திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வீரக்கல்லைச் சேர்ந்தவர் ஜெயராம். இந்து முன்னணி திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளரான இவர், திண்டுக்கல்-குமுளி சாலையில் புல்வெட்டி கண்மாய் அருகே நெல்லூரைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் பட்டாசுக் கடை நடத்திவந்தார். இந்தப் பட்டாசுக் கடையின் மேல் தளத்திலேயே, ஜெயராம் தன்னுடைய மனைவி ராணி (31), 3 குழந்தைகளுடன் வசித்துவந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை குழந்தைகள் தீபிகா (7), கனிஷ்கா (5), போகன் (4) ஆகியோர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மாடியில் வெடிச்சத்தம் ஏற்பட்டு மேல்தளத்தின் சமையலறை தவிர இரண்டு அறைகளும் இடிந்துவிழுந்திருக்கின்றன. இதில் மாடியிலிருந்த ஜெயராம், ராணி ஆகியோர் பலியாகினர்.
அதையடுத்து, அருகேயுள்ள மக்கள் உடனடியாக செம்பட்டி போலீஸாருக்கும், ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியிருந்த ஜெயராம், ராணி தம்பதியின் உடல்களை மீட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``மதுரை வடக்கம்பட்டி பட்டாசுபோல திண்டுக்கல் மாவட்டத்தில் வீரக்கல் பட்டாசு மிகவும் பிரபலம். இங்கு பெரும்பாலானவர்கள் உரிய அனுமதி பெறாமல் வீட்டில் வைத்தே ஆபத்தான முறையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். கடந்த காலங்களில் வீரக்கல்லில் பட்டாசு வெடி விபத்தால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. கீழ்தளத்தில் பட்டாசுக் கடை நடத்தினால், மாடியில் குடியிருக்க அனுமதியில்லை. ஆனால், ஜெயராம் மாடியில் குடும்பத்துடன் வசித்துவந்திருக்கிறார்.

மேலும், மாடியை பட்டாசு குடோன் போலவும் பயன்படுத்தி வந்திருக்கிறார். அருகே இருந்தவர்கள், மாடியில் வைத்தே பட்டாசு தயாரித்து வந்ததாகவும் தெரிவிக்கின்றனர். சிவகாசி பட்டாசுகளைப்போல் அல்லாமல் வீரக்கல் பட்டாசு மிகவும் வீரியம்மிக்கதாக இருக்கும். அருகே அடுப்பு பற்றவைப்பதாலோ, சுத்தியல் கொண்டு ஆணி அடிக்கப்பட்டாலோ ஏற்படும் சிறு பொறிகூட வெடி விபத்தை ஏற்படுத்திவிடும். பட்டாசுத் தொழிலாளர்கள் இதெல்லாம் தெரிந்தும்கூட அலட்சியமாகச் செயல்படுவதுதான் இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது" என்றனர்.