வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றும் நகை, பணம் யாருக்குச் சொந்தம்? #DoubtOfCommonMan

ஒருவர் வீட்டுக்கு வருமானத் துறை ரெய்டு வருகிறது என்றால், அங்கே முறையற்ற பணமோ அல்லது இதர விலைமதிப்புமிக்க பொருள்களோ இருக்கின்றன என்பது 100% உண்மையாகிறது.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் ``தமிழகத்தில் வருமானவரி சோதனை நடப்பது அன்றாட நிகழ்வாகி வருகிறது. அவ்வப்போது பணம், நகைகள் கைப்பற்றப்படுவதாக செய்திகள் வருகின்றன. அப்படிக் கைப்பற்றப்படும் பணம், நகைகளை என்ன செய்வார்கள்? திரும்பவும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்து விடுவார்களா? " என்ற கேள்வியை சீனிவாச சம்பந்தம் என்ற வாசகர் எழுப்பியுள்ளார். அவரது கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது.
வருமான வரிச் சோதனையில் பிடிபடும் நகைகள் மற்றும் பணம் எங்கே கொண்டு செல்லப்படும் என்கிற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது. வருமான வரி சோதனையில் இரண்டு வகை உண்டு. தேர்தல் நேரத்தின்போது வாகனங்களிலோ மற்ற இடங்களிலோ பிடிபடுகிற பணம். இந்தப் பணம், அந்தந்த மாநிலத்தின் கருவூலத்துக்குக் கொண்டு செல்லப்படும்.
வருமான வரித்துறையினர், குறிப்பிட்ட நபர்களின் வீடுகளுக்குச் சென்று சோதனை செய்வது இரண்டாவது வகை. இந்த வகையில், ஒரு முழுமையான ஆவண தயாரிப்பு மற்றும் குழு தயாரிப்புக்குப்பின், குறித்த இடங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் ரெய்டுக்கு செல்வது வழக்கம்.
வருமானத் துறை அதிகாரிகளுக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் மேலிடத்திருந்தோ அல்லது மறைமுக நபர்களிடமிருந்தோ கிடைத்தால் மட்டும்தான் சர்ச் வாரன்ட் வாங்கிக்கொண்டு அந்த வீட்டுக்குள் அல்லது இடத்துக்குள்ளேயே நுழைவார்கள்.

முதலில் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு சோதனை பற்றிய விளக்கங்களைக் கூறி தெளிவுபடுத்திக்கொள்வார்கள். பின் அந்த இடத்தில் தேவையான மருத்துவ சேவையை தயார்படுத்திக்கொள்வர். அலைபேசி, தொலைபேசி என அனைத்து தகவல்தொடர்பு சாதனங்களையும் துண்டித்துவிட்டு சோதனையிடத் தொடங்குவார்கள்.
ரொக்கம், நகை, பத்திரங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைச் சோதனையிட்டு அங்கிருப்பவர்களின் வாக்குமூலம் மற்றும் சரியான ஆவணங்கள், ஆவணங்கள் இல்லாத ரொக்கம் மற்றும் இதர பொருள்களைப் பறிமுதல் செய்வது வழக்கம். இதுவரைக்குமான தகவலைத்தான் வருமான வரித்துறை மீடியாக்கள் வாயிலாக மக்களுக்குத் தெரியப்படுத்துகிறது.
பிடிபடும் பணமோ அல்லது தங்கமோ என்ன ஆகிறது? என்பதைத் தெரிந்துகொள்ள ஆடிட்டர் கோபாலகிருஷ்ண ராஜூவிடம் பேசினோம்.
``வருமான வரி ரெய்டின்போது பிடிபடும் பணம் மற்றும் தங்கம் மற்றும் இதர பொருள்களுக்கு உரிய ஆவணங்களை அதன் உரிமையாளர் சமர்ப்பித்துவிட்டால், அந்தப் பணத்தையும் தங்கம் மற்றும் இதர பொருள்களையும் அதன் உரிமையாளர்களிடமே வருமான வரித்துறை கொடுத்துவிடும்.
ஒருவேளை அதன் உரிமையாளர் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், பணம், தங்கம் மற்றும் இதர பொருள்களுக்கான மொத்த மதிப்புக்கும் சேர்த்து வரி எவ்வளவு எனக் கணக்கிட்டு பார்க்கும்.
வரிக்கும், பிடிபட்ட பணம் மற்றும் பொருள்களின் மதிப்புக்கும் சரியாக இருந்தால் அதை வருமான வரித்துறை வைத்துக்கொள்ளும். போதவில்லை என்றால் அதற்கான கூடுதல் தொகையை, அவரிடமிருந்து வருமான வரித்துறை பெறும். இப்படிப் பெறக்கூடிய, பிடிபடுகிற பணமும், நகையும் ரிசர்வ் வங்கியின் வருமான வரித்துறையின் கணக்கில் வரவு வைக்கப்படும். அதுவும் அரசாங்கத்தின் கருவூலத்தில் சேர்ந்ததைப் போலத்தான்.
இந்த நடவடிக்கைகளுக்கு இடையில், பிடிபட்ட பணமும், ரொக்கமும் அதிகபட்சமாக 180 நாள்கள் வரை வருமான வரித்துறையினரிடம்தான் இருக்கும்.
அந்தக் காலகட்டத்துக்குள் அதன் உரிமையாளர் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். தவறும் பட்சத்தில்தான் சொத்துகள் மொத்தமும் கருவூலத்துக்கு சென்றுவிடும்.

ஒருவர் வீட்டுக்கு வருமானத் துறை ரெய்டு வருகிறது என்றால், அங்கே முறையற்ற பணமோ அல்லது இதர விலைமதிப்பு மிக்க பொருள்களோ இருக்கின்றன என்பது 100% உண்மையாகிறது. ஏனெனில், வருமானத் துறை அதிகாரிகளுக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் மேலிடத்திருந்தோ அல்லது மறைமுக நபர்களிடமிருந்தோ கிடைத்தால் மட்டும்தான் சர்ச் வாரன்ட் வாங்கிக்கொண்டு அந்த வீட்டுக்குள் அல்லது இடத்துக்குள்ளேயே நுழைவார்கள்.
முறையில்லா ஆவணங்கள் அல்லது கணக்கில் வராத பணம் மற்றும் தங்கம் பிடிபட்டால், அது மறுபடியும் உரிமையாளர்களிடம் போய்ச் சேருவது அரிதினும் அரிதாகத்தான் நடக்கும். ஏனெனில் அதற்கான ஆவணங்கள் இருந்திருந்தால்தான் அதை அப்போதே அவர்கள் காட்டியிருப்பார்களே! இல்லை என்பதுதானே இங்கே பிரச்னை" என்று முடித்தார் அவர்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!