சினிமா
தொடர்கள்
Published:Updated:

தெருவிளக்கு முதல் தேசத்தின் நாடாளுமன்றம் வரை...

டி.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
டி.ராஜா

தமிழகக் குக்கிராமம் ஒன்றில் பிறந்த டி.ராஜா, பாரம்பர்யமிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார்.

ரசுப் பணியைத் துறந்துவிட்டு, இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர் ஆகிவிட்ட டி.ராஜா, மாநிலங்களவை உறுப்பினராக இருமுறை செயல்பட்டவர். சென்னைக்கு வந்திருந்த ராஜாவிடம் வாழ்த்துகள் தெரிவித்து, பேசத் தொடங்கினேன்.

“நீங்கள், தெருவிளக்கில் படித்து வாழ்க்கையில் முன்னேறியவர் என்று கேள்விப்பட்டுள்ளேன். உங்கள் மாணவப் பருவம் எப்படி இருந்தது?”

“வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே பாலாற்றங்கரையில் உள்ள சித்தாத்தூர், நான் பிறந்த கிராமம். என் அம்மாவும் அப்பாவும் நிலமற்ற கூலித் தொழிலாளர்கள். நாங்கள் ஆறு சகோதரர்கள், ஒரு சகோதரி. குடிசை வீட்டில் வாழ்ந்தோம். சாப்பாட்டுக்கே சிரமப்பட்ட குடும்பம். ஆனாலும், அப்பாவும் அம்மாவும் எங்களைக் கஷ்டப்பட்டுப் படிக்கவைத்தார்கள்.

‘அரிஜன நலப் பள்ளி’யில் 5-ம் வகுப்புவரை படித்தேன். காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தில் சாப்பிட்டுப் படித்து வளர்ந்தேன். பிறகு, பள்ளிகொண்டான் உயர் நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்ந்தேன். அங்கு மதிய உணவு கிடையாது. எப்போதாவது, பழைய கஞ்சி கொண்டுபோவேன். பெரும்பாலான நாள்களில் மதியம் பட்டினிதான். விளையாட்டு வகுப்புக்குப் போனால், ‘நீ மதியம் சாப்பிடவில்லையே. அதனால் விளையாட வேண்டாம்’ என்று விளையாட்டு ஆசிரியர் சொல்லிவிடுவார். அதனால் மரத்தடியிலேயே அமர்ந்திருப்பேன். ஒருகட்டத்தில், நூலகத்துக்குப் போக ஆரம்பித்தேன். அதுதான் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.”

“எந்த மாதிரியான நூல்களை வாசித்தீர்கள்?”

“அந்த நூலகத்தில் இருந்த எல்லா நூல்களையும் வாசித்தேன். ‘இந்தப் பையன் வயதுக்கு மீறிப் படிக்கிறான்’ என்று என் தலைமையாசிரியரான வரதாச்சாரி, பிரேயர் கூட்டத்திலேயே சொன்னார். சாண்டியல்யனின் ‘மன்னன் மகள்’, ‘யவன ராணி.’ மு.வரதராசனின் ‘அகல்விளக்கு’, ‘கள்ளோ காவியமோ’, ‘கரித்துண்டு’ என ஏராளமான நாவல்களைப் பள்ளிப் பருவத்திலேயே படித்துவிட்டேன்.

பத்தாம் வகுப்பில், ‘காரல் மார்க்ஸைத் தெரியுமா?’ என்று எங்கள் தமிழாசிரியர் கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. என்னைப் பார்த்து, ‘நீதான் நிறைய படிக்கிறாயே, உனக்காவது தெரியுமா?’ என்று கேட்டார். எனக்கும் தெரியவில்லை. ‘உனக்கே தெரியவில்லையென்றால், வேறு யாரிடமும் இதை நான் கேட்டிருக்கக் கூடாது’ என்று சொல்லிவிட்டு, காரல் மார்க்ஸ் பற்றி அவரே சொல்ல ஆரம்பித்தார். அப்போதுதான், முதன்முறையாக மார்க்ஸ் எனக்கு அறிமுகமானார்.

குடியாத்தம் அரசுக் கல்லூரியில் பி.எஸ்ஸி சேர்ந்தேன். கல்லூரி நூலகத்தில் நிறைய மார்க்ஸிய நூல்கள் இருந்தன. மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ தொடங்கி, கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன். எப்போதும் நூலகத்திலேயே மூழ்கிக்கிடப்பேன்.”

“உங்களுக்கு அரசியல் சிந்தனை எப்போது ஏற்பட்டது?”

“எங்கள் ஊரில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் விழா நடைபெறும். அம்பேத்கர் படம் வைத்திருப்பார்கள். அதில், அவர் படித்து வாங்கிய பட்டங்களைப் போட்டிருப்பார்கள். அதுதான் என் கவனத்தை ஈர்த்தது. இவ்வளவு பெரிய படிப்புகளை எப்படி அவர் படித்திருப்பார் என்று ஆச்சர்யப்படுவேன். அந்தப் பகுதியில் காங்கிரஸுக்கு நல்ல செல்வாக்கு. காமராஜர், குடியாத்தம் தொகுதியில் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக இருந்தார். பொதுவுடைமை இயக்கமும் அந்தப் பகுதியில் இருந்தது. அப்போதுதான், தி.மு.க வளர்ந்துவந்தது.

தெருவிளக்கு முதல் தேசத்தின் நாடாளுமன்றம் வரை...

திராவிட இயக்கத்தின் வீச்சு எங்கள் கிராமத்திலும் இருந்தது. என் தம்பிகளுக்குக் கருணாநிதி, கருணாகரன், கண்ணதாசன், கலையரசன் என்று பெயர் வைத்தார்கள். காங்கிரஸ் இயக்கம், திராவிடர் இயக்கம், பொதுவுடைமை இயக்கம், அம்பேத்கரிய இயக்கம் என நான்கு இயக்கங்களுக்கு மத்தியில் நான் வளர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த பிறகு மார்க்ஸியக் கொள்கைகளில் ஒரு தெளிவு கிடைத்தது, ஈர்ப்பு அதிகரித்தது.”

“கம்யூனிஸ்ட் கட்சியில் எப்போது உங்களை இணைத்துக்கொண்டீர்கள்?”

“எங்கள் வீடு, ஒரு சிறிய குடிசை வீடு. குளிர்காலத்தில் தரையில் வைக்கோலைப் போட்டு, அதன்மீது சேலையை விரித்து எங்களை எங்கள் அம்மா படுக்கவைப்பார். தெருவிளக்கில்தான் படித்தேன். எங்கள் அம்மாவும் அப்பாவும் கடினமான உழைப்பாளிகள், மிகவும் நேர்மையானவர்கள். ஆனாலும், இவர்கள் ஏன் இவ்வளவு கடினமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்கிற கேள்வி சிறு வயதிலேயே எனக்குள் எழுந்தது. கல்லூரியில் சேர்ந்த பிறகு மார்க்ஸிய தத்துவார்த்த நூல்களை நிறைய படிக்க ஆரம்பித்தேன். அதில், பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன. கல்லூரியில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்துடன் தொடர்பு ஏற்பட்டது. 1968-ல் கட்சியில் சேர்ந்தேன். எங்கள் கிராமத்தில் நான்தான் முதல் பட்டதாரி. கல்லூரியில் படித்துக்கொண்டி ருந்தபோது, டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதினேன். கல்லூரித் தேர்வு ரிசல்ட் வரும் முன்பே டி.என்.பி.எஸ்.சி ரிசல்ட் வந்துவிட்டது. உள்ளாட்சித் தணிக்கைத் துறையில் வேலை கிடைத்தது. சில மாதங்கள் பணியாற்றினேன். பிறகு, அந்த வேலையை விட்டுவிட்டு பி.எட் படித்தேன். அரசுப் பள்ளியில் சில மாதங்கள் ஆசிரியப் பணி. பிறகு, அதையும் ராஜினாமா செய்துவிட்டு, 1974-ல் கட்சியின் முழுநேர ஊழியராகிவிட்டேன்.”

“உங்கள் இணையர் ஆனி ராஜாவுடனான சந்திப்பு குறித்தும், உங்கள் திருமணம் குறித்தும் சொல்லுங்கள்...”

“1985 முதல் 1990 வரை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் பொதுச்செயலாள ராக இருந்தேன். அந்தக் காலகட்டத்தில், கேரளாவில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை பெண்கள் பேரணி நடைபெற்றது. அதில் பேசுவதற்காகச் சென்றேன். அங்குதான் ஆனியைச் சந்தித்தேன். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக இருந்தார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, பல போராட்டக் களங்களில் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். இருவரும் நேசிக்க ஆரம்பித்தோம். தமிழகத்தில் தோழர்கள் நல்லகண்ணு, ப.மாணிக்கம், கேரளாவில் தோழர் பி.கே.வாசுதேவன் நாயர் ஆகியோர் எங்கள் திருமணம் குறித்துப் பேசினார்கள். கேரளாவில் திருமணம். சென்னை பாலன் இல்லத்தில் வரவேற்பு. இருவரும் வேறு சாதி, வேறு மதம், வேறு மாநிலம், வேறு மொழி...”

“இரு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளீர்கள். அதில் உங்களின் முக்கியப் பங்களிப்பு என்ன?”

“ஈழத் தமிழர் பிரச்னையைப் பேசி, உலக கவனத்தை ஈர்த்துள்ளேன். தமிழக மீனவர் பிரச்னை, கச்சத்தீவுப் பிரச்னை, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள், விவசாயிகள் பிரச்னை, தொழிலாளர்களின் பிரச்னைகள், தலித் மற்றும் பழங்குடியினரின் பிரச்னைகள், இட ஒதுக்கீடு, சமூகநீதி என அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் ஆழமாகப் பேசியுள்ளேன். மரண தண்டனைக்கு எதிராகவும், சட்டத்திலிருந்து தேசவிரோதப் பிரிவை நீக்க வேண்டும் என்றும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என்றும் தனிநபர் மசோதாக்களைக் கொண்டுவந்துள்ளேன்.”

“நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து இடதுசாரிக் கட்சிகள் எப்படி மீளப்போகிறீர்கள்?”

“நாடாளுமன்ற ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி ஏற்படுவது சகஜம். இதை வைத்து, இடதுசாரி இயக்கத்தை முடிவுசெய்துவிடக் கூடாது. இந்தியாவுக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தேவை எப்போதும் உள்ளது. இன்றைக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சித்தாந்தச் செல்வாக்கை, அரசியல் செல்வாக்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

மனைவியுடன்...
மனைவியுடன்...

தமிழகத்தில் தி.மு.க தலைமையில் ஓர் அணி உருவாகி, தொகுதி உடன்பாடு நல்லபடியாக நடந்தது. கொள்கைத் தெளிவுடன் பி.ஜே.பி தலைமையிலான அணிக்கு எதிராகக் களமிறங்கி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். இந்த மாதிரியான ஒற்றுமை பல மாநிலங்களில் ஏற்படவில்லை. இந்தச் சரிவு என்பது இடதுசாரிக் கட்சிகளுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் உட்பட மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்துக்கும்தான். இந்தக் கட்சிகள் அனைத்தும், இது குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

தேர்தல் தோல்விகளைக் கண்டு இடதுசாரிக் கட்சிகள் துவண்டுபோகாது. இந்தத் தோல்வியிலிருந்து நிச்சயம் மீண்டெழுவோம். இயக்கத்தை பலப்படுத்துவது, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவது என முன்னுரிமை கொடுத்துச் செயல்படத் தொடங்கியுள்ளோம்.”

“இளைஞர்களை ஈர்க்கும் கட்சிகளாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லையே?”

“அப்படியென்றால், மோடி அரசை யாராவது கேள்வி கேட்டால், அவர்களை தேசவிரோதி என்றும், நகர்ப்புற நக்சல்பாரிகள் என்றும் முத்திரை குத்துவது ஏன் நடக்கிறது? இளைஞர்கள் எழுச்சிபெறுகிறார்கள், அவர்கள் இடதுசாரிகளின் பக்கம் திரும்புகிறார்கள் என்கிற அச்சம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. அதனால்தானே ஜே.என்.யு-வையும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தையும் குறிவைத்துத் தாக்கினார்கள். இன்னும் நிறைய இளைஞர்கள் இடதுசாரி இயக்கத்துக்கு வர வேண்டும். அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய நேரத்தில், உரிய மட்டத்தில், உரிய பொறுப்புகளைக் கொடுக்க வேண்டும் என்கிற சிந்தனை கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்போது இருக்கிறது. அதனால்தான், எங்கள் கட்சியின் உயர்மட்ட அமைப்புகளுக்கு இப்போது இளைஞர்களைக் கொண்டுவந்துள்ளோம்.”

“சி.பி.ஐ., சி.பி.எம் ஆகிய இரு கட்சிகளும் ஒன்றுசேருவது குறித்து நீண்டகாலமாகப் பேசிவருகிறீர்களே?”

“கட்சி பிரிந்தபோது இருந்த வேறுபாடுகள் இப்போது இல்லை. இன்றைய சூழலில், இரு கட்சிகளும் ஒன்றுபட்டு எப்படிச் செயல்படுவது என்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று சி.பி.ஐ தொடர்ந்து சொல்லிவருகிறது. சி.பி.ஐ பொதுச்செயலாளராக இந்திரஜித் குப்தா, சி.பி.எம் பொதுச்செயலாளராக ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆகியோர் இருந்தபோது, இரு கட்சிகளுக்கும் இடையே ஓர் ஒருங்கிணைப்புக்குழுவை அமையுங்கள் என்று எல்லா மாநிலங்களுக்கும் கூட்டறிக்கை அனுப்பப்பட்டது. பல காரணங்களால் அது நடக்கவில்லை.

மதவெறி பாசிசம் ஆட்சிக்கு வந்துவிட்ட சூழலில், அவர்கள் பின்பற்றுகிற கொள்கைகள் எல்லாம் உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக உள்ளன. இந்த நேரத்தில், கம்யூனிஸ்ட் இயக்கம் புதிய உயிர்ப்புடன் எப்படி எழுவது, இந்தியாவின் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் ஆக்கபூர்வமான ஒரு சக்தியாக வருவது என்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்து வருகிறோம். ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன்.”