Published:Updated:

'தொட்டு’ அணைத்தூறும் அறிவு!

பிரெய்ல் வடிவில் சுட்டி விகடன்கே.யுவராஜன்

89 ஆண்டுகளாக தமிழ் மக்களின் உணர்வுகளோடு கலந்து, அவர்களின் வீட்டு உறுப்பினர்களில் ஒருவராக வலம்வரும் விகடன் சந்தித்த பொன்னான தருணங்கள் பல. அதில் ஒன்றாக கடந்த டிசம்பர் 4-ம் தேதி அமைந்தது.

விகடன் குழுமத்தில் இருந்து சிறுவர்களுக்காக வெளியாகும் சுட்டி விகடன், பார்வைக் குறையுடைய குழந்தைகளும் படித்து மகிழ்வதற்காக தனது பிரெய்ல் பதிப்பை, சென்னையில் உள்ள லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட் பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளியில் வெளியிட்டது. புத்தக வெளியீடு, கதைச் சொல்லல், டிரம்ஸ் சித்தார்த் இசை நிகழ்ச்சி எனப் பல்சுவை கலவையாக அமைந்தது அந்த நிகழ்வு.

'தொட்டு’ அணைத்தூறும் அறிவு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் பேசும்போது, 'இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விமானப் பயணத்தில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர், 'பார்வை அற்றவர்கள் படித்து மகிழ பொழுதுபோக்கு புத்தகம் இங்கே மிக மிகக் குறைவாக உள்ளது’ எனச் சொன்னார். அப்போது முதலே அதற்கான திட்டத்தில் இறங்கினேன். குழந்தைகளிடம் இருந்து அதைத் தொடங்குவது சிறப்பாக இருக்கும் என்பதால், சுட்டி விகடன் பிரெய்ல் பதிப்பை கொண்டுவந்துள்ளோம். இது, இந்தக் குழந்தைகளின் உலக அறிவு, பொழுதுபோக்கு, கற்பனைத்திறன் ஆகியவற்றுக்குத்  தூண்டுகோலாக அமையும்' என்றார்.

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்வு அமைச்சகத்தைச் சேர்ந்த தேசிய பார்வையற்றோர் நிறுவனத்தின் மண்டல இயக்குநர் கிருபானந்தம் யாசாராபூடி புத்தகத்தை வெளியிட, லிட்டில் ஃப்ளவர் பள்ளியின் 5 மாணவ, மாணவியர் பெற்றுக்கொண்டார்கள்.

'புத்தகம் படிக்க வேண்டியதன் அவசியம் பற்றி நிறைய பேசுகிறோம். கணிப்பொறியில் ஒரு பட்டனைத் தட்டினால், உலக இலக்கியம் முழுவதும் படிக்க முடியும் என்ற நிலைக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதை பெருமையாகச் சொல்லிக்கொள்கிறோம். ஆனால், பார்வைக்குறையுடையோர் படிக்க என்ன கொடுத்திருக்கிறோம் என்று யோசித்து இருக்கிறோமா? குழந்தைப் பருவத்தில் கற்பனைத்திறன் அற்புதமாக இருக்கும். அவர்களுக்குள் நிறைய கேள்விகள் இருக்கும். அதற்கெல்லாம் அவர்கள் மனம் விடைதேடி சுற்றும். மற்றவர்களைப்போல தேடிச்சென்று அறிவை விரிவுசெய்துகொள்வதில் இவர்களுக்கு சிரமம் உண்டு. அதைத் தீர்க்கும் வகையில் சுட்டி விகடன் பிரெய்ல் பதிப்பு அமையும்' என்றார் கிருபானந்தம் யாசாராபூடி.

'தொட்டு’ அணைத்தூறும் அறிவு!

புத்தகத்தைப் பெற்றுகொண்ட குழந்தைகளில் இருவர், மேடையிலேயே சில பக்கங்களை ரசித்து வாசித்து மகிழ்ந்தார்கள். வாசிப்பின் மீது அவர்கள் கொண்டுள்ள தாகத்தை அறிய முடிந்தது.

புது டெல்லியை தலையிடமாகக் கொண்டு் செயல்படும் அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பும் (A1CB)  சுட்டி விகடனும் இணைந்து பிரெய்ல் பதிப்பை வெளியிடுகின்றன. நிகழ்ச்சியில் A1CB-யின் தமிழக செயலாளர் முத்துச்செல்வி பங்கேற்று பேசிய அவர், 'எங்கள் அமைப்பு சிறந்த சேவை அமைப்புக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. பார்வையற்றோர் முன்னேற்றத்துக்காக 20-க்கும் மேற்பட்ட சமூகப் பணிகளைச் செய்துவருகிறோம். அதில் ஒன்று, சிறந்த புத்தகங்களை பிரெய்லில் வெளியிடுவது. சில  புத்தகங்களைத் தன்னார்வ அமைப்புகளிடம் நிதியைப் பெற்று சொந்த முயற்சியில்தான் வெளியிட்டு இருக்கிறோம். விகடன் குழுமம் மட்டுமே அவர்களாக முன்வந்து, ஒவ்வொரு மாதமும் இந்தப் புத்தகம் வெளிவருவதற்கான முழுச் செலவையும் ஏற்றுள்ளார்கள். இனி மாதந்தோறும் சுட்டி விகடன் பிரெய்ல் பதிப்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள 35 பார்வையற்றோர் பள்ளிகள், அமைப்புகளுக்கு அனுப்பப்படும். இதன்மூலம் 5,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து மகிழ்வார்கள்' என்றார் நெகிழ்ச்சியோடு.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குநரும் பேச்சாளருமான பாரதி கிருஷ்ணகுமார், 'ஆசிரியர் என்பவர் குழந்தைகளிடம் கற்றுக்கொள்பவரே தவிர, கற்றுத்தருபவர் அல்ல. இந்தக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. சுட்டி விகடன் பிரெய்ல் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு இந்தக் குழந்தைகள் தமிழை இவ்வளவு அழகாகப் பிழை இன்றி உச்சரித்ததைக் கேட்டு நெகிழ்ந்துபோனேன். வாசிக்கும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் சூழ்நிலையிலும் உங்களின் மொழித்திறன் சிறப்பாக இருக்கிறது. உங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைத்தால், அற்புதமான படைப்பாளிகளாக மிளிர்வீர்கள் என்பது நிச்சயம். சுட்டி விகடன் பிரெய்ல் பதிப்பு அதற்கு வழிகாட்டியாக இருக்கும். என் வாழ்க்கையில் மிகவும் நெகிச்சியான தருணம் இது' என்று பேசி முடித்தார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனைப் பேருக்குமே அது நெகிழ்ச்சி தருணமாகத்தான் அமைந்தது.

படங்கள்: எம்.உசேன், சொ.பாலசுப்ரமணியன்