Published:Updated:

பகலில் அழைத்து வந்து... இரவில் பலி கொடுத்து...

நடுங்க வைக்கும் கிரானைட் நரபலிகள்!சண்.சரவணக்குமார்

டுக்கி வைக்கப்பட்ட கிரானைட் கற்கள்போல சகாயத்திடம் புகார்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. மீண்டும் மதுரைக்கு வந்து கிரானைட் முறைகேடுகள் பற்றிய விசாரணையை ஆரம்பித்திருக்கிறார் சகாயம்.

 ''நம்பிக்கை வந்திருக்கு!''

பகலில் அழைத்து வந்து... இரவில் பலி கொடுத்து...

சாந்தி என்ற பெண் எஸ்.ஐயும் அவருடன் இரண்டு பெண் போலீஸாரும் நீண்ட நேரமாகக் காத்திருந்து சகாயத்திடம் மனு கொடுத்தார்கள். எஸ்.ஐ சாந்தியிடம் பேசினோம். ''மதுரையில்  போலீஸ் அதிகாரியாக  இருந்த ஒருவர், எங்கள் துறையில் உள்ளவர்களுக்கு மட்டும் பிளாட் போட்டு விற்றார். 35 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பிளாட் வாங்கினோம். வாங்கிய கொஞ்ச நாட்களிலேயே அந்த இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி மலைபோல அடுக்கி வைத்து இருந்தனர். அதனால் அந்த இடத்தில் எங்களால் வீடு கட்ட முடியவில்லை. நாங்கள் கேட்டதும், எங்களை மிரட்டினார்கள். அவங்களோட மிரட்டலுக்கு பயந்து அடிமாட்டு விலைக்கு நிலத்தைக் கொடுத்துட்டு வந்தோம். எங்க இடத்தை மீட்டுக் கொடுக்கச் சொல்லித்தான் சகாயம் சார்கிட்ட புகார் கொடுத்துட்டு வந்திருக்கேன். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கு' என்று சொன்னார்.

பகலில் அழைத்து வந்து... இரவில் பலி கொடுத்து...

நடுங்கவைக்கும் நரபலிகள்!

தாமரைப்பட்டி கிராமத்தில் நடந்து வந்த பி.கே.எஸ் கிரானைட் குவாரியில் கடந்த 2008-ம் ஆண்டு கோபிகா என்ற மூன்று வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்டார் என்று புகார் கிளம்பியது. கோபிகா மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட... ரவி என்ற லாரி டிரைவரைக் கைது செய்தது போலீஸ். அந்த லாரி டிரைவர் ரவி, சகாயத்திடம் மனு கொடுக்க வந்திருந்தார். 'கோபிகாவை நான் கொலை செய்யவில்லை. வழக்கை திசைதிருப்ப போலீஸ் என் மீது பழி போட்டுவிட்டனர். உண்மையான குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள். அவங்களைப் பிடிக்கச் சொல்லுங்கய்யா...' என்று சகாயத்திடம் கதறினார் ரவி.

பகலில் அழைத்து வந்து... இரவில் பலி கொடுத்து...

மேலூர் கீழவளவு பகுதியைச் சேர்ந்த சேவற்கொடியோன் என்பவர், 'நான் பி.ஆர்.பி கிரானைட் குவாரியில் 1998 முதல் 2003 வரை டிரைவராக வேலை பார்த்தேன். நான் வேலை பார்த்து வந்த காலத்தில் மூடநம்பிக்கை அடிப்படையில்  நரபலி கொடுக்க ஒடிசா, ஆந்திரா, பீகார் மாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்த ஏழைகள் பலரை நரபலி கொடுத்தனர். அதை மறைத்து விபத்தில் இறந்ததாகப் பொய் சொல்லிவிடுவார்கள். புதிய கிரேன், பொக்லைன் வாங்கும் ஒவ்வொரு முறையும் கேரளாவில் இருந்து மந்திரவாதிகளைக் கூட்டி வந்து நரபலி கொடுப்பார்கள். மதுரை சாலைகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த இரண்டு பேரை மனோகரன் என்பவர் அழைத்து வந்தார். காரை நான் ஓட்டி வந்தேன். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இருவரையும் அன்று இரவே பலி கொடுத்தார்கள். கரூர் பக்கத்தில் உள்ள தோகைமலை ஏரியாவில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேரை அனுமந்தன் என்பவர் அழைத்து வந்தார். அவர்களும் பலி கொடுக்கப்பட்டார்கள். அதேபோல தூத்துக்குடியில் இருந்தும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பிடித்து வந்தார்கள். அவரும் அன்றே பலி கொடுக்கப்பட்டார். ஜோதிபாசு என்ற மேனேஜர் புதுக்கோட்டையில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அழைத்து வந்தார். இவர்கள் எல்லோருக்கும் நான்தான் கார் ஓட்டினேன். மேலூர் கீழவளவு பகுதியில் கல்லுதின்னி சேக்கு என்பவர் டூவீலரில் மனநலம் பாதித்த ஒருவரை கூட்டிவந்து ஜோதிபாசுவிடம் ஒப்படைத்தார். அடுத்த நாள் அந்த ஆளை நரபலி கொடுத்தனர். இது அத்தனையும் எனக்குத் தெரிந்து நடந்த நரபலிகள். எனக்கு மனதுக்குள் பெரும் வேதனையாக இருந்தது. இதை வெளியில் சொன்னால் நடவடிக்கை எடுக்கும் தைரியம் எந்த அதிகாரிக்கும் கிடையாது. பதிலுக்கு அவர்கள் என்னையே காட்டிக் கொடுத்துவிடுவார்கள். இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதால் நான் தைரியமாக புகார் கொடுத்துட்டேன். தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள்!' என்று சொல்லி, மனுவையும் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.

கிணறு வெட்ட ஆரம்பித்துவிட்டார் சகாயம்... இன்னும் எத்தனை பூதங்கள் கிளம்பப்போகிறதோ?

படங்கள்: ஈ.ஜெ.நந்தக்குமார்

இவர்தான் பிரேமா ராணி !

பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபக்கம் வரிசையில் நின்று புகார் கொடுத்தபடி இருக்க... அஞ்சல் வழியாக வந்தது அந்தக் கடிதம். கடிதத்தைப் பிரித்துப் படித்த சகாயம் அதிர்ந்துவிட்டார். ''உயர்திரு. சட்டப்பணி ஆணையர் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு, குமார் எழுதும் கடிதம். என்னுடைய உறவினர்களும் எனக்கு வேண்டப்பட்டவர்களும் கனிம வள குவாரி நடத்துகிறார்கள். அவர்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தக்கூடாது. எந்தவித இடையூறும் கொடுக்கக்கூடாது. உடனே மதுரையை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால், நீங்கள் உயிருடன் திரும்ப முடியாது. அதையும் மீறி தொந்தரவு கொடுத்தால், இங்குள்ள குவாரியில் போட்டு சமாதி ஆக்கிவிடுவோம். சகாயம் உடம்பிலுள்ள கறி கூறுபோட்டு விற்கப்படும்.

பகலில் அழைத்து வந்து... இரவில் பலி கொடுத்து...

என் மனைவி பிரேமா ராணி நெடுஞ்சாலைத் துறையில் ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்கிறார். இவருக்கு பதவி உயர்வும், சேலத்துக்கு பணியிட மாற்றமும் செய்ய நீங்கள் உதவி செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் அவர் உதவி செயற்பொறியாளராக உள்ளார். இவருக்குப் பணி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நீங்கள் மதுரையில் தங்கி விசாரணை நடத்தக்கூடாது. விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டும்'' என்று முடிந்திருந்தது அந்தக் கடிதம்.

கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிரேமா ராணியைத் தேடி, ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்குப் போனோம். கொடுமுடியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பிரேமா ராணி உதவி செயற்பொறியாளராக இருக்கிறார். இந்த கடித விவகாரத்துக்குப் பிறகு பிரேமா ராணி விடுப்பில் சென்றுவிட்டார். நீண்ட முயற்சிக்குப் பிறகு அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். ''இப்படி ஒரு கடிதத்தை யாரு எழுதினாங்க என்று எனக்குத் தெரியலை. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ராசிபுரத்தில்தான். படிப்பு முடிஞ்சதும் சேலம், குரங்குச்சாவடியைச் சேர்ந்த குமார் என்பவரை காதலித்து கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். எங்களுக்குத் திருமணமாகி 25 வருஷம் ஆகிடுச்சு. ஒரே பொண்ணு. சென்னையில் ஐ.ஏ.எஸ் ட்ரெயினிங் சென்டர்ல படிச்சுட்டு இருக்கா. கடந்த அஞ்சு வருஷமா கரூர்ல வேலை பார்த்தேன். கொடுமுடிக்கு மாற்றலாகி வந்து ஒரு வருடம்தான் ஆகுது. என்னோட சர்வீஸ்ல யாருக்காகவும் நான் வளைந்து கொடுக்க மாட்டேன். நேர்மை என்பது எனக்குள் ஊறிப்போன விஷயம்.

ரெண்டு மாசத்துக்கு முன்பு சேலம் ரயில்வே கோட்ட அலுலகத்துக்கு குண்டு வைத்து தகர்க்கப்போவதாக எங்களுடைய பெயரில் மிரட்டல் கடிதம் போயிருக்கிறது. அப்போது சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து விசாரணைக்குக் கூப்பிட்டார்கள். எனக்கும் அந்தக் கடிதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டேன். இப்போது நான் மிகவும் மதிக்கும் சகாயம் சாருக்கு என் கணவர் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். இதை யார் செய்கிறார்கள் என்று எனக்கே புரியவில்லை. என்னுடைய அலுவலகத்தில் சங்கர் என்ற தற்காலிகப் பணியாளர் ஒருவர் இருந்தார். அவர் தினமும் குடித்துவிட்டு அலுவலகம் வருவார். நான் பல முறை கண்டித்துப் பார்த்தேன். அவர் திருந்தவில்லை. அதனால் வேறு வழியில்லாமல், அவரை பணியில் இருந்து நீக்கினேன். அவர்தான், 'பொறுத்திருந்து பாருங்கள்... அவங்களை நான் என்ன செய்யுறேன் என்பது தெரியும்’ என்று பேசிவிட்டுப் போயிருக்கிறார். அதேபோல திருமணமாகி என் தங்கை அவளின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக என் அம்மா வீட்டில் இருக்கிறாள். என் தங்கைக்கு நான் உதவி செய்கிறேன் என்பதால், தங்கையின் கணவர் ஏதாவது செய்கிறாரா என்ற சந்தேகமும் இருக்கிறது. காவல் துறைதான் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் நிம்மதியை இழந்து தவிக்கிறோம் என்பதுதான் நிஜம்!' என்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

வீ.கே.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு