Published:Updated:

`பிப்ரவரி கெடு; வசூல் வேட்டை; ரொக்கப் பணம்!’- திடீர் ரெய்டில் சிக்கிய ஊட்டி நகராட்சி அலுவலர்கள்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

`நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகம் வசூலித்து தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்வார்கள். இன்று வசமாக மாட்டிக்கொண்டனர்’

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி அலுவலகத்துக்கு எந்த வேலையாகச் சென்றாலும் அலுவலர்களைத் தனியாக கவனித்தால் மட்டுமே வேலை நடக்கும். `ஏன் தரவேண்டும்?' என கேள்வி கேட்டால், இழுத்தடித்து அலைக்கழிக்கப்படுவார்கள். இதுதான் ஊட்டி நகராட்சி அலுவலகத்தின் எழுதப்படாத விதியென அப்பாவி மக்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

ஊட்டி நகராட்சி அலுவலகம்
ஊட்டி நகராட்சி அலுவலகம்

இந்த நிலையில், ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் புதுப்பிக்க வேண்டிய வணிக நிறுவனங்களின் உரிமங்களை முன்கூட்டியே புதுப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கான தொகையை பிப்ரவரி மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் தங்களின் நிறுவன உரிமம் புதுப்பிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

Vigilance
Vigilance

இதை சாதகமாக்கிக்கொண்ட நகராட்சி அதிகாரிகள் சிலர் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக வசூலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

நேற்று மாதக் கடைசி என்பதால் கையில் ஆவணத்துடன் கூட்டம் அலைமோதியது. கடைசிநாள் என்பதால் வழக்கத்தைவிட வசூல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் ஆவேசமடைந்த சிலர், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இதையடுத்து, நேற்று மாலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள பொது சுகாதார அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 9,000 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 4 அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரவைக்கும் பெட்ரோல் பங்க் மோசடி... ஊட்டி சுற்றுலாப் பயணிகளே உஷார்! #TamilnaduCrimeDiary

இந்தச் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ``எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டோம். இதில் பாஸ்கரன், மகாராஜன், ஞானசேகரன், தியாகராஜன் ஆகிய நான்கு சுகாதார ஆய்வாளர்களிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 9,080 ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இது குறித்து ஊட்டி நகராட்சி ஊழியர் ஒருவர், ``ஊட்டி நகராட்சியில் 7 சுகாதார ஆய்வாளர்கள் உள்ளனர். இதில் இந்த 4 ஆய்வாளர்களும் கடந்த 15 நாள்களாக லஞ்சப்பணத்தை குவித்து வந்தனர். நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகம் வசூலித்து தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்வார்கள். இன்று வசமாக மாட்டிக்கொண்டனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு