Published:Updated:

அழுவதற்குக்கூட அவகாசம் இல்லை!

மா.அ.மோகன் பிரபாகரன்

பிரீமியம் ஸ்டோரி

புத்தகப் பையோடு சின்னச் சின்ன ஆசைகளையும் கனவுகளையும் மனதில் சுமந்தபடி பள்ளிக்குள் நுழைந்தனர் அந்தக் குழந்தைகள். பள்ளிக்கூடம் தொடங்கிய அடுத்த அரை மணிநேரத்தில் வகுப்பு அறைகளுக்குள் புகுந்த காட்டுமிராண்டிகள் குழந்தைகளைச் சரமாரியாகச் சுட... அழுவதற்குக்கூட அவகாசம் இல்லாமல் சுருண்டு விழுந்தன அந்த ரோஜாப் பூக்கள். பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் இயங்கிவரும் ராணுவப் பள்ளியில் நடந்த இந்த கொடூரச் செயல் உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அழுவதற்குக்கூட அவகாசம் இல்லை!

 கடந்த 16-ம் தேதி, காலை 10.30 மணி. பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரிபவர்களின் குழந்தைகள் படிக்கக்கூடிய இந்தப் பள்ளியில் மொத்தம் 900க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் தேர்வுகளுக்காகத் தயார் ஆகிக் கொண்டிருந்தனர். பள்ளிக்குப் பின்புறம் இருந்த கல்லறைத் தோட்டத்தில் இருந்து வந்த 7 தீவிரவாதிகள் குழந்தைகள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறிவதற்குள் கொத்துக் கொத்தாக இறந்து விழுந்த குழந்தைகளின் எண்ணிக்கை 132.

''எங்கள் வகுப்புக்குள் நுழைந்த இரண்டு பேர், 'யார் எல்லாம் உயிரோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, கையைத் தூக்குங்கள்’ என்று சொன்னார்கள். எல்லோரும் கைதூக்க அதில் இருந்து எட்டு பேரை மட்டும் முன்னால் அழைத்து, வரிசையாக நிற்கவைத்து எங்கள் கண்முன்னே தலையில் சுட்டனர். அதன் பின்னர் அவர்கள் எங்களை நோக்கி சுடத் தொடங்கினார்கள். கூட்டம் கூட்டமாக கிடந்த என் நண்பர்களின் பிணங்கள் மேல் நானும் இறந்ததைப்போல படுத்துக்கொண்டேன். அனைவரையும் கொன்றுவிட்டோம் என்று உறுதிப்படுத்திய பின்னரே அடுத்த அறைக்கு அவர்கள் சென்றார்கள்' என்று அதிர்ச்சியில் இருந்து விலகாமல் சொல்லி இருக்கிறான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தௌபீக்.

அழுவதற்குக்கூட அவகாசம் இல்லை!

இரண்டு கால்களும் குண்டுகளால் துளைக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் 16 வயது மாணவன் ஷாரூக்கான், 'பள்ளியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் தேர்வெழுதிக் கொண்டிருந்த எங்களை ஆசிரியர்கள் தரையில் படுத்துக்கொள்ளும்படி சொன்னார்கள். நாங்களும் பெஞ்சுக்கு அடியில் ஒளிந்துகொண்டோம். அந்தச் சமயத்தில் எங்கள் வகுப்பறைக்குள் வந்தவர்கள் துப்பாக்கியால் எங்களை நோக்கிச்சுட ஆரம்பித்தார்கள். எனக்கு மயக்கம் வந்துவிட்டது' என்று பதறுகிறான்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அஹமது என்ற மாணவன், ''நான் கதவுகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டேன். நான் பார்த்தபோது எங்கள் ஆசிரியரின் உடல் எரிந்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில்தான் ஒரு குண்டு என் தோள்பட்டையில் பாய்ந்தது' என்கிறான் நடுக்கத்துடன்.

அழுவதற்குக்கூட அவகாசம் இல்லை!

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பான தெஹ்ரிக்இதாலிபன் பொறுப்பேற்று உள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாகிஸ்தான் ராணுவம் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து வடக்கு வஜிரிஸ்தானில் எங்களின் உறுப்பினர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகத்தான் இந்தப் பள்ளியில் தாக்குதல் நடத்தி உள்ளோம். அவர்களின் தாக்குதலில் பலியான பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றி இந்த நேரத்தில் நினைத்துப் பாருங்கள். மேலும் உங்களது நடவடிக்கைத் தொடர்ந்தால், இதுபோன்று பல ராணுவப் பள்ளிகளில் தொடர் தாக்குதல் நடக்கும்' என்று குறிப்பிட்டு உள்ளனர்.

அழுவதற்குக்கூட அவகாசம் இல்லை!

ஆனால், பாகிஸ்தானின் உளவு அமைப்பு வழக்கம்போல இந்தத் தாக்குதலை இந்தியா மீதான தன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக்கொள்ளத் தயாராகி உள்ளது. பாகிஸ்தானின் பாதுகாப்பு வல்லுனரான ஜமான் ஹமீத், 'இந்தியர்களே... உங்களது வன்முறையை நாங்கள் மன்னிக்கமாட்டோம். நீங்கள் டிசம்பர் 16-ம் தேதியை குறித்து வைத்து தாக்கியுள்ளீர்கள். நாங்கள் உங்களை ஒழிப்பதில் உறுதியாக உள்ளோம்' என்று ட்விட்டரில் தெரிவிக்க அதற்கும் ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

டிசம்பர் 16 இந்தியா  பாகிஸ்தான் போர் நடந்த தினம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு