கோவை, சிவானந்தாகாலனி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``தேசம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. மோடி அரசாங்கத்தில் பாதிக்கப்படாத பிரிவினரே இல்லை. கடந்த ஓராண்டில் 15 கோடி இளைஞர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்.

குழந்தைகள், கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்து குறைந்திருக்கிறது. விலைவாசி செங்குத்தாக ஏறியிருக்கிறது. அதேநேரத்தில், 7,000 கோடிக்கு அதிகமாகச் சொத்துடையவர்கள் அதிகமாகிக்கொண்டேயிருக்கின்றனர். இந்த காலகட்டத்திலும் உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு தொழிலதிபர், ஒரு மணி நேரத்துக்கு ரூ.90 கோடி சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெரும்பான்மையான தொழில் நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டிருக்கின்றன. மின் உற்பத்தியில் முக்கியப் பங்குவகிக்கும் தமிழகத்தின் நெய்வேலி அனல் மின்நிலையத்தைத் தனியார்மயமாக்க முயற்சிகள் நடந்துவருகின்றன. பொது நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவது மக்களை பாதிக்கும். தமிழகத்திலிருந்து விவசாயிகள் டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தியபோது, தங்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை என்று கூறினார்கள்.

அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ள எலியை உண்ண வேண்டிய நிலை இருக்கிறது எனக் கூறியபோது, அதை நான் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றேன். ஆனால், அந்த விவசாயிகளுக்கு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. லட்சம் கோடிகளில் கடன் வாங்கியிருக்கும் பெரு முதலாளிகளின் கடனைத் தள்ளுபடி செய்கிறது மோடி அரசு.
பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது துளியும் இல்லை. தலித் பெண்கள் பெரும்பாலும் பாலியல் தொல்லைக்கு உள்ளாகின்றனர். அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கொல்லப்பட்டு, அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தியாவை மனிதர்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க-வின் கொள்கையான `ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை. இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து, ஒற்றை அடையாளத்தின்கீழ் இந்திய ஒன்றியத்தைக் கொண்டுவருவதே மத்திய அரசின் நோக்கம்.
அவசரநிலையில்கூட மாநில உரிமையை மீட்கப் போராடிய பாரம்பர்யம் தமிழகத்துக்கு இருக்கிறது, அதனால் வரும் சட்டமன்றத் தேர்தல், தமிழக மக்களின் மாநில உரிமையை மீட்டெடுக்க முக்கியமானதொரு வாய்ப்பாக அமையும். மக்கள் அதைச் சரியாகக் கையாள வேண்டும். மதச்சார்பற்ற கட்சிகள் தி.மு.க தலைமையில் ஒன்று சேர்ந்து, மதவாத சக்திகளை எதிர்க்க வேண்டும்.

அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் அரவணைத்து தலைமை தாங்கும் பொறுப்பு தி.மு.க-வுக்கு இருக்கிறது என்று நான் நம்புகிறேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மாற்று அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். தமிழகம் இந்தியாவுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” என்று பேசினார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த யெச்சூரி, ``பெட்ரோலியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் உயர்கிறது. மக்கள் மீது சுமத்தப்படும் இந்த வரிகளால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு செலவு செய்வதற்காக இந்த வரிகள் உயர்த்தப்படுகின்றனவோ என்கிற கேள்வி எழுகிறது. கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் தலைநகர் டெல்லியின் சாலைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திவருகிறார்கள். விவசாயிகள் மாற்றத்தை எதிர்க்கவில்லை.

விவசாயிகளோடு பேசுங்கள், நாடாளுமன்றத்தில் விவாதித்து தேவையான திருத்தங்களோடு இந்தச் சட்டங்களை கொண்டு வாருங்கள் என்றுதான் கேட்கிறார்கள். இது மிக நியாயமான கோரிக்கை. ஆனால், மத்திய அரசு பிடிவாதம் பிடிக்கிறது. இந்தப் போராட்டக் களத்திலேயே சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.
மத்திய அரசின் எல்லாக் கொள்கைகளையும், மாநிலத்திலுள்ள அ.தி.மு.க அரசு கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது. இதனால்தான் மார்க்சிஸ்ட் கட்சி இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணியை நிராகரிப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்திருக்கிறது. மார்ச் 8 முதல் ஏப்ரல் 8-ம் தேதிவரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் என அறிவித்திருக்கிறார்கள்.

தேர்தல் நடைபெறும் இந்த ஐந்து மாநிலங்களும் பா.ஜ.க-வுக்கு எதிரான அதிக எம்.பி-க்கள் இருக்கும் மாநிலங்கள். இந்த நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தினால் எப்படிச் சரியானதாக இருக்கும்? இது குறித்து இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.
கேராளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும். தமிழகத்தில் ஆளுங்கட்சி தோல்வி அடையும். அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள் கைதுசெய்யப்பட்டு பலர் சிறையில் இருக்கிறார்கள். என்.ஐ.ஏ இதுவரை எந்தக் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யவில்லை. துன்புறுத்தும் நோக்கத்திலேயே இந்த ஊபா சட்டம் பாய்ந்துள்ளது. 83 வயதான ஸ்டேன்சுவாமியைக்கூட இவர்கள் சிறையில் வைத்திருக்கிறார்கள்.
எந்தப் போராட்டம் நடந்தாலும் இடதுசாரிகள்தான் செய்வதாக பிரதமர் மோடி கூறுகிறார். மக்கள் பிரச்னைக்காகப் போராடுவதுதான் இடதுசாரிகளின் நோக்கம். தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடந்துவிடாமல் தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்” என்று கூறினார்.