பிரீமியம் ஸ்டோரி
மணல் மாஃபியா!

ணல் கொள்ளை குறித்து, கரூரில் 2011 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஆவேச பேச்சு:

 ''காவிரி ஆற்றைக் கடந்து செல்பவர்கள், அந்த திசையைக் கொஞ்சம் பாருங்கள். ஆறு இருக்காது. தண்ணீர் இருக்காது. ஆயிரக்கணக்கில் லாரிகள் அணிவகுத்து நிற்பதுதான் கண்களுக்குத் தெரியும். காவிரி ஆற்றில் தினமும் 10 ஆயிரம் லாரிகளில் மணல் கொள்ளை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒரு லாரிக்கு மூன்று யூனிட் என்ற அடிப்படையில் தினமும் 900 லாரி மணல் மட்டுமே அள்ளப்படுவதாக அரசுக்குக் கணக்குக் காட்டப்படுகிறது.  இதன்படி, மூன்று யூனிட் மணல் 900 ரூபாய் என்ற அடிப்படையில் 900 லாரி மணலுக்கான தொகை, அதாவது கிட்டத்தட்ட மாதம் 2 கோடி ரூபாய் மட்டுமே அரசு கருவூலத்துக்குச் செல்கிறது. அந்த 900 லாரிகளில் ஏற்றிச் செல்லப்படும் கூடுதல் மணல் மற்றும் மீதமுள்ள சுமார் 9,100 லாரிகளின் மணல் ஆகியவற்றைக் கடத்தி அதிக விலைக்கு விற்கின்றனர்.

மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துவிட்டது. காவிரி ஆற்றில் இருந்து விவசாய நிலங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து, கரூர் மாவட்டத்தில் மட்டும் 68,156 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, கரூர் மாவட்டத்தில் மட்டும் ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இப்படி எல்லாம் அரசையும் ஏமாற்றி, விவசாய நிலங்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி, நிலத்தடி நீரை பாழ்படுத்தி, மனித உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கிற மணல் கொள்ளைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஆட்சிக்கு வந்தால் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆகவே, அ.தி.மு.கவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள். செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா...?' என்று குரலை உயர்த்திப் பேசினார் ஜெயலலிதா.

மணல் மாஃபியா!

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிப்படி தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதா?

சதீஷ்குமார், சாம் தேவசகாயம், போலீஸ்காரர்கள் கனகராஜ், அண்ணாமலை உட்பட பலர் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு சற்றும் குறையாமல் தற்போது மணல் கொள்ளை நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் குற்றம்சாட்டுகின்றனர். மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் பல இடங்களில் நடைபெறுகின்றன.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களின் உறுதிமிக்க போராட்டத்தால் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அங்கு, மணல் குவாரியை மூட வைத்ததுடன், ஜே.சி.பி உள்ளிட்ட எந்திரங்களை ஆற்றில் இருந்து அகற்றியுள்ளனர் அந்த மக்கள்.

எழுச்சிமிக்க அந்தப் போராட்டம் குறித்த விவரங்களை அறிந்துகொள்வதற்கு முன்பாக, ஆறுகளில் மணல் அள்ளுவது குறித்து தமிழக அரசால் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் குறித்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் 2003-க்கு முன்புவரை, மணல் குவாரிகள் வருவாய்த் துறை மூலம் தனியாருக்கு ஏலமிடப்பட்டன. குறிப்பிட்ட தனி நபர்கள் கோடீஸ்வரராக ஆவதற்கே அது பயன்பட்டது. எனவே, மணல் குவாரிகளை அரசே நடத்தும் என்று 2003-ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க அரசு முடிவு செய்தது. அரசாங்கத்தின் முறையான அல்லது சட்டரீதியான நடைமுறை என்னவென்றால், அரசுக் குவாரிகளை பொதுப்பணித் துறைக்கு ஒதுக்க வேண்டும், அப்படி ஒதுக்கப்படும் குவாரிகளுக்கு பொதுப்பணித் துறை டெண்டர் மூலமாக லோடிங் கான்ட்ராக்டர் தேர்வு செய்து, அவர்கள் மூலமாக லாரிகளுக்கு மணல் ஏற்றிவிட வேண்டும். மணலுக்கு உரிய விலையினை லாரிகளிடம் இருந்து அரசின் பொதுப்பணித் துறை பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படித்தான், மணல் குவாரி தொடர்பாக, 2003ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டது.

லாரிகளில் மணலை ஏற்றுவதற்கு எந்திரங்கள் தேவைப்பட்டன. எந்திரங்களுக்கு உடனடியாக பணப்பட்டுவாடா செய்ய, லோடிங் ஒப்பந்தப்புள்ளி ஒட்டுமொத்தமாக பெரிய அளவில் கோருவதற்குப் பதிலாக, சிறிய அளவில் தனித்தனியாக ஒப்பந்தங்கள் கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு 1,000 லோடு என்று கணக்கிட்டால், அதன் மதிப்பீடு ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய். அதுவே, ஒரு மாதத்துக்கு என்றால் 45 லட்சம் ரூபாய். ஒரு வருடத்துக்கு ஐந்து கோடி ரூபாய்.

ஒரு வருடத்துக்கான ஒப்பந்தம் என்றால் தலைமைப் பொறியாளரும் ஒரு மாதத்துக்கான ஒப்பந்தம் என்றால் கண்காணிப்புப் பொறியாளரும் ஒரு நாள் அடிப்படையிலான ஒப்பந்தம் என்றால், செயற்பொறியாளரும் கோர வேண்டும். இது ஒரு நல்ல சிஸ்டமாகத்தான் தெரிகிறது. ஆனால், வெறும் ஏட்டளவில்தான். தங்குதடையின்றி நடந்து கொண்டிருக்கிறது மணல் கொள்ளை.

மணல் கொள்ளையை எதிர்ப்பவர்கள் தீர்த்துக்கட்டப்படுகிறார்கள் என்றபோதிலும், போராட்டங்கள் தொடர்கின்றன. வெள்ளாற்றில் மணல் கொள்ளைக்கு எதிராக துணிச்சல்மிக்க போராட்டத்தை நடத்தி வருகிறார்கள், கருவேப்பிலங்குறிச்சி வட்டார மக்கள். அங்கு போராட்டத்தை முன்னெடுப்பவர்களில் ஒருவரான, மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான ராஜுவிடம் பேசினோம்.

மணல் மாஃபியா!

'கடந்த பல ஆண்டுகளாக வெள்ளாத்துல மணல் கொள்ளை நடக்குது. தினமும் 1,000 லாரிகளில் மணல் அள்ளிக்கிட்டுப் போறாங்க. ஏராளமா முறைகேடு நடக்குது. ஒரு லோடுக்கு டி.டி. மூலம் பணம் கொடுத்துட்டு, எட்டு லோடு எடுத்துக்கிட்டு போறாங்க. மணல் எவ்வளவு இருப்பு இருக்குதுங்குற கணக்கு இல்லை. அதனால ஈஸியா முறைகேடு நடக்குது. 2 பொக்லைன் எந்திரங்கள்தான் பயன்படுத்தணும்னு விதி இருக்கு. ஆனா, நாலஞ்சு பொக்லைன் பயன்படுத்துறாங்க. 3 அடிக்கு மேல் மணல் அள்ளக்கூடாது. ஆனா, 30... 40... அடி ஆழத்துக்கு மணல் அள்ளிட்டாங்க. கடந்த 10 மாசத்துல ஒன்றரை லட்சம் லோடு அள்ளிட்டாங்க.

ஆறு முழுக்க எங்க பாத்தாலும் புதைகுழியாத்தான் இருக்கு. நிலத்தடி நீருக்கு பாதிப்பு வந்தா மணல் எடுக்கக்கூடாது. ஆனா, கண்மூடித்தனமா மணலை சுரண்டுனதால நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுப் போச்சு. தண்ணி இல்லாம பம்புசெட் மோட்டார் எல்லாம் உதறல் எடுக்குது. அதனால, இந்தப் பகுதியில ஒவ்வொருத்தரும் 10 அடியில் இருந்து 30 அடி வரைக்கும் ஆழ்குழாயை ஆழப்படுத்தி இருக்காங்க. எங்க ஊரு வெள்ளாத்து மண்ணு வெள்ளைவெளேர்னு இருக்கும். அப்படியே அள்ளித் திங்கலாம்போல இருக்கும். ஆத்தங்கரைக்கு ரெண்டு பக்கமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பச்சைப் பசேல்னு இருக்கும். மணல் கொள்ளையர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக சுரண்டுனதுல வெள்ளாறு கட்டாந்தரையா போச்சு.

அதனாலதான் மணல் கொள்ளைக்கு எதிராக மக்களைத் திரட்டுனோம். கார்மாங்குடி, கருவேப்பிலங்குறிச்சி, நேமம், வல்லியம், சக்கரமங்கலம், முத்துக்கிருஷ்ணாபுரம், கீரனூர், மேலப்பாளையூர், மருங்கூர் உட்பட சுற்றுவட்டார கிராம மக்களிடம் ஒரு மாதமா பிரசார இயக்கம் நடத்துனோம். கடந்த நவம்பர் 10-ம் தேதி கருவேப்பிலங்குறிச்சியில ஆர்ப்பாட்டம் நடத்துனோம். 'நம்முடைய நீர் ஆதாரத்தைப் பாதுகாக்கும் முற்றுகைப் போராட்டத்துக்காக வீட்டுக்கு ஒருத்தர் ஆற்றில் இறங்குவோம்’ என்ற முழக்கத்தை முன் வெச்சு பிரசாரத்தைத் தீவிரப்படுத்துனோம்.

இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் என எல்லாரும் ஆர்வமாக வந்தாங்க. கடந்த ரெண்டாம் தேதி மணல் குவாரியை முற்றுகையிட்டோம். ஏராளமாக போலீஸை குவிச்சிருந்தாங்க. நாலாபுறமும் இருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து குவாரியை முற்றுகையிட்டாங்க. மிகப் பெரிய எழுச்சியாக இருந்துச்சு' என்று உற்சாகமாகப் பேசினார் ராஜு.

வெள்ளாற்றுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள், போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால், மணல் அள்ளுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், ஆற்றுக்குள் உள்ள பொக்லைன் எந்திரங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும், விதிமுறைகளை மீறி மணல் எடுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

'குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தரவிடுவதாக ஆர்.டி.ஓ சொன்னார். பொக்லைன் எந்திரங்களை நீங்க அப்புறப்படுத்தலைன்னா அதை நாங்களே செஞ்சிருவோம்னு சொன்ன உடனே, அதை அதிகாரிகளே அப்புறப்படுத்திட்டாங்க. இப்போ என்ன பிரச்னைனா....மணல் கொள்ளை மூலமாக கோடி கோடியா சம்பாதிச்சுக்கிட்டு இருந்தவங்க, எங்க மேல கொலைவெறியோட இருக்காங்க. தினமும் எங்களுக்குக் கொலை மிரட்டல் வருது. தங்களுக்கு வந்துக்கிட்டு இருந்த வருமானம் போச்சேன்னு அதிகாரிகளும் எங்க மேல கோபமா இருக்காங்க' என்றார் வழக்கறிஞர் ராஜு.

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதா... மணல் அள்ளுவதற்கான விதிமுறைகள் கறாராக பின்பற்றப்படுகின்றனவா என்ற கேள்விகளுக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்வார்களா?

வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படும் திருட்டு மணல்... அதிர வைக்கும் உண்மைகள்... அடுத்த இதழில்!

'வரி ஏய்ப்பு... கள்ளப்பணம்...'

மணல் மாஃபியா!

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும்தான் மணல் அள்ளப்பட வேண்டும் என்பது விதி. ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு குவாரிகளை இயக்கக் கூடாது. ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறான போக்குதான் இங்கு உள்ளது. இந்த மணல் கொள்ளையின் மூலம் மாநில அரசின் வருவாய் குறைவதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசுக்குச் சேர வேண்டிய வருமான வரியும் ஏய்க்கப்படுகிறது. மேலும், கள்ளப்பணமும் கறுப்புப்பணமும் ஊக்குவிக்கப்படுகிறது.

ஜெயலலிதா, (கரூரில் 2011 தேர்தல் பிரசாரத்தில்...)

ஒரு லோடு பணம்... பல லோடு மணல்...

இரண்டு யூனிட் மணல் (ஒரு யூனிட் என்பது 100 கன அடி) என்பது ஒரு லோடு. இங்குள்ள லாரிகள், 200 கன அடி முதல் 350 கன அடி வரை கொள்ளளவு கொண்டவை. டாரஸ் வகை லாரிகள் 500 கன அடி முதல் 650 கன அடி வரை கொள்ளவு கொண்டவை. இரண்டு யூனிட் மணல் ரூ. 626 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அந்தத் தொகையை வரைவு ஓலையாக (டி.டி) ஆற்று நுழைவில் பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கொடுத்துவிட்டு, அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு லோடுக்கான தொகையை செலுத்திவிட்டு, பல லோடு மணல் அள்ளப்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

65 ஆயிரம் மணல் லாரிகள்

மணல் அள்ளுவதற்காக 65 ஆயிரம் லாரிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனாலும், தினமும் சுமார் 50 ஆயிரம் மணல் லாரிகள் இயக்கப்படுகின்றன. தோராயமாக, அவை நாளொன்றுக்கு ஒரு லோடு என்று விகிதத்தில், ஓர் ஆண்டுக்கு 150 நாட்கள் இயக்கப்படுகின்றன என்று வைத்துக்கொண்டால், 75,00,000 லோடு மணல் அள்ளப்படுகிறது. அதற்கு அரசின் மணல் குவாரி விலையின்படி (75,00,000 x 626) வருமானம் ரூ.487 கோடி. இந்த 75,00,000 லோடு மணலும் ஸ்டாக் யார்டு மூலம் மட்டுமே விற்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்டாக் யார்டு நடத்துபவர்களுக்கு கிடைக்கும் வருமானம் (75,00,000 x 4000 = 30,00,00,00,000) 3 ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்குப் போட்டு சொல்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு