ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் அங்கமான திருக்கோவிலூர் அருகேயுள்ள மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினச் சமூதாயத்தினர் சிலரை, கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு வழக்கில் திருக்கோவிலூர் போலீஸார் கைதுசெய்தனர். அப்போது, விசாரணை என்ற பெயரில் ஆண்களைத் தனி வாகனத்திலும், பெண்களைத் தனி வாகனத்திலும் காவல்துறையினர் அழைத்துச் சென்றனராம். மேலும், அந்தப் பழங்குடியினப் பெண்களை நள்ளிரவில் மறைவான காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், 17 வயது சிறுமி உட்பட நான்கு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன், பக்தவச்சலம் ஆகிய ஐந்து போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இது தொடர்பாக திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
பின்னர், இந்த வழக்கு, விழுப்புரத்திலுள்ள வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில், இந்த வழக்கு சம்பந்தமான குற்றப்பத்திரிகையை, குறிப்பிட்ட காலத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததைச் சுட்டிக்காட்டி, குற்றம்சாட்டப்பட்ட போலீஸாரின் பணியிடை நீக்கத்தை ரத்துசெய்திருந்தது உயர் நீதிமன்றம். அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட போலீஸார் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றிவருகின்றனர். இந்த நிலையில், அரக்கோணம் நகர காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிவந்த சீனிவாசன் (முன்னாள் திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர்), பழங்குடியினச் சமூகப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

கடந்த மே மாதம் 16-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, காவல் ஆய்வாளர் சீனிவாசனின் அந்த ஜாமீன் மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார் நீதிபதி பாக்கியஜோதி. மேலும், அவர் கைதுசெய்யப்படலாம் என்ற பேச்சுக்களும் எழுந்தன. இந்த நிலையில், அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த காவல்துறை ஆய்வாளர் சீனிவாசன், தனது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அறிந்ததும் அவசர அவசரமாக நீதிமன்றத்திலிருந்து வெளியேறி தலைமறைவாகினார். இந்தச் சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து, அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதோடு, ஆஜராகும்படி சம்மனும் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், ஆறு மாதங்கள் கழித்து இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்த சீனிவாசன், ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி பாக்கியஜோதி, வரும் 21-ம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தவிட்டார். இதையடுத்து திருக்கோவிலூர் போலீஸார் சீனிவாசனைக் கைதுசெய்து அழைத்துச் சென்று வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.