Published:Updated:

மாநிலங்களவையே கூட்டாட்சியின் இதயம்! #MyVikatan

Parliament of India
News
Parliament of India ( AP Photo )

மாநிலங்களவை மற்றும் மக்களவை இரண்டிலும் ஒரே கட்சியோ, ஒரே கூட்டணியோதான் பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மாறாக, மக்களவையில் ஒரு கூட்டணியும் மாநிலங்களவையில் ஒரு கூட்டணியும்கூட பெரும்பான்மையாக இருக்கலாம்!

மாநிலங்களவை என்று தமிழிலும், கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்று ஆங்கிலத்திலும், ராஜ்யசபா என்று இந்தியிலும் அழைக்கப்படும் பாராளுமன்ற மேலவையின் முதல் அமர்வானது 13 மே 1952 அன்று அப்போதைய துணை குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் உரையுடன் தொடங்கியது.

இந்த அவையானது மொத்தம் 250 உறுப்பினர்களை கொண்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம், அட்டவணை நான்கில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மாநிலங்களவை இடங்கள் ஒதுக்கீடு பற்றி குறிப்பிட பட்டுள்ளது, அதாவது ஒவ்வொரு மாநிலமும் குறைந்தது ஒரு உறுப்பினர்களை கொண்டிருக்கும். இந்த 250 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் குடியரசு தலைவர் அவர்களால் மருத்துவம், கல்வி, இலக்கியம் போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள், மீதமுள்ளவர்கள் 238 உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இவர்களின் பதவி காலம் மக்களவை போன்று ஐந்து ஆண்டுகள் அல்ல, ஒரு ஆண்டு கூடுதலாக ஆறு ஆண்டுகளாகும். மேலும், ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளிலும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பதவி காலம் முடிவடைந்து, புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள். இதுதவிர, இது ஒரு நிரந்தர சபையாகும், மக்களவை போன்ற ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறக்கூடியது அல்ல. மேலும், மக்களவை குடியரசு தலைவரால் அரசியலமைப்பு சட்டம் 85(2)(b)படி கலைக்கப்பட முடியும். ஆனால், மாநிலங்களவை என்பது கலைக்க முடியாத ஒரு நிரந்தரமான அமைப்பாகும். மேலும், மாநிலங்களவை மற்றும் மக்களவை இரண்டிலும் ஒரே கட்சியோ, ஒரே கூட்டணியோதான் பெரும்பான்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, மக்களவையில் ஒரு கூட்டணியும் மாநிலங்களவையில் ஒரு கூட்டணியும் பெரும்பான்மையாக இருக்கலாம்.

மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் போல மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. மாறாக மக்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அந்த அந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். அதாவது, மக்கள் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்தலில் வாக்களித்து நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர், அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுகின்றனர். அதனால்தான் இது மறைமுகமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை என்று அழைக்கப் படுகின்றது. இதுபோன்று மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவையில்தான் கூட்டாட்சி என்பதும் மறைந்திருக்கிறது.

Parliament
Parliament
மாநிலங்களவை என்ற ஒரு அமைப்பு இருப்பதாலே, மக்களவையில் உறுப்பினர்கள் இல்லாத மாநில கட்சிகளின் பிரதநிதித்துவம் காக்கப்பட்டு, கூட்டாட்சி நிலைநிறுத்தப் படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாநில சட்டமன்றம் என்பதுதான் கூட்டாட்சியின் அடித்தளம் ஆகும். கூட்டாட்சி என்பதன் பொருள் இன, மொழி, கலாச்சார, பண்பாடு வேறுபாடு கொண்ட ஒரு பெரிய நிலப்பரப்பு பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டு ஓவ்வொரு மாநிலத்திற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியாக சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட சட்டமன்றங்களை கொண்ட ஒரு அமைப்பும் மற்றும் ஒன்றியம் அல்லது நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக மத்தியில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றம் என்ற அமைப்பும் சேர்ந்தது ஆகும்.இதனடிப்படையில், மாநிலங்களவை என்பது மாநிலங்களாலும் மற்றும் அதன் மக்களாலும் தீர்மானிக்கப் படுவது ஆகும். ஒருவேளை மாநில சட்டமன்றம்

என்ற ஒரு அமைப்பு இல்லை என்றால் மாநிலங்களவை என்ற ஒரு அமைப்பு இருக்க முடியாது. மேலும், ஒற்றையாட்சி இருக்க கூடிய சில நாடுகளில் மத்தியில் அனைத்து அதிகாரம் கொண்ட மத்திய அரசும், அதன் கீழ் ஆளுநரும், அவருக்கு கீழ் மாவட்ட ஆட்சியர் என்றே இருக்கிறது, இந்த அமைப்பில் மாநில அரசு என்ற ஒரு அமைப்பே இருக்காது, மாறாக, மத்திய அரசே நாட்டின் அனைத்து பகுதிகளையும் நிர்வகிக்கும், இங்கே மாநில சட்டமன்றமும் இருக்காது, மாநிலங்களவையும் இருக்காது.இதனால் தான் மாநிலங்களவை என்பது மக்களவையை விட கூட்டாட்சி தத்துவத்தின் ஆணிவேராக விளங்குகிறது.

மக்களவையில் எப்படி சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறதோ, அதே போல மாநிலங்களவையும் சட்ட மசோதா கொண்டு வர முடியும். மேலும், ஏதோ ஒரு மாநில கட்சிக்கு மக்களவையில் ஒரு இடம்கூட இல்லையென்றாலும் கூட, மாநில சட்டமன்றத்தில் அந்த கட்சிக்கு போதுமான அளவு இடமிருக்குமானால், அவர்கள் தங்கள் உறுப்பினர்களை மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்க முடியும். இதன் மூலம், அந்த மாநிலத்திற்கு ஒத்துவராத தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படுமானால் அதற்கெதிராக தங்கள் கருத்தை பதிவு செய்யமுடியும். அது மட்டுமல்லாமல் மாநிலங்களவை மூலமாக அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒரு தனிநபர் மசோதாவை கொண்டுவரமுடியும். அந்த மசோதா வெற்றி பெறுகிறதா அல்லது தோல்வியடைகிறதா என்பது ஒருபுறம் இருந்தாலும், மாநிலங்களவை என்ற ஒரு அமைப்பு இருப்பதாலே, மக்களவையில் உறுப்பினர்கள் இல்லாத மாநில கட்சிகளின் பிரதநிதித்துவம் காக்கப்பட்டு, கூட்டாட்சி நிலைநிறுத்தப் படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்திய அரசியலமைப்பு சட்டம் 368 படி அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்யும் போது, பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சாதாரண சட்டத்திருத்தம் ஒருவேளை இரண்டு அவைகளில் எந்த ஒரு அவைகளில் நிறைவேற வில்லையெனில், குடியரசு தலைவர் கூட்டு அமர்வுக்கு(Joint sitting)அழைப்பு விடுத்தது அங்கு பெரும்பான்மை உறுதி செய்ய பட்டு அந்த சட்டம் நிறைவேற்றப்படும். ஆனால் , அரசியலமைப்பு சட்டம் என்பது ஒரு வேளை மக்களவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையும் தனி பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட வேண்டும்.அதாவது அவையில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவோடுதான் நிறைவேற்றப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு கூட்டு அமர்வு அனுமதிக்கப்படாது, கட்டாயம் இருஅவைகளிலும் நிறைவேற்ற பட வேண்டும். இதன் மூலமாக மக்களவையில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு தேசிய கட்சி ஒரு இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்த தீர்மானத்தை பெரும்பான்மையில் நிறைவேற்றி இருந்தாலும், ஒருவேளை அந்த சட்டம் மாநிலங்களுக்கு எதிராக இருக்குமானால் அது மாநிலங்களவையில் தோற்கடிக்க பட வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலமாக மாநிலங்களவை அரசியலமைப்பு சட்ட திருத்தம் தொடர்பாக மாநில நலன்களை காப்பாற்ற உறுதுணையாக இருக்கிறது.

Parliament
Parliament
பண்பாடு மற்றும் கலாசார ரீதியாக பல மொழிவழி தேசிய இனங்கள் கூடி வாழக்கூடிய ஒரு துணைக்கண்டத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே எண்ணிக்கையில் உறுப்பினர் இருப்பதே கூட்டாட்சிக்கு உகந்ததாக இருக்கும்.

மாநிலங்களவை என்னதான் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இங்கும் உறுப்பினர் எண்ணிக்கை என்பது மக்களவையை போல மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக உத்திரபிரதேசம் அதிக மாநிலங்களவை உறுப்பினர்களையும், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் குறைவான உறுப்பினர்களையும் கொண்டிருக்கிறது. பண்பாடு மற்றும் கலாசார ரீதியாக பல மொழிவழி தேசிய இனங்கள் கூடி வாழக்கூடிய ஒரு துணைக்கண்டத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே எண்ணிக்கையில் உறுப்பினர் இருப்பதே கூட்டாட்சிக்கு உகந்ததாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் மாநிலங்களவையில் ஒரு சில மாநிலங்களின் அல்லது சில கட்சியின் வலிமை அதிகமாகவும், ஒரு சில மாநிலங்கள் அல்லது ஒரு சில கட்சியின் வலிமை குன்றியும் இருக்கும்.

இப்படியாக மாநிலங்களவை என்பது மாநிலங்களின் உரிமையைப் பாதுகாக்கக்கூடியதாக இருந்து கூட்டாட்சியின் இதயமாகச் செயல்படுகிறது.