Published:Updated:

எங்களை யாரும் பிரிக்க முடியாது!

தடைகளைத் தாண்டிய காதல்

'ஒருவனுக்கு காதல் நிராகரிக்கப்பட்டால் அந்த இடத்தைப் பணம் பிடித்துக் கொள்கிறது!’ என்று புகழ்பெற்ற எழுத்தாளர் டி.ஹெச்.லாரன்ஸ் சொல்லியிருக்கிறார். கோவையிலும் அது நிஜமாகியிருக்கிறது. ஆனால், எல்லா எதிர்ப்புகளையும் முறியடித்து கரம் பிடித்திருக்கிறது ஒரு காதல் ஜோடி.

சினேகா, ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர். எம்.பி.ஏ பட்டதாரி. இவரது தந்தை கோவையில் பிரபலமான துணிக்கடை ஒன்றின் உரிமையாளர். முகமது முக்தார், கோவை பொன்விழா நகரைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு நடனப் பள்ளியில் டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார். இவர்கள் இருவரையும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சந்தித்தோம்.

எங்களை யாரும் பிரிக்க முடியாது!

'சினேகா எம்.பி.ஏ. படிக்குறப்போ, அவரை ஒரு காபி ஷாப்புல சந்திச்சேன். பார்த்ததும் காதல்னு சொல்லுவாங்க இல்லையா... சினேகாவைப் பார்த்ததும், 'வாழ்ந்தா இவளோடுதான் வாழணும்னு தோணுச்சு!’ காதலை சினேகாகிட்ட சொல்ல கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு. ஆனாலும் நான் சொல்லாமல் அவங்களே புரிஞ்சுகிட்டாங்க. மூணு வருஷமா காதலிச்சோம். இந்த நேரத்துல சினேகாவுக்கு அவங்க வீட்டுல தீவிரமாக மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்க. அதனால நாங்க கல்யாணம் பண்ணிக்க முடிவு செஞ்சோம். டிசம்பர் மூணாம் தேதி பெரியார் படிப்பகத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். பாதுகாப்பு கேட்டு போலீஸ் ஸ்டேஷன்ல மனு கொடுத்தோம். ஆனா, போலீஸ் எங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கலை. போலீஸ் ஸ்டேஷன்லயே என்கிட்ட எழுதி வாங்கிட்டு கிளம்புனு மிரட்டுனாங்க. போலீஸ் ஸ்டேஷன் பாதுகாப்பில்லைனு அட்வகேட் ஆபீஸுக்கு போனோம். அங்கேயும் எங்களை பிரெய்ன் வாஷ் பண்ணுனாங்க. அந்த சமயத்துல அல் உம்மா தலைவர் பாட்ஷாவின் மகன் சித்திக் அலியும் சிலரும் வந்தாங்க. எங்களுக்கு ஆதரவா பேசுறது மாதிரி அங்கிருந்து எங்களைக் கூட்டிட்டு போனாங்க. எங்களை சேர்த்து வைக்கறாங்கனு நெனைச்சோம். ஆனா, ஒரு வீட்டுல எங்களை அடைச்சு வெச்சாங்க. 'ஒழுங்கா ரெண்டு பேரும் பிரிஞ்சிடுங்க. இல்லைனா அவ்வளவுதான்’னு மிரட்டினாங்க. நாலாம் தேதி ராத்திரி அங்கிருந்து தப்பிச்சோம். ஆனா, சித்திக் அலி எங்களை பிடிச்சுட்டார். ரோட்டுல வெச்சு என்னை அடிச்சு  திரும்பவும் வீட்டுக்கு இழுத்துட்டு போனார்.

'ஒழுங்கா அந்தப் பொண்ணை விட்டுட்டு போயிடு. இல்லைன்னா உங்க அப்பா அம்மாவை கொன்னுடுவோம்’னு சித்திக் அலி மிரட்டினார். வேற வழியில்லாம ரெண்டு பேரும் போலீஸ் ஸ்டேஷன்ல எழுதி கொடுத்துட்டு பிரிஞ்சிட்டோம். ரெண்டு நாளுக்கு அப்புறம் ஃபேஸ்புக்ல ஒரு மெசேஜ் பார்த்தேன். 'அடைக்கலம் தேடிவந்த பெண்ணை மூணு கோடி ரூபாய்க்கு விற்ற அல் உம்மா பாட்ஷா மகன்’ என்று சித்திக் பத்தி யாரோ எழுதி இருந்தாங்க. அப்போதான் சினேகாவோட அப்பாகிட்ட பணம் வாங்கி எங்களை பிரிச்சு வெச்சது தெரியவந்துச்சு. ரெண்டு பேரும் பிரிஞ்சு வாழ சிரமப்பட்டோம். இந்த நேரத்துலதான் சினேகா அவங்க வீட்டுல இருந்து வெளியேறி, எங்க வீட்டுக்கு வந்தாங்க. இப்போ திரும்பவும் காவல் துறையிலும், நீதித் துறையிலும் பாதுகாப்பு கேட்டு வந்திருக்கோம்' என்று மொத்த கதையையும் சொல்லி முடித்தார் முக்தார்.

தனது அலுவலகத்துக்குள் நுழைந்து, மிரட்டி காதல் ஜோடியை கடத்திச் சென்றதாக வழக்கறிஞர் விஜயராகவன் கொடுத்த புகாரின் பேரில், சித்திக் அலி உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

''பாட்ஷாவின் மகன் என்கிற ஒரே காரணத்துக்காக சித்திக் அலி மீது பொய் கேஸ் போடுறாங்க'' என்றார் சித்திக் அலியின் தாயார் ரஷீதா பேகம்.

காதல் ஜோடிக்கு திருமணத்தை நடத்திவைத்த தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். 'முக்தாரும் சினேகாவும் டிசம்பர் 3-ம் தேதி எங்களை நாடினார்கள். இருவருக்கும் 24 வயதாகிறது. இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்துள்ளனர். ’மதம், பணம் ஆகிய பிரச்னைகளால் பெற்றோர் எங்களை ஏற்கமாட்டார்கள். எங்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும்’ என்று அவர்கள் கடிதம் மூலம் கேட்டார்கள். அவர்களிடம் அனைத்து ஆவணங்களையும் பெற்று எங்கள் அலுவலகத்தில் திருமணம் செய்து வைத்தோம்' என்றார்.

சினேகா முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டார். இப்போது, அவரது பெயர், ஷயானா ஃபாத்திமா. 'நான் விருப்பப்பட்டுத்தான் முக்தாரை கல்யாணம் செஞ்சுகிட்டேன். எங்க சமூகத்துல காதல் திருமணத்தை ஏத்துக்க மாட்டாங்க. இதை பெரிய கௌரவப் பிரச்னையா பார்ப்பாங்க. அதனாலதான் இத்தனை பிரச்னைகளும். சாதி, மதம், பணம் எல்லாத்தையும்விட அன்புதான் பெரியது. அதுல நாங்க உறுதியா இருக்கோம். எங்களை யாரும் பிரிக்க முடியாது' என்று உறுதியாகச் சொல்கிறார்.

பணத்தாலும் பலத்தாலும் பிரிக்கக்கூடியதா காதல்?

ச.ஜெ.ரவி

படங்கள்: தி.விஜய்