அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், `கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார். கொரோனா உலகளாவிய தொற்றாக உருமாறி, பல உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருந்த போது, சில நாடுகள் சீனாவைச் சந்தேக கண்ணோட்டத்தோடு திரும்பிப் பார்த்தன. இந்தத் தொற்று வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதா என்ற ஐயப்பாடு இருந்த போதிலும், பெரிதாக அனைவரின் கவனத்தையும் இது பெறவில்லை.

இந்நிலையில், சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் வைராலஜி பிரிவில் விஞ்ஞானியாக வேலை செய்த அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரு ஹப் என்பவர், `வூஹானை பற்றிய உண்மைகள்’ (The Truth About Wuhan) என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.
அந்தப் புத்தகத்தில், ``கோவிட் மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வூஹான் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து வெளியிடப்பட்டது. சீனாவின் கொரோனா வைரஸுக்கு, அமெரிக்க அரசு நிதியுதவி அளித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ``வெளிநாட்டு ஆய்வகங்களில், சரியான உயிரியல் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்கான போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை. சீனாவில் நடைபெற்ற இந்தச் சோதனைகள், போதிய பாதுகாப்புடன் நடத்தப்படவில்லை. அதன் விளைவாகவே வூஹான் ஆய்வகத்தில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளது.

இது `மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஏஜென்ட்' என்பது சீனாவுக்கு முதல் நாளிலிருந்தே தெரியும். ஆபத்தான உயிரி தொழில்நுட்பத்தை சீனர்களுக்கு மாற்றியதற்கு அமெரிக்க அரசே காரணம். நான் என்ன பார்த்தேனோ அதைக் கண்டு பயந்தேன். நாங்கள் அவர்களிடம் உயிரி ஆயுத (Bioweapon) தொழில்நுட்பத்தை ஒப்படைத்தோம்’’ என்று புத்தகத்தில் கூறியுள்ளார்.
இவரின் இந்தக் கருத்து தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று, பேசுபொருளாகி உள்ளது. ஆண்ட்ரூ ஹப், நியூயார்க்கில் உள்ள தொற்றுநோய்களைக் குறித்து ஆய்வு செய்யும் லாப நோக்கமற்ற `EcoHealth Alliance’ என்ற அமைப்பில் முன்னாள் துணைத்தலைவராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும்காலங்களில் குண்டுகளும், வெடிகளும் வெடிக்கப் போவதில்லை. அமைதியான முறையில் போர் நிகழும். நோய்களே ஆயதமாக மாறி மனிதனை விழுங்கும்.