Published:Updated:

மணல் மாஃபியா!

மணலுக்கும் மாற்று உண்டு!ஸ்பெஷல் பிராஞ்ச்

பிரீமியம் ஸ்டோரி
மணல் மாஃபியா!

' மாண்புமிகு  நீதிபதி அவர்களே! தமிழ் நாட்டில் உள்ள எல்லா ஆறுகளிலும் நான் மூழ்கிக் குளித்திருக்கிறேன். நீச்சல் அடித்து இருக்கிறேன். எல்லா ஆறுகளின் தண்ணீரையும் பருகியிருக்கிறேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 60 ஆண்டுகள் பணியாற்றியவன் என்ற வகையிலும் விவசாயிகள் சங்கத்தில் இருந்து பல ஆண்டுகள் உழைத்தவன் என்ற வகையிலும் விவசாய நிலங்கள் மற்றும் ஆற்றுப்படுகைகளின் பாதுகாப்பில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் உள்ளவன் என்கிற முறையிலும் என்னுடைய கருத்துகளை இந்த பொதுநல மனுவில் முன்வைக்க அனுமதி கோருகிறேன்'' என்று மணல் கொள்ளையை எதிர்த்து நீதிக்கான போராட்டத்தை உயர் நீதிமன்றத்தில் தொடங்கினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு.

தாமிரபரணி நதியில் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்த நல்லகண்ணு, நீதிமன்றத்தில் ஆஜராகி ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தார். அந்த வழக்கில், தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ள தடை விதித்து தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம். 'மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்பதோடு மட்டுமே அவர் நின்றுவிடவில்லை. மணலுக்கான மாற்றுப் பொருட்களின் தேவை குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

செயற்கை மணல்!

'எம் சாண்ட்’ (M sandஅல்லது Manufactured sand) எனப்படும் செயற்கை மணல் உட்பட மணலுக்கு மாற்று நிறைய இருப்பதாகக் கட்டுமான வல்லுநர்கள் கூறுகின்றனர்.

'மணலுக்கு மாற்றாக செயற்கை மணல்  உருவாக்கப்பட்டு இருக்கிறது. கருங்கற்களில் இருந்து இயந்திரங்கள் மூலமாக தயாரிக்கப்படும் அந்த மணல், ஆற்று மணலுக்கு சமமானது. விலையும் குறைவு.  மூட்டைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.  தகுந்த அளவுகளில், தரமாகத் தயாரிக்கப்படுவதால் கலவை மற்றும் கான்கிரீட்டின் வலிமையும் தரமும் கூடுகிறது. பூச்சு வேலையைத் தவிர மற்ற அனைத்துக் கட்டுமானப் பணிகளுக்கும் இதைப் பயன்படுத்த முடியும். கேரளாவில் திருவனந்தபுரம், தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இத்தகைய செயற்கை மணல் வெளிச்சந்தையில் கிடைக்கிறது' என்கிறார், தமிழ்நாடு பொதுப்பணித் துறை ஓய்வுபெற்ற மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர், பொறியாளர் அ.வீரப்பன்.

இந்த விஷயத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கதாக உள்ளது. அங்கு, பொதுப்பணித் துறைக்கான கட்டடங்கள், பாலங்கள் மற்றும் பிற கட்டுமானப் பணிகளுக்கு செயற்கை மணலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை கர்நாடக மாநில அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. மணல் அள்ளப்படுவதை முறைப்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய கர்நாடக அரசு, நடப்பில் உள்ள மணல் கொள்கையை மாற்றிவிட்டு, புதிய மணல் கொள்கையைக் கொண்டுவர முடிவு செய்தது. கர்நாடகத்தில் மாதம் ஒன்றுக்கு 33 லட்சம் டன் மணல் தேவை என்றும் ஆனால் 8 - 9 லட்சம் டன் மணல் மட்டுமே கிடைப்பதாகவும் இதனால் கூடுதல் விலை கொடுத்து மணல் வாங்க வேண்டியிருப்பதாகவும் கர்நாடக அரசு கருதியது. ஆற்று மணலை அள்ளுவதால் சுற்றுச்சூழல் பிரச்னை, நிலத்தடி நீர் மாசு உட்பட பல பிரச்னைகள் இருப்பதாலும், கட்டுமானச் செலவு அதிகரிப்பதாலும் செயற்கை மணலுக்கு மாறுவதாக கர்நாடக மாநில அரசு கூறியது. செயற்கை மணல் பயன்படுத்தப்படுவதால் கட்டுமான செலவில் பெருமளவு குறைகிறது. பெங்களூரு அருகே பிடதி உட்பட பல இடங்களில் செயற்கை மணலை உற்பத்தி செய்யும் ஆலைகளை தனியார் நிறுவனத்தினர் தொடங்கி உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் அது பற்றிய சிந்தனையே தமிழக அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. கட்டுமானத் துறை வல்லுனர்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தபோதிலும் மணலுக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்து தமிழக அரசு மௌனம் காக்கிறது. மணல் மூலமாக வருகிற வருமானம் பாதிக்கப்பட்டுவிடும் என்று கருதுகிறார்கள் போலும்.

ஆற்றுமணல் பயன்பாட்டை குறைப்பதற்கு வேறு சில ஆலோசனைகளையும் முன்வைக்கிறார் பொறியாளர் வீரப்பன். 'தமிழ்நாட்டில் மேட்டூர் அணை, பவானி சாகர் உட்பட 50-க்கும் மேற்பட்ட பெரிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. அவற்றில் சில 100 ஆண்டுகளுக்கு முன்பும், சில அணைகள் 5060 ஆண்டுகளுக்கு முன்பும் கட்டப்பட்டவை. இந்த அணைகளில், ஆற்று நீரில் அடித்து வரப்படும் மணல் தேங்குகிறது. இதனால், அந்த அணைகளில் மணல் படுகை (Slit up) உருவாகிறது. பல அணைகளில் Dead Storage  எனப்படும் தண்ணீர் அளவுக்கும் அதிகமாகவேகூட மணல் படிந்துள்ளது. தமிழக நீர்த்தேக்கங்களில், 20 கோடி யூனிட் மணல் எடுக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த மணலை எடுத்து கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

மணல் மாஃபியா!

தமிழ்நாட்டில் 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன. அவற்றில் 10 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய்விட்டதாக வைத்துக்கொள்வோம். மீதமுள்ள 29 ஆயிரம் ஏரிகள், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. எல்லா ஏரிகளிலும் நிறைய வண்டல் படிந்துள்ளது. இதன் மூலம் 15 கோடி யூனிட் மண் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், சுமார் 25 சதவிகித மணல் தேவையைக் குறைக்க முடியும். அதை, கட்டுமானத்துக்கு அடித்தளம் அமைக்கவும், பள்ளங்களை நிரப்பவும், சாலைகள் அமைக்கவும், செங்கல் உற்பத்திக்கும் பயன்படுத்தலாம்.

ஏரிகளில் உள்ள வண்டல் மற்றும் நீர்த்தேக்கங்களில் உள்ள மணல் படுகை ஆகியவற்றை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு ஒரு செலவும் இல்லை. ஏலம் விட்டால் போதுமானது. தேவையானவர்கள் எடுத்துக்கொள்வார்கள். இதனால் மணல் தேவை குறைவதோடு, நீர்த்தேக்கங்கள் மற்றும் கண்மாய்/ஏரிகளில் நீர் கொள்ளளவும் அதிகரிக்கும்.  இந்த மாற்றுப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், தற்போதைய மணல் தேவையில் 6070 சதவிகிதத்தைக் குறைக்க முடியும்' என்று சொல்கிறார் வீரப்பன்.

இரும்பு, பித்தளை உள்ளிட்ட தாதுக்கழிவுகளில் இருந்தும் செயற்கை மணலை உற்பத்தி செய்ய முடியும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இரும்பு கழிவுகளில் இருந்து 2020ம் ஆண்டுக்குள் 70 மில்லியன் டன் செயற்கை மணலை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக ஜிண்டால் ஸ்டீல் நிறுவனம் கூறியுள்ளது. இரும்பு கழிவில் இருந்து உருவாக்கப்படுகிற ஒரு டன் செயற்கை மணலின் விலை ரூ.100 மட்டுமே என்கிறார்கள்.

ஆற்றுமணல் பெருமளவில் சுரண்டப்பட்டுவிட்ட நிலையில், இருக்கும் மணலை காப்பாற்றவாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளா மற்றும் கர்நாடகத்தைப் பின்பற்றி தமிழக ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும். அல்லது, குறைந்தபட்சம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட மணல் அள்ளப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். செயற்கை மணல் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சில மாவட்டங்களில் செயற்கை மணல் கிடைத்தபோதிலும் அது குறித்த விழிப்பு உணர்வை மக்களிடம் உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிக்கும் தாமிரபரணி

தமிழகத்தில் தோன்றி தமிழகத்திலேயே முடிகிற ஆறு என்ற பெருமைக்குரியது தாமிரபரணி. எந்த மாநிலத்துடனும் மல்லுக்கட்டாமல் நாம் அனுபவிக்கிற ஆறு இது. இந்த அருமைபெருமைகளை புறந்தள்ளி தாமிரபரணியை சிதைத்து விட்டார்கள் மணல் கொள்ளையர்கள். 105 பெரிய, நடுத்தர,  சிறிய அணைக்கட்டுகள் மூலமாவும், பாயும் வழியில இருக்கற ஆதாரக் கிணறுகள் மூலமாவும் ஏராளமான கிராமங்களுக்குத் தண்ணீர் வழங்கி வந்தது தாமிரபரணி. மணல் சுரண்டப்பட்டதால், அந்தக் கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அளவுக்கு மீறி மணல் எடுக்கப்பட்டதால் கூட்டுக் குடிநீர்த்திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக  சூழலியலாளர்கள் கூறுகின்றனர். 87,815 ஹெக்டேர் நிலங்கள் நேரடியாவும் 11,50,000 ஹெக்டேர் நிலங்கள் மறைமுகமாகவும் தாமிரபரணியால் பாசன வசதி பெற்றன. இப்போது நிலைமை தலைகீழ்.

காணாமல் போகும் காவிரி

’சோழ நாடு சோறுடைத்து’ என்று ஒருகாலத்தில் புகழ் பாடப்பட்ட தஞ்சை தரணியின் இன்றைய நிலை சோகமானது. அண்டை மாநிலத்தின் வஞ்சனையால் காவிரியின் நீர்வளம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், அதன் மணல் வளத்தையே ஒட்டுமொத்தமாக சுரண்டுகிறார்கள், தமிழ்நாட்டு மணல் கொள்ளையர்கள். தமிழகத்தின் நெல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியைத் தரவல்லது காவிரிப் படுகை. இன்றைக்கு அது கடும் பாதிப்புக்கு ஆளாகி கொள்ளிடம், காவிரி ஆற்றுப்படுகைகளில் பல குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். கிருஷ்ணராயபுரம் தாலுகா உட்பட காவிரி ஆற்றங்கரையில் உள்ள பல பகுதிகள் பாலைவனமாகும் என்ற அஞ்சப்படுகிறது.

'மணல் நல வாரியம் அமைக்க வேண்டும்!'

மணல் மாஃபியா!

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் செல்ல.இராசாமணி பேசியபோது, 'மணல் லோடு ஏற்றுவதில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. டோக்கன் வாங்கினால்தான் மணல் குவாரிக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. டோக்கன் வாங்கவில்லை என்றால், மூன்று நாட்கள் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது. அதனால், டிரைவருக்கும் கிளீனருக்கும் கூடுதலாக பேட்டா கொடுக்க வேண்டியிருக்கிறது. டோக்கன் சிஸ்டத்தைத் தமிழக அரசு தடை செய்ய வேண்டும். வெளி மாநில லாரிகளுக்கு மணல் லோடு ஏற்றக் கூடாது என்று சட்டமே இருக்கிறது.

ஆனால், கர்நாடகாவில் இருந்து வரும் சிமென்ட் லாரிகளில் மணல் கடத்திச் செல்லப்படுகிறது. இங்கிருந்து மணலை ஏற்றிச் செல்லும் வெளி மாநில லாரிகளைப் பிடிக்க தனிப்படைகளை அமைக்க வேண்டும். மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் பதிவுபெற்ற லாரிகளுக்கு மட்டுமே மணல் லோடு ஏற்ற வேண்டும்.

மணல் நல வாரியம் அமைத்து, அதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை அதிகாரியாக நியமிக்க வேண்டும். மணல் லாரி உரிமையாளர்கள், கட்டுமானப் பொறியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை அதில் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். அதுபோல, மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சியர் மணல் பயனீட்டாளர் குறைதீர்க்கும் கூட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற குறைபாடுகளை களைய முடியும்' என்று சொன்னார்.

மலைமாவு

''மலைமாவு (Quarry Dust Stone, Crusher Dust) எனப்படும் கருங்கல்லுடைத்தூள் உள்ளது. மணலைக் காட்டிலும் இது வலுவானது என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்லுடை தொழிலகங்களில் கிடைக்கும் இந்தத் தூள் பெருமளவில் கிடைக்கிறது. இது, ஆற்று மணலில் பாதி விலைதான். எனவே, கட்டுமானச் செலவும் குறையும்' என்கிறார் பொறியாளர் அ.வீரப்பன்.

''ஸ்டாக் யார்டு முறை ரத்து செய்யப்படுமா?'

மணல் மாஃபியா!

'ஸ்டாக் யார்டு முறை ரத்து செய்யப்பட வேண்டும். ஆறுகளிலேயே லாரிகளுக்கு மணல் ஏற்ற வேண்டும். லோடிங் கான்ட்ராக்ட் ஒப்பந்தங்களை வெளிப்படையாக நடத்த வேண்டும். மணல் விற்பனையை முறைப்படுத்தி முழு வருமானமும் அரசுக்குக் கிடைக்கும் வகையில் கவனத்துடன் செயல்படுவதற்கான தனித்துறை அல்லது சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அரசு ஒப்புதல் அளிக்கும் குவாரிகள் குறித்து வெளிப்படையான அறிவிப்பு வேண்டும். அதில் குவாரியின் பரப்பளவு, மணல் தோண்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஆழம், இயங்கும் கால அளவு ஆகிய விவரங்கள் குறித்து அறிவிப்புப் பலகை வைக்கப்பட வேண்டும். குவாரிகள் மற்றும் அதன் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகள் குறிக்கப்பட்டு பார்வையில் தெரியும் வகையில் அமைவதோடு, அனுமதிக்கப்பட்ட ஆழத்தைக் கொண்ட ஒப்பீட்டுக் குழிகள் தேவையான எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்காக அறியாமல் மாட்டுவண்டியில் மணல் அள்ளும் எளியவர்களைப் பிடித்து வழக்குப்போடுவதை நிறுத்திவிட்டு, விதிமுறைகளை மீறுவோர் மீதும் உண்மையான மணல் கொள்ளையர்கள் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்''  பொறியாளர் எஸ்.எஸ்.பாலாஜி (பொதுச்செயலாளர், சிவில் இன்ஜினீயர்ஸ் ஃபோரம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு