Published:Updated:

‘பாஸ்போர்ட், விசா இல்லாமல் கூலி வேலை செய்துவந்த வங்கதேசத்தினர் கைது!’ - ஈரோட்டில் பரபரப்பு!

கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர்
கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர்

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகளவு வங்கதேசத்தினர் ஊடுருவியிருப்பதாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அதிரடியாக 10 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பனியன் கம்பெனிகள், பஞ்சு மில்கள், விசைத்தறிக் கூடங்கள் மற்றும் கட்டிட வேலைகள் போன்றவற்றில் வட மாநிலத்தவர்கள் லட்சக்கணக்கில் வேலை செய்து வருகின்றனர். இதில் சட்டவிரோதமாக வங்கதேசத்திலிருந்து வந்த ஆட்களும் ஊடுருவி வேலை செய்து வருகிறார்கள் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் நபர்களைப் பற்றி வாடகைக்கு வீடு கொடுப்பவர் மற்றும் வேலை கொடுக்கும் நிறுவனங்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுக்க வேண்டுமெனவும் போலீஸார் அறிவுறுத்தி வந்தனர்.

வயிற்றுப் பிழைப்பிற்காக வங்கதேசத்திலிருந்து கள்ளப் படகு மூலமாக, மேற்கு வங்கம் வழியாக இந்தியாவினுள் நுழைந்து வேலைக்காக ஈரோடு வந்தோம்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை பணிக்கம்பாளையம் கேஸ் கிடங்கு அருகில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் ஒன்று நேற்று கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில் பெருந்துறை டி.எஸ்.பி செல்வராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் தலைமையில் போலீஸ் டீம் ஒன்று பணிக்கம்பாளையம் சென்று, சம்பந்தப்பட்ட இடங்களில் அதிரடி சோதனை செய்திருக்கின்றனர். அப்போது பாஸ்போர்ட், விசா என எதுவும் இல்லாமல் அந்தப் பகுதியில் தங்கியிருந்த மோதிர் ரஹ்மான் (52), எம்.டி.சோரட் காஸி (40), ரபிகுல் காஜி (20), எம்.டி.மோக்‌ஷத் அலி (43), எம்.டி.அகிசனூரி ரகுமான் (32), மோனிருல் இஸ்லாம் (32), முகமது சோஃபிகுல் இஸ்லாம் (40), எம்.டி.அஷ்ரப்சுமான் (26), ஆரிஃபுல் இஸ்லாம் (28), சஃப்குல் இஸ்லாம் (41) ஆகிய 10 வங்கதேசத்தினரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த 10 பேரும் வட மாநிலத்தவர்களைப் போல, அக்கம்பக்கத்தில் கட்டிட கூலி வேலைகளுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

வாழைமட்டையில் கட்டப்படும் பசுக்கள்! - இந்திய வங்கதேச எல்லையில் நடக்கும் கால்நடை கடத்தல்

போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ‘'வயிற்றுப் பிழைப்பிற்காக வங்கதேசத்திலிருந்து கள்ளப் படகு மூலமாக, மேற்கு வங்கம் வழியாக இந்தியாவினுள் நுழைந்து வேலைக்காக ஈரோடு வந்ததோம், இங்கு வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி கட்டிட வேலைக்குச் சென்று வந்தோம். நாங்கள் சம்பாதித்து அனுப்பும் பணத்தில் தான் எங்கள் ஊரில் உள்ள குடும்பத்தினர் மூன்று வேளை சாப்பாடு சாப்பிடுகின்றனர். தயவுசெய்து தெரியாமல் வந்துவிட்டோம். எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் வங்கதேசத்திற்கே போய் விடுகிறோம்’' எனக் கண்ணீர் விட்டு போலீஸாரிடம் கலங்கியிருக்கின்றனர். அதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், வங்கதேசத்தினர் 10 பேரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு