Published:Updated:

காங்கிரஸைக் கவிழ்த்த டாப் 8 ஊழல் குற்றச்சாட்டுகள் #EndCorruption

துரைராஜ் குணசேகரன்

அன்றுதொட்டு இன்று வரை இந்தியாவில் அதிகமுறை ஆட்சியில் இருந்த, காங்கிரஸ் கட்சியின்மீது சுமத்தப்பட்ட சில முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து இந்தக் கட்டுரைத் தொகுப்பில் காண்போம்...

காங்கிரஸ்  ஊழல்
காங்கிரஸ் ஊழல்

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்போம்" என்பதுதான் பலரின் பிரதான தேர்தல் பிரசாரமாக உள்ளது. எந்தக் கட்சியினர் ஆட்சிக்கு வந்தாலும், அந்தக் கட்சியின் மீது எதிர்க்கட்சியினர் வைக்கும் பிரதான குற்றச்சாட்டு, ஊழல் குற்றச்சாட்டாகத்தான் இருக்கும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
உலக ஊழல் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? #EndCorruption

போபர்ஸ் ஊழல்:

ஸ்வீடன் நாட்டு போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்குவதற்காக1986-ம் ஆண்டு, மார்ச் 24-ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. 1,437 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய அரசியல் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் 64 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த ஊழல் விவகாரத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பெயரும் அடிபட்டது.

பீரங்கி
பீரங்கி

இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக போபர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்டின் அர்ட்போ, இடைத்தரகர் குவாத்ரோச்சி, சத்தா, ராஜீவ் காந்தி, பாதுகாப்புச் செயலாளர் பட்நாகர், தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகையைப் பதிவுசெய்தது. இந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாக 1989-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது.

ஆதர்ஷ் ஊழல்

கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு வழங்குவதற்காக அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்ட ஆதர்ஷ் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தக் குடியிருப்புகளில், அரசியல்வாதிகளுக்கும், உயிருடன் உள்ள ராணுவ உயரதிகாரிகளுக்கும், அதிகாரிகளின் உறவினர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு
ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களிலும் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் அசோக் சவான் பதவி விலகினார்.

நிலக்கரி ஒதுக்கீடு ஊழல்:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் நிலக்கரித் துறை அமைச்சகம் செயல்பட்ட காலத்தில், நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாகச் சர்ச்சை எழுந்தது. சுமார் 1 லட்சத்து 86,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

நிலக்கரிச் சுரங்கம்
நிலக்கரிச் சுரங்கம்

இந்தக் குற்றச்சாட்டு காரணமாக, 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

காமன்வெல்த் விளையாட்டு ஊழல்:

2010-ம் ஆண்டு புதுடெல்லியில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றபோது, சிறிதும் பெரிதுமாகப் பல்வேறு வகையில் 95 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு ஊழல் தாண்டவமாடியதாகப் புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

சுரேஷ் கல்மாடி
சுரேஷ் கல்மாடி

இப்போட்டியின் அமைப்பாளராகச் செயல்பட்ட சுரேஷ் கல்மாடி, இவ்வழக்கில் முதன்மையானவராகக் கருதப்பட்டார். காமன்வெல்த் ஊழல், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது.

ஓட்டு போட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம்:

கடந்த 2008-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பி.ஜே.பி எம்.பி-க்கள் பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்த பணம்
பி.ஜே.பி எம்.பி-க்கள் பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்த பணம்
லோக்சபா டி.வி.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பி.ஜே.பி உறுப்பினர்களுக்கு பத்து கோடி ரூபாய் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சதீஷ் சர்மா என்பவர்தான் அந்தப் பணத்தைக் கொடுத்தார் என பி.ஜே.பி எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

டாட்ரா டிரக் ஊழல்:

600 `டாட்ரா' ரக வாகனங்களை இந்திய ராணுவத்துக்கு வாங்குவதில், சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக, இடைத்தரகர் மூலம் சில ராணுவ உயரதிகாரிகள் 750 கோடி ரூபாய் வரை கமிஷன் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

டாட்ரா டிரக்
டாட்ரா டிரக்

இந்தக் குற்றச்சாட்டு குறித்து முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங், "டாட்ரா நிறுவனத்தைச் சேர்ந்த சிலர், எனக்குக்கூட 14 கோடி ரூபாயை லஞ்சமாகத் தர முன்வந்தனர். நான் அதை மறுத்துவிட்டேன்" எனக் கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றுவருகிறது.

ஹெலிகாப்டர் ஊழல்:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடமிருந்து இங்குள்ள முக்கியப் பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஹெலிகாப்டர்
ஹெலிகாப்டர்

இதில், இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி தியாகி உட்பட பல்வேறு அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தைப் பெற ரூ.3,600 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய இடைத்தரகரான பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல், கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுவருகிறது.

சோலார் பேனல் ஊழல்:

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சோலார் பேனல் பொருத்தித் தருவதாகக் கூறி, மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் சரிதா நாயர் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இந்தத் திட்டத்துக்காக முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.1.60 கோடி லஞ்சம் கொடுத்ததாக பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் குருவில்லா தெரிவித்திருந்தார்.

சோலார் பேனல்
சோலார் பேனல்

ஓய்வுபெற்ற நீதிபதி சிவராஜின் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் இந்த அறிக்கை, கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனடிப்படையில், "இந்த முறைகேடு தொடர்பாக உம்மன் சாண்டிக்கு எதிராக ஊழல் தடுப்பு விசாரணை மேற்கொள்ளப்படும்" என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

மேற்கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தவிர்த்து, மேலும் சில குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் கட்சியின் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.