Published:Updated:

2000 கோடி டெண்டர் முறைகேடு... சந்தோஷ்பாபு மாற்றப்பட்டது ஏன்? #VikatanExclusive

2000 கோடி டெண்டர் முறைகேடு
2000 கோடி டெண்டர் முறைகேடு

விகடன் வெளிக்கொண்டு வந்த 2,000 கோடி அலைக்கற்றை முறைகேடு விவகாரத்தில் திடீர் திருப்பம். கொரோனா நேரத்தில் சத்தமில்லாமல் டெண்டரில் மாற்றங்களைச் செய்திருக்கிறது எடப்பாடி அரசு. சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டதன் பின்னணியும் இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது.

சம்பவம் 1 - டிசம்பர் 21, 2019

`2000 கோடி டெண்டர்... ஆட்டுவிக்கும் பெரும்புள்ளி... ஐ.ஏ.எஸ் போர்க்கொடி’ என்ற தலைப்பில், 25.12.2019 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் கவர் ஸ்டோரி வெளியானது.

`தமிழகத்தில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் ஒப்பந்தத்துக்கான 2,000 கோடி ரூபாய் ஒப்பந்தப்புள்ளியைப் பெற இரண்டு பெரிய நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்புக்குக் காரணம் என கை காட்டப்படும் நிறுவனத்துக்கு ஒட்டுமொத்த டெண்டரையும் வழங்க வேண்டும் என ஆளும் தரப்பு முடிவு செய்திருக்கிறது. இதற்கு அந்த துறையின் செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மறுக்கவே... அவருக்கு அரசு தரப்பிலிருந்து அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது. டெண்டரை வேண்டப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக ஆளும் கட்சி பெரும்புள்ளி ஒருவருக்கு 14 சதவிகிதம் வரை கமிஷன் பேசி சரிக்கட்டிவிட்டார்களாம்’ - இதுதான் ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பகுதியில் வெளியான செய்தியின் சாரம்.

ஜூனியர் விகடன் அட்டைப் படம்
ஜூனியர் விகடன் அட்டைப் படம்

சம்பவம் 2 - ஜனவரி 21, 2020

சந்தோஷ் பாபு
சந்தோஷ் பாபு

அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி யார் என்பதை ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரையில் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால், அவர் யார் என்பது கட்டுரை வெளியான ஒரு மாதத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருப்பதாக ஜனவரி 21-ம் தேதி செய்திகள் வெளியாகின. ஜூ.வி-யில் குறிப்பிட்டிருந்த அதிகாரிதான் சந்தோஷ் பாபு.

சம்பவம் 3 - ஜனவரி 21, 2020

`2,441 கோடி ரூபாய் மதிப்பிலான அதிவேக அலைக்கற்றை திட்டத்துக்குப் பொறுப்பான ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு திடீரென விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்திருப்பது ஏன்? அழுத்தம் கொடுத்தது ஐ.டி துறை அமைச்சரா?' என ஜனவரி 21-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கேள்வி எழுப்பியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சம்பவம் 4 - ஜனவரி 28, 2020

தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ் பாபு, தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்படுகிறார் என அரசு அறிவித்தது. அதோடு, தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.சண்முகம் அருங்காட்சியகங்களின் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். சண்முகம் இடத்துக்கு ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

சம்பவம் 5 - ஜனவரி 27, 2020

சந்தோஷ் பாபு
சந்தோஷ் பாபு

`டெண்டர் முறைகேட்டுக்கு ஒத்துழைக்காத சந்தோஷ் பாபுவை திடீரென மாற்றம் செய்த எடப்பாடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. 2,441 கோடி தமிழ்நெட் திட்டத்துக்கான டெண்டர், அதிகாரிகள் மாற்றம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையின் தீவிர விசாரணை தேவை' என அறிக்கை விடுகிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் அறிக்கை
ஸ்டாலின் அறிக்கை

இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாக கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏப்ரல் 15-ம் தேதி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனை சம்பவங்களும் பாரத் நெட், தமிழ் நெட் விவகாரத்தில் நடந்தவை. இதில் நடந்த முறைகேட்டை தெரியும் முன் இந்தத் திட்டம் பற்றித் தெரிந்துகொள்வது நல்லது.

பாரத் நெட், தமிழ் நெட் என்றால் என்ன?

அனைத்து மாநில கிராம ஊராட்சிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து அரசின் சேவைகளை மக்கள் பயன்பெறும் வகையில் `பாரத் நெட்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. `இந்தத் திட்டத்தைத் தமிழக அரசின் மூலம்தான் செயல்படுத்த வேண்டும்' என்று 2015-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைக்க... தமிழகத்திலேயே செயல்படுத்த ஒப்புதல் அளிக்கிறது மத்திய அரசு.

சட்டசபையில் ஜெயலலிதா
சட்டசபையில் ஜெயலலிதா

இதன் பிறகுதான் 2015 செப்டம்பர் 14-ம் தேதி சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார் ஜெயலலிதா. `தமிழகத்தின் 12,524 கிராம ஊராட்சிகளும், ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்படும். அரசின் பல சேவைகளைக் கிராமங்களில் இருந்தே இணையம் மூலம் பெற்று மக்கள் பயனடையும் வகையில் 3,000 கோடி செலவில் மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழக அரசே செயல்படுத்தும். இதற்காகத் தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் என்ற தனி அமைப்பு உருவாக்கப்படும்’ என விதி எண்: 110ன் கீழ் அறிக்கையில் சொன்னார் ஜெயலலிதா.

`தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் நிறுவனம்' அமைப்பதற்கான அரசாணை 2016-ம் ஆண்டு வெளியிடப்படுகிறது. தமிழக அரசின் பங்கு முதலீடாக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான பூர்வாங்கப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. `பாரத் நெட்’ திட்டத்தை 3,000 கோடி ரூபாயில் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2017 ஏப்ரல் 25-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையொப்பமானது. 12,524 கிராம பஞ்சாயத்து அமைப்புகள், 528 பேரூராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 15 மாநகராட்சிகளில் அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா இணைப்புக்கான திட்டம் மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த பாரத் நெட் திட்டத்தில் நடக்கும் டெண்டர் முறைகேட்டைத்தான் கடந்தாண்டு இறுதியில் விகடன் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வு கோரியது கட்டுரைக்கு வலு சேர்த்ததோடு பல சந்தேகங்களை எழுப்பியது.

ஸ்டாலின் அறிக்கை
ஸ்டாலின் அறிக்கை

``விருப்ப ஓய்வில் செல்லும் அளவுக்கு அவருக்கு அழுத்தம் கொடுத்தது தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சரா?'' என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரோ முதல்வர் எடப்பாடியோ எந்த விளக்கத்தையும் சொல்லவில்லை.

ஆனால், எதிர்பார்த்ததைப் போலவே தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்தோஷ் பாபு மாற்றப்பட்டார். அவரது முழுப் பொறுப்பிலிருந்த தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனின் (தமிழ்நாடு கண்ணாடி வலையமைப்பு நிறுவனம்) நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.சண்முகமும் தூக்கியடிக்கப்பட்டார். அமைச்சர் தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாக (டி.ஆர்.ஓ) இருந்து 2019 நவம்பரில் ஐ.ஏ.எஸ் நிலைக்கு உயர்த்தப்பட்ட ரவிச்சந்திரன் தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

சந்தோஷ் பாபு
சந்தோஷ் பாபு

இந்தப் பின்னணியில் அதிவேக அலைக்கற்றை 3,000 கோடி ரூபாய் திட்டத்தில் டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினார்கள். ``பாரத் நெட் அ.தி.மு.க ஆட்சியில் உருப்படியாக நடக்குமா? இந்தத் திட்டத்தை அ.தி.மு.க அரசு ஊழல் மயமாக்கி விடும் என்பதற்கான ஆதாரங்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள் நடந்திருக்கின்றன'' எனச் சொன்னார் ஸ்டாலின்.

அறப்போர் இயக்கம்
அறப்போர் இயக்கம்

``திட்டத்தின் டெண்டர், அது தொடர்பான கோப்புகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் உடனடியாக கைப்பற்றி, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் நாடே பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆஃப்டிக் பைபர் செயல்படுத்தும் திட்டத்தில் டெண்டரில் மாற்றங்கள் செய்திருக்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. ஊழல் அரங்கேற்றுவதற்கான வேலைகள் மற்றும் டெண்டரில் செட்டிங் வேலைகளைத் தகவல் தொழில்நுட்பத் துறை செய்திருக்கிறது என அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருக்கிறது.

அறப்போர் இயக்கம்
அறப்போர் இயக்கம்

1950 கோடி மதிப்புள்ள டெண்டர்களை நான்கு டெண்டர்களாக டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் அரசு வெளியிட்டது. இந்த டெண்டர்கள் மற்றும் அது தொடர்பான நிபந்தனை விதிகள் அனைத்தும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் செயற்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2019 டிசம்பர் 6-ம் தேதி வெளியிடப்பட்டது. அதாவது இந்த டெண்டர்கள் பலர் போட்டி போடும் அளவுக்குச் செயல்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையில் ஜனவரி மாதம் சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வில் சென்றதாகத் தகவல் வெளியானது. ``டெண்டர் விதிகளில் பெரிய மாற்றங்கள் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஓரிரு நிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்றங்கள் செய்ய சந்தோஷ் பாபு நிர்ப்பந்தம் செய்யப்பட்டார்'' என அப்போது தகவல்கள் வெளியாகின. சந்தோஷ் பாபு ஒத்துழைக்க மறுத்ததால் அவரை தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றிவிட்டு ஹன்ஸ் ராஜ் வர்மாவுக்குக் கூடுதல் பொறுப்பாக அந்தப் பதவியைக் கொடுத்தார்கள். தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். `இந்த மாற்றங்களைத் திரும்பப் பெற வேண்டும். டெண்டர் நேர்மையாக நடைபெற வேண்டும்' எனச் சொல்லி தலைமைச் செயலாளருக்கு ஜனவரி 28-ம் தேதி மனு அனுப்பியது அறப்போர் இயக்கம்.

ஜெயராம் வெங்கடேசன்
ஜெயராம் வெங்கடேசன்

அதன்பின் என்ன நடந்தது என்பதை அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் நம்மிடம் சொன்னார். ``மீடியாவின் பார்வை இந்த நான்கு டெண்டரின் மீது இருந்ததால் எந்த மாற்றமும் செய்யாமல் அதே நேரம் டெண்டரையும் முடிக்காமல் டெண்டரின் இறுதி நாள்களை ஒவ்வொரு மாதமும் தள்ளிக்கொண்டே போனார்கள். கொரோனா பாதிப்பால் இந்தியாவே ஊரடங்கில் இருந்த காலத்தில் அனைவரின் கவனமும் அதிலிருந்த நேரம் பார்த்து திடீரென ஏப்ரல் 15-ம் தேதி மிகப் பெரிய மாற்றங்கள் சட்டவிரோதமாகச் செய்யப்பட்டிருக்கின்றன.

டெண்டரில் பங்கு பெற விரும்பும் நிறுவனங்களின் குறைந்தபட்ச வருடாந்திர வர்த்தகம் (Turn over) மற்றும் அனுபவத்தேவையை 300 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறார்கள். உதாரணமாக பேக்கேஜ் B டெண்டரில் கடந்த 3 ஆண்டுகள் சேர்த்து 615 கோடி ரூபாய் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கடந்த மூன்று வருடங்களில் சராசரியாக ஆண்டுக்கு 615 கோடி ரூபாய் இருக்க வேண்டும் என மாற்றியிருக்கிறார்கள். இதே போலத்தான் ஆப்டிகல் ஃபைபர் பதித்த அனுபவமும் கடந்த 3 வருடங்கள் சேர்த்து 204 கோடி ரூபாய் மதிப்புக்கு அனுபவம் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வோர் ஆண்டும் 204 கோடி ரூபாய் மதிப்புக்கு அனுபவம் இருக்க வேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது. இப்படிதான் 4 பேக்கேஜ் டெண்டர்களிலும் பெரிய அளவில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.

Representational Image
Representational Image

பொதுவாக ஒப்பந்தப்புள்ளிகளில் மாற்றங்கள் நடக்கும். அதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், பெரிய அளவில் மாற்றங்கள் நடப்பது என்பது புதிய டெண்டருக்கு சமானம். தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இந்த முடிவை எடுக்கும் அதிகாரம் கிடையாது. தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் செயற்குழுவால் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு டெண்டரை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் தகவல் தொழில்நுட்பத் துறை மாற்றுவது சட்டவிரோதம். இப்படியான டெண்டர் மாற்றங்கள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் இலக்கான ஆரோக்கியமான போட்டிக்கு எதிரானது. குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விதிகளை மாற்றியிருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. கொரோனாவால் தமிழகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதுபோன்ற டெண்டர் ஊழல்கள் நடத்துவது சரியா?'' என்றார் ஜெயராம் வெங்கடேசன்.

இந்த முறைகேடு தொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் அறப்போர் இயக்கம், தலைமைச் செயலாளர், மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை செயலாளர், மத்திய விஜிலென்ஸ் கமிஷன் ஆகியோருக்குப் புகார் அளித்திருக்கிறது. டெண்டர் மாற்றங்கள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதற்கு காரணமான தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்டு செய்ய வேண்டும். இந்த முறைகேட்டுக்கு காரணமாக அரசு அதிகாரிகள், நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை மற்றும் கிரிமினல் குற்ற வழக்குகள் தொடர வேண்டும் எனவும் கேட்டிருக்கிறது அறப்போர் இயக்கம்.

ஸ்டாலினுடன் சண்முகம்
ஸ்டாலினுடன் சண்முகம்

``நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத் தங்கள் விருப்பம் போல் அமைச்சர்களும், முதல்வரும் பந்தாடுவதற்கும், ஆட்டிப் படைப்பதற்கும் எப்படி தலைமைச் செயலாளர் சண்முகம் இடமளிக்கிறார்?'' என ஜனவரியில் வெளியிட்ட அறிக்கையில் கேள்வி எழுப்பியிருந்தார் ஸ்டாலின். அவரின் கவனத்துக்கும் இந்த விஷயத்தைக் கொண்டு போயிருக்கிறது அறப்போர் இயக்கம்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இத்தனை விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் என்ன செய்து கொண்டிருந்தார்? ``கொரோனா ஊரடங்கில் பணியாற்றும் நீங்கள் எல்லோரும் கடவுளுக்கு சமம்'' எனச் சொல்லி தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்.

இப்படியொரு அசாதாரணமான சூழலில் ஊரைத் தூய்மை செய்யும் பணியாளர்கள் கால்களில் ஓர் அமைச்சர் விழுவது நல்ல விஷயம்தான். அப்படியே கொரோனா ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் நடக்கும் இந்த 2,000 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டையும் அமைச்சர் தடுத்து தூய்மையான நிர்வாகத்துக்கு வழி வகுத்தால் ஊரே அவரைக் கொண்டாடும்.

அடுத்த கட்டுரைக்கு