Published:Updated:

இப்போது கிரானைட் அதிபர்கள் அடுத்து காவல்துறை அதிகாரிகள்!

இப்போது கிரானைட் அதிபர்கள் அடுத்து காவல்துறை அதிகாரிகள்!

சகாயம் கொடுத்த ஷாக்

விறுவிறுவென அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது சகாயத்தின் கிரானைட் விசாரணை கமிஷன்!

இப்போது கிரானைட் அதிபர்கள் அடுத்து காவல்துறை அதிகாரிகள்!

கிரானைட் அதிபர்களிடம் நேரில் விசாரிக்க முடிவெடுத்த சகாயம், அவர்களை நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி ஷாக் கொடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் பி.ஆர்.பி.முருகேசன், பி.ஆர்.ராஜ​சேகரன், ஒலிம்பஸ் கிரானைட்ஸ் துரை தயாநிதி ( அழகிரியின் மகன்), கோட்டை வீரன், சோலை ராஜா, பெரிய​கருப்பன், செந்தில்குமார், தீபா கிரானைட்ஸ் உரிமை​யாளர், ரபிக்ராஜா, கோர​மெண்டல் ஏஜென்சி, காசனியா கிரானைட்ஸ், லட்சுமி கிரானைட்ஸ், விஜயா கிரானைட்ஸ் என்று மொத்தம் 17 நபர்களுக்கு சம்மன் போனது. ஒருநாளைக்கு ஐந்து பேர் வீதமாக அவர்களிடம் விசாரணை நடத்துவதுதான் சகாயத்​தின் திட்டம்.

முதல்நாளான திங்கள்கிழமை மேலூரைச் சேர்ந்த கோட்டை​​வீரன் என்பவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். கோட்டைவீரனுக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் ராஜசேகரன் சகாயத்தின் முன்பு ஆஜரானார். ''கோட்டைவீரன் வெளியூர் சென்றிருக்கிறார். அவருக்கு இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும்' என்று வழக்கறிஞர் கேட்டார். ''அவர் விசாரணைக்கு வரவில்லை என்றால் அவருக்கு நீங்கள் வக்காலத்து கொடுங்கள்!' என்று சகாயம் கேட்டார். ''நான் தகவல் சொல்வதற்காகத்தான் வந்தேன். மதியம் கொண்டு வருகிறேன்' என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்துவிட்டார் வழக்​கறிஞர் ராஜசேகரன்.

கிரானைட் மோசடி முறைகேடு வழக்கில் கடந்த வாரம் மணல் படிக்காசு கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்தான் சோலை​ராஜா. தற்போது சோலை​ராஜா சிறையில் இருப்பதால், அவருக்காக அவரது வழக்கறிஞர் மாயழகு ஆஜராகி தகவல் சொன்னார். அந்தக் காரணத்தை எழுதிக் கொடுக்கச் சொன்னார் சகாயம். வழக்கறிஞரும் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இரண்டாவது நாள் பி.ஆர்.பி மற்றும் அவரது மகன் செந்தில்குமார், அவரின் மைத்துனர் முருகேசன் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் அருண்பிரசாத் ஆஜரானார். ''நீங்கள் எப்படி எங்​களை அழைக்கலாம்? உங்களுக்கு எங்களை அழைத்து விசாரிக்க எந்த அதிகாரமும் இல்லை. சட்டத்திலும் இடம் இல்லை!' என்று வழக்கறிஞர் சொன்​னார். அதற்கு சகாயம், 'இது உயர் நீதிமன்றம் அமைத்த கமிஷன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். நான் உங்களை விசாரிக்காமலேயே எனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். ஆனால், அப்படிச் செய்தால் ஒருதலைபட்சமாக விசாரித்து அறிக்கை அனுப்பியதாக சர்ச்சைகள் வரும். அதனால்தான் முறைப்படி சம்மன் அனுப்பி உங்களின் பதிலை கேட்கிறேன். உங்கள் தரப்பில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார். 'வழக்கு கோர்ட்டில் நடப்பதால் இப்போது எதுவும் பேச முடியாது' என்று சொன்னார் அருண்பிரசாத். இப்படியாக சிந்து கிரானைட் சார்பில் அர்ஜுனராஜா, லட்சுமி கிரானைட் சார்பில் பாலசுப்பிரமணியன், தீபா கிரானைட் சார்பில் ஆனந்த் என்று எல்லா நிறுவனங்கள் சார்பிலும் வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜரானார்கள்.

இப்போது கிரானைட் அதிபர்கள் அடுத்து காவல்துறை அதிகாரிகள்!

சென்னையைச் சேர்ந்த கோரமண்டல் கிரானைட் நிறுவனத்தின் சார்பில் மேனேஜர் கோபால், நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் விக்னேஷ் மற்றும் ஏஜென்ட் பாசித் ஆகியோர் கையில் சில ஆதாரங்களுடன் வந்தனர். சட்ட ஆலோசகரான விக்னேஷ், ''நாங்கள் ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கிரானைட் தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு மதுரையில்தான் அதிக பாதிப்பு. இங்கே நடந்த அதிகாரப் போட்டியால் நாங்கள் தொழில் நடத்த முடியாமல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே சென்றுவிட்டோம். நாங்கள் குவாரி நடத்திய இடங்களில் வேறு ஆட்கள் தற்போது நடத்தி வருகிறார்கள். அதிகாரிகள் அபராதம் விதிக்கும் அளவுக்கு நாங்கள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை' என்று விளக்கினார். அதற்கு சகாயம், ''உங்களது விளக்கத்தை எங்களுக்கு எழுதிக் கொடுங்கள்' என்று கேட்கவும், அவர்களும் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

அழகிரி மகன் துரை தயாநிதி தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், ''எங்களை விசாரிக்க சகாயம் கமிஷனுக்கு உரிமை இல்லை. அவர் பப்ளிசிட்டிக்காக இதைச் செய்கிறார். எங்களிடம் விசாரணை நடத்த அவருக்குத் தடைவிதிக்க வேண்டும். ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வழக்குகள் எங்கள் மீது தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அப்படி இருக்க, இது தேவை இல்லாத விசாரணை' என்று மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இப்போது கிரானைட் அதிபர்கள் அடுத்து காவல்துறை அதிகாரிகள்!

கிரானைட் புள்ளிகளிடம் கேட்பதற்காக சகாயம் தரப்பில் என்ன கேள்விகள் இருந்தன என்று விசாரித்தோம். ''19 வகையான கேள்விகள் தயாராக இருந்தன. அதில் முக்கியமான கேள்விகள் என்றால், '2012-ம் ஆண்டுக்கு முன்போ, பின்போ அனுமதியின்றி எடுக்கப்பட்ட கற்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா? அப்படி எடுத்து இருந்தால் அனுமதி வழங்கிய விவரம் தெரிவிக்கவும். அரசுக்கு செலுத்திய அபராதம் எவ்வளவு, அபராதம் செலுத்தப்பட்டதா? இல்லை என்றால், மேல் முறையீடு செய்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறதா?’ என்று அதில் கேள்விகள் இருக்கின்றன. இதற்கு கிரானைட் அதிபர்கள் பதில் சொல்லியாக வேண்டும். நேரில் வந்து பதில் சொன்னால், தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து அவர்கள் வக்கீல் மூலமாக பேசி வருகிறார்கள்' என்று சொல்கிறார்கள்.

சகாயம் விசாரிக்க ஆரம்பித்ததில் இருந்து இதுவரை நேரிலும், தபாலிலுமாக வந்த மனுக்கள் 500-ஐ நெருங்கிவிட்டன. அந்தப் புகார்களில் மதுரையில் இருந்த ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் என்று சிலரது பெயர்களும் இருக்கிறதாம். அவர்களுக்கும் கூடிய சீக்கிரம் சகாயம் சம்மன் அனுப்பினாலும் ஆச்சர்யமில்லை!

சண்.சரவணக்குமார், படங்கள்: பா.காளிமுத்து, ஈ.ஜெ.நந்தகுமார்                                          

அடுத்த கட்டுரைக்கு