Published:Updated:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு... சிதம்பரத்தைச் சிக்கவைத்த பத்திரிகையாளர் சொன்னது என்ன?

சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. சி.பி.ஐ பதிந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு இன்று ஜாமீனும் கிடைத்தது. ஆனால், இதே வழக்கில் ப.சிதம்பரத்தை ஏற்கெனவே அமலாக்கத் துறை கைதுசெய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்ட ப.சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்ட ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, இந்த வழக்கில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையில் ஐ.என்.எக்ஸ் மீடியாவில் எடிட்டராக இருந்த வீர் சங்வியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. வீர் சங்வி அளித்த ஒப்புதல் வாக்குமூலம் ப.சிதம்பரத்துக்கு எதிரான முக்கியத் துருப்புச்சீட்டாகக் கருதப்படுகிறது. சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்று பார்ப்போம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி
ஐ.என்.எக்ஸ் மீடியா பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி

"கடந்த 2007-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் நிறுவனர்களான பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி தங்கள் நிறுவனத்துக்கு வெளிநாட்டு நிதி திரட்ட திட்டமிட்டனர். இதற்காக, நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தைச் சந்திக்க டெல்லி சென்று ஒபராய் ஹோட்டலில் தங்கினர். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் முகர்ஜி தம்பதி நாடாளுமன்றத்தில் வடக்கு பிளாக்கில் உள்ள சிதம்பரத்தின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தனர். இதற்கு ஆதாரமாக இதே காலகட்டத்தில் டெல்லி ஒபராய் ஹோட்டலில் முகர்ஜி தம்பதி தங்கிய அறைக்கான பில் மற்றும் ஹோட்டலிலிருந்து நாடாளுமன்றத்துக்குச் சென்ற கார் பில் ஆகியவை ஆதாரமாக உள்ளன. ப.சிதம்பரத்துடனான முதல் சந்திப்பின்போது, உடன் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் எடிட்டர் வீர் சங்வியும் இருந்துள்ளார். 2007- ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்ட அனுமதியளிக்கப்பட்டது. ரூ.4.62 கோடி திரட்ட அனுமதி கிடைத்தது. ஆனால், ரூ.403.07 கோடியை விதிமுறைகளை மீறி ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் நிதியாகத் திரட்டியது. அனுமதிக்கப்பட்டதைவிட, இது 90 மடங்கு அதிகம். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் ஒரு பங்கின் அடிப்படை விலை ரூ.10 மட்டுமே. ஆனால், பங்கு ஒன்றின் விலை ரூ.862.15 என்று விற்கப்பட்டது.

நிதி திரட்டப்பட்டதும் ஐ.என்.எக்ஸ் மீடியாவில் (தற்போது 9 எக்ஸ் மீடியா) இருந்து ரூ.40.91 கோடி தொகை இதே நிறுவனத்தின் துணை நிறுவனமான ஐ.என்.எக்ஸ் நியூஸ் பிரைவேட் லிமிடெட் (தற்போது டைரக்ட் நியூஸ்) நிறுவனத்துக்கு மடை மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு 2008-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி நிதியமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார். அப்போதைய, காங்கிரஸ் அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரியா ரஞ்சன்தாஸ் முன்ஷிக்கு ஐ.என்.எக்ஸ் மீடியாவில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தெரிய வந்தது. இதையடுத்து, ரஞ்சன்தாஸ் முன்ஷி வருமானவரித் துறைக்கு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவலும் ப.சிதம்பரத்துக்குத் தெரியும்.

வீர் சங்வி
வீர் சங்வி
அமலாக்கத் துறை `அதிரடி' திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்?

ஐ.என்.எக்ஸ் மீடியாவில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அந்த நிறுவனத்தில் எடிட்டராகப் பணிபுரிந்த வீர் சங்வி, 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ப.சிதம்பரத்தைச் சந்தித்து எடுத்துக் கூறியுள்ளார். இதுதொடர்பாக இருமுறை ப.சிதம்பரத்தை வீர் சங்வி சந்தித்துள்ளார். ஆனால், ப.சிதம்பரம் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று வீர் சங்வியிடத்தில் கூறியதோடு, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விஷயங்களை வீர் சங்வி எங்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களில் வருமானவரித் துறை அதிக முதலீடு திரட்டியது குறித்து முகர்ஜி தம்பதியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து பீட்டர் முகர்ஜி நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை மீண்டும் சந்தித்து, இந்த விவகாரத்திலிருந்து மீள்வது எப்படி என்று ஆலோசனை கேட்டுள்ளார். (இந்த முறை பீட்டர் முகர்ஜி, சிதம்பரத்தை எப்படிச் சந்தித்தார் என்று சி.பி.ஐ விளக்கம் கூறவில்லை) சிதம்பரத்தின் ஆலோசனையின்படி, 2008-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கார்த்தி சிதம்பரத்தை டெல்லி ஹயாத் ஹோட்டலில் உள்ள காபி ஷாப்பில் முகர்ஜி தம்பதி சந்தித்துள்ளனர். அப்போது, அவர்களிடத்தில் இந்தப் பிரச்னையைத் தான் தீர்த்துவைப்பதாக கார்த்தி உறுதி அளித்துள்ளார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து கார்த்தியின் Advantage Strategic Consultancy Pvt Ltd (ASCPL) நிறுவனத்துக்கு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.9,96,000-க்கு செக் அளித்துள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

நிதித்துறை கூடுதல் செயலர் சிந்துஜா குல்லார், கூடுதல் இயக்குநர் பிரபோத் சக்சேனா, இணைச் செயலர் அனுப் கே.பூஜாரி, அதிகாரிகள் ரபிந்த்ரா பிரசாத், பிரதீப்குமார் பாகா, அஜித்குமார் டங் டங் உள்ளிட்ட 12 பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. இதில், "நிதித்துறை கூடுதல் செயலர் சிந்துஜா குல்லார் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முறைகேட்டையும், வெளிநாட்டிலிருந்து திரட்டிய நிதியை சகோதர நிறுவனத்துக்கு மடைமாற்றம் செய்ததையும் Foreign Investment Promotion Board-க்குத் தகவல் தெரிவிக்காமல் அடியோடு மறைத்துவிட்டார்'' என்றும் சி.பி.ஐ தன் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. சி.பி.ஐ பதிந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு இன்று ஜாமீனும் கிடைத்தது. ஆனால், இதே வழக்கில் ப.சிதம்பரத்தை ஏற்கெனவே அமலாக்கத் துறை கைதுசெய்துள்ளது. அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் வருகிற 24-ம் தேதி வரை அவரைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அதற்குப் பிறகே ப.சிதம்பரம் வெளியே வர முடியும்.

தனி அறை; வீட்டு உணவு; படுக்கை வசதி! - அமலாக்கத்துறையின் கஸ்டடியில் ப.சிதம்பரம்

ஜாமீன் உண்டு, ஆனா இல்லை... என்கிற நிலையில்தான் ப.சிதம்பரம் இருக்கிறார் என்பதே உண்மை!