தனமாக விற்றது தெரிந்துவிடும். இதை அரசு உடனே செய்து, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

ஐயாயிரம் கோடி அபேஸ்... கொரோனாவுக்கு நடுவே ஒரு கொடூர கொள்ளை!

டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ்குமாரை தொடர்பு கொண்டோம். அவர் சேலத்தில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அவர் தரப்பில் நம்மிடம் பேசிய அதிகாரிகள், ‘‘முதல்வரிடம் பேசி அனுமதி வாங்கித்தான் திருமண மண்டபங்களுக்கு மதுபாட்டில்களை இடம் மாற்றினோம். டாஸ்மாக் அதிகாரிகள், பணியாளர்கள், ஊழியர்களில் நேர்மையானவர்கள் பலர் உள்ளனர். தவறு செய்தவர்கள் மீது அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்’’ என்றனர்.

மதுவிலக்குத் துறை அமைச்சர் தங்கமணியிடம் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, ‘‘டாஸ்மாக் கடைகளின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல... இருப்பில் உள்ள மதுபான பாட்டில்கள், விற்ற தொகை அனைத்துக்கும் கடையின் சூப்பர்வைஸரே பொறுப்பு. கடைகளின் சாவிகளை ஊழியர்களிடம் இருந்து வாங்கி சேஃப்டி லாக்கரில் வைப்பது, வேறுவித பிரச்னைகளை உருவாக்கும். கடைகளில் ஸ்டாக் குறையக் கூடாது; புகார்கள் வரக் கூடாது என்றுதான் நாங்கள் வலியுறுத்திவருகிறோம். அதையும் மீறி எங்கேயாவது அசம்பாவிதங்கள் நடந்திருந்தால் விசாரிப்போம். விசாரணை முடிவில் தவறு செய்வது தெரிந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

கோடிகளில் சம்பாதிப்பவர்களுக்கு இந்த நடவடிக்கையெல்லாம் ஒரு பொருட்டா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism