Published:Updated:

‘‘அரசுப் பணியில் நீடிக்கும் முறைகேடு ஆசாமிகள்!’’

தேர்வாணைய தகிடுதத்தங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

பிரீமியம் ஸ்டோரி

அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் நடத்திய குரூப்-4, குரூப்-2 தேர்வுகள் மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போலீஸ் தேர்வு ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் வெளியாகி, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. ஆனால் வழக்கை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி போலீஸார், சில புரோக்கர்களை மட்டும்தான் கைது செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் பல பெருந்தலைகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற தகவல்கள் சுற்றும் நிலையில், `சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை’ என்றுதான் அனைத்து தரப்பினரும் சொல்லிவருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.ஸி
டி.என்.பி.எஸ்.ஸி

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரான எட்டிமங்கலம் ஸ்டாலின், ‘2006-ம் ஆண்டிலிருந்து டி.என்.பி.எஸ்.சி நடத்திய அனைத்து தேர்வுகளையும் விசாரிக்க வேண்டும். இந்த விசாரணையை சி.பி.ஐ போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இதனால், கடந்த 14 ஆண்டுகளில் முறைகேடாக அரசுப்பணிகளில் சேர்ந்திருக்கும் உயரதிகாரிகள் உட்பட பலரும் ஆடிப்போய் உள்ளனர்.

இந்த வழக்கு குறித்து வழக்கறிஞர் எட்டிமங்கலம் ஸ்டாலினிடம் பேசினோம். ‘‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் சமீபத்தில் தான் முறைகேடு நடந்திருப்பதுபோல் ஒரு மாயத்தோற்றத்தை சிலர் உருவாக்கிவருகின்றனர். அது உண்மையல்ல. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முறைகேடுகள் நடந்துவருகின்றன. 2006-ம் ஆண்டிலிருந்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீது புகார்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. 2017-ம் ஆண்டில் நடந்த குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் உள்ளது. இப்போது குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேட்டை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி-யினர், புரோக்கர்கள் சித்தாண்டி, ஓம்காந்தன், ஜெயக்குமார் உட்பட சிலரை மட்டும் கைதுசெய்துள்ளனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆளுங்கட்சியினர் லஞ்சம் வாங்கிக்கொண்டு தேர்வாணையத் தலைவரையும் உறுப்பினர்களையும் நியமித்துவருவதால்தான் முறைகேடுகள் நடக்கின்றன. 2011-ம் ஆண்டில் அப்போதைய தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் அந்த வழக்குகள் இன்றும் நிலுவையில்தான் உள்ளன. அந்தச் சமயத்தில் முறைகேடாக அரசுப்பணியில் சேர்ந்த பலரும் பதவி உயர்வுகளைப் பெற்று இப்போதும் பணியில்தான் இருக்கின்றனர். இதேபோல் குரூப்-1 தேர்வு குறித்த வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் பல முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் ‘முறைகேடாகப் பணியில் சேர்ந்தார்’ என்ற காரணத் துக்காக ஒருவர்கூட பணிநீக்கம் செய்யப்பட வில்லை. இதிலிருந்தே, போலீஸாரின் நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொள்ள முடியும்.

இந்த வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ-க்கு மாற்றி, இதுவரை தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் இருந்தவர்கள், கோச்சிங் சென்டர் நடத்திவருபவர்கள் என அனைவரையும் நேர்மையாக விசாரித்து நடவடிக்கை எடுத்தால்தான், தகுதியுள்ளவர்கள் அரசுப்பணியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால், முறைகேடு செய்து பணியில் சேர்ந்த அதிகாரிகளின் கூடாரமாக அரசு அலுவலகங்கள் மாறி, ஊழல் தலைவிரித்து ஆடத் தொடங்கிவிடும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘2015-ம் ஆண்டில் நடந்த குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. அதனால், அந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என, மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்தத் தேர்வில் தேர்ச்சிபெற்ற 74 பேரில் 63 பேர் சென்னையைச் சேர்ந்த இரண்டு பயிற்சி மையங்களில் படித்தவர்கள் எனப் புகார் எழுந்தது. அந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், பயிற்சி மையம் நடத்துபவர்கள், பேராசிரியர்கள், தேர்வாணைய அலுவலர்கள் என்று பலரிடம் விசாரணை நடத்தினர். ‘இந்த வழக்கை முழுமையாக நடத்த தமிழக அரசு முட்டுக்கட்டை போடு கிறது. அதனால், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய கோரிக்கைவைத்துள்ளார். அதை அனுமதித்துள்ள உயர் நீதிமன்றம், பிப்ரவரி 28-ம் தேதிக்கு வழக்கைத் தள்ளி வைத்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘‘2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கான பணியமர்த்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதில் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஆதாரங்கள் கிடைத்துள் ளன. மார்ச் மாதம் 19-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது பல உண்மைகள் வெளிவரும்’’ என்று திரியைப் பற்றவைத்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

ஆக, அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும் முறைகேடுகள் நடந்துள்ளன என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. அதனால், வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்படுமா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு