Published:Updated:

'இனி எங்கே போவோம்?’

மரணத்தில் முடிந்த அரவிந்தர் ஆசிரமப் போராட்டம்

பிரீமியம் ஸ்டோரி

'பேரின்பத்தைவிடப் பெரிய இன்பத்தை மனிதனுக்கு வாழ்வு மூலம் இறைவன் அளிக்கிறான்! ஆனால், மனிதன் அதை அறியாமல் வாழ்வை ஏற்று ஏமாற்றுகிறான்!’ என்பது ஸ்ரீஅரவிந்தர் அன்னையின் அருள்வாக்கு. அதை அவரது ஆசிரமத்தில் இருந்தவர்களே புரிந்துகொள்ளாமல் போனதால்தான் மூன்று உயிர்கள் காவு வாங்கப்பட்டிருக்கின்றன.

புதுடெல்லியைச் சேர்ந்தவர் பிரசாத். மனைவி சாந்தி தேவி, மகள்கள் ஜெயஸ்ரீ, அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ, நிவேதிதா, ஹேமலதா ஆகியோருடன் 1983-ம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்தார் பிரசாத். அவர்கள், அரவிந்தர் ஆசிரமத்துக்குச் சொந்தமான 'அம்பாபிக்‌ஷு’ விடுதியில் தங்கினர். ஹேமலதாவும், நிவேதிதாவும் ஆசிரமப் பள்ளியில் படித்தனர்.

'இனி எங்கே போவோம்?’

இவர்கள் தங்கியிருந்த இல்லத்துக்கு சிலர் வந்து தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவதாகவும், ஆபாசமான படங்களை தங்களது அறைக்குள் போடுவதாகவும் ஆசிரம நிர்வாகத்திடம் புகார் செய்தனர். பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்தனர். ஆனால், அந்தப் புகாரில் உண்மை இல்லை என்று சொன்ன ஆசிரம நிர்வாகம், ஆசிரம விதிமுறைகளை பிரசாத் குடும்பத்தினர் மீறிவிட்டனர் என்று சொல்லி விடுதியை விட்டு வெளியேறுமாறு 2001-ல் நோட்டீஸ் அனுப்பியது. அதை ஏற்க மறுத்த சகோதரிகள், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். இவர்கள் மனுவை விசாரித்த நீதிமன்றம், 'மனுதாரர்களுக்கு வழக்கு முடியும்வரை தங்குமிடமும் உணவும் ஆசிரம நிர்வாகம் வழங்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதன் பிறகு, தங்களுக்குத் தொடர்ச்சியாக மிரட்டல் வருவதாகவும் இந்த இடம் பாதுகாப்பானதாக இல்லை என்றும் அந்த சகோதரிகள் சொன்னார்கள். எனவே, இவர்கள் அனைவரும் தனியார் காப்பகத்தில்  தங்குவதற்கு மாதம் ரூ.5,800 வழங்க வேண்டும் என்று ஆசிரம நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஆசிரம நிர்வாகம் டி.டி மூலம் கொடுத்து அனுப்பிய தொகையை வாங்க மறுத்த சகோதரிகள், 'நாங்கள் ஆசிரமத்திலேயே தங்க வேண்டும். அதற்கு எங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் சென்றனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சுதன்சு ஜோதி முகோபாத்யாயா, 2014 ஜூலை 31-ம் தேதிக்குள் ஆசிரம விடுதியை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஆனால், இந்த நீதிபதி ஆசிரமத்துக்கு வந்துசெல்பவர் என்றும் இவரது தீர்ப்பை ஏற்க முடியாது என்றும் சகோதரிகள் சொன்னார்கள். அதையடுத்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோபி, ரோஹிண்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த அமர்வு, ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்ததுடன் ஆசிரம விடுதியைவிட்டு இவர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.

'இனி எங்கே போவோம்?’

டிசம்பர் 16-ம் தேதி விடுதியைவிட்டு வெளியேறுமாறு அந்த சகோதரிகளிடம் ஆசிரம நிர்வாகம் சொன்னது. சகோதரிகளில் ஒருவரான ஹேமலதா அதை ஏற்க மறுத்தார். வீட்டின் மொட்டை மாடியின் மீது ஏறிநின்று தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டினார். அங்கு வந்த காவல் துறையினர் அவரை மீட்டனர். பின்னர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விடுதியில் இருந்து வெளியேற்றினர். 'இத்தனை வருஷம் இங்கேயே வாழ்ந்துட்டோம். இனி எங்கே போவோம்’ என்று அவர்களுக்குள் பேசியபடி நீண்ட நேரம் ஆசிரமத்தையே பார்த்தபடி நின்றது அந்தக் குடும்பம். அதன் பிறகுதான் விடியற்காலையில் ஒட்டுமொத்தக் குடும்பமும் காலாப்பட்டு கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்றனர். அதில் தாய் சாந்திதேவி, சகோதரிகள் அருணா, ராஜ்ய ஆகியோர் பரிதா​பமாக உயிரிழந்தனர். மூவரின் உடல்களும் தந்திராயன்குப்பம் கடற்கரையில் ஒதுங்கின. நிவேதிதா, ஹேமலதா உட்பட மீதி நால்வரையும் மீனவர்கள் காப்பாற்றினர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

''தற்்போது ஆசிரமத்தில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் அன்னையால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் இப்போது 80 வயதுக்கு மேல் ஆகிறது. அதனால் ஆசிரம நிர்வாகத்தைக் கைப்பற்றுவது யார் என்பதில் இரண்டு தனி நபர்களுக்கு இடையில் கடும் போட்டி நடக்கிறது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இந்தப் போட்டியில் இருக்கும் சிலருக்கு இந்தப் பெண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்' என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

'விதி முடிவு அல்ல... நம்பிக்கைதான் முடிவு!’  இதுவும் அன்னை சொன்னதுதான்!

ஜெ.முருகன்

படங்கள்: அ.குரூஸ்தனம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு