Published:Updated:

சிட்டிசன் என்றால் ‘குடி’மகன்!

சிட்டிசன் என்றால் ‘குடி’மகன்!

கொந்தளித்த தே.மு.தி.க... சஸ்பெண்ட் ரகசியம்!

சட்டசபை கூடும்போ​தெல்லாம் சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இல்லை! தமிழக சட்டமன்ற கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அ.தி.மு.க உறுப்பினர் கடம்பூர் ராஜு பேசியபோது, 'குடிமகன்’ என்று குறிப்பிட்ட வார்த்தை தே.மு.தி.கவினரை கொந்தளிக்க வைத்தது. இதையடுத்துப் பேசிய எதிர்க் கட்சி துணைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ் (தே.மு.தி.க), 'முன்னாள் முதல்வர் குறித்து சொன்ன ஒரு வார்த்தை’ அ.தி.மு.க உறுப்பினர்களை அலற வைத்தது. அதன்பின், அ.தி.மு.க - தே.மு.தி.க உறுப்பினர்கள் இடையே நடந்த காரசார விவாதம் களேபரமாகிப் போனது.

தே.மு.தி.க உறுப்பினர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். தே.மு.தி.க உறுப்பினர்களான மோகன்ராஜ், சந்திரகுமார், வெங்கடேசன், பார்த்திபன், தினகரன், சேகர் ஆகியோர் 'சபாநாயகரைத் தாக்க முயன்றது, சபைக் காவலர்களைத் தாக்கியது, சட்டமன்றத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது’ குறித்து விளக்கம் அளிக்க சட்டமன்ற உரிமைக்குழு உத்தரவிட்டுள்ளதாம்.

சிட்டிசன் என்றால் ‘குடி’மகன்!

அன்றைய தினம் சட்டமன்றத்தில் நடந்தது என்ன? மோகன்ராஜ் விவரிக்க ஆரம்பித்தார். ''கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்​தின் விவாதத்தில் அ.தி.மு.க உறுப்பினர்​கள், மக்களுக்குரிய கருத்துகளைச் சொல்லாமல் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை 'மக்களின் முதல்வர்’ என்று புகழ்பாடும் மன்றமாக சட்டமன்றத்தை மாற்றிவிட்டனர். இவர்கள், அனைத்து எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் குறை சொல்லும் வகையிலேயே பேசுகின்றனர். அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரினால் அதை சபாநாயகர் ஏற்க மறுக்கிறார்.  

நான் பேச ஆரம்பித்தபோது, முன்னாள் முதல்வர் பற்றி ஒரு வார்த்தை சொன்னேன். உடனே அனைத்து அ.தி.மு.க உறுப்பினர்களும் என்னை அடிக்கப் பாய்ந்தனர். முன்னாள் முதல்வரை நான் விமர்சிக்கவில்லை. சபா​நாயகரும், சட்டசபை செயலாளர் ஜமாலுதீனும் கையெழுத்திட்டு, 'ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் ரங்கம் தொகுதி காலியாக உள்ளது’ என்று அறிவிக்கை மூலம் அவர்கள்தான் தெரிவித்தனர். அதைத்தான் நான் சொன்னேன். அதை நான் பேசக் கூடாது என்று சபாநாயகர் என்னை வெளியேறச் சொன்னார். அதை எங்களது உறுப்​பினர்கள் கேட்டபோது சபைக் காவலர்கள் சட்டையைப் பிடித்துக் கீழே தள்ளினர். இதுபோன்ற போக்கு வேறு எங்கும் நடைபெற்றது இல்லை.

சிட்டிசன் என்றால் ‘குடி’மகன்!

எங்களைப் பொறுத்தவரை மக்கள் பிரச்னைகளைப் பேசி அதற்குத் தீர்வு கண்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்​கோளோடும் லட்சியத்தோடும்தான் சட்டசபைக்கு வருகிறோம். தரக்குறைவான வார்த்தை​களைப் பயன்படுத்தி அ.தி.மு.கவினர் வம்புக்கு இழுக்கும்போது அதற்குப் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. தகாத வார்த்தைகளைப் பேசிய அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு எந்தத் தண்டனையும் இல்லை. எங்களை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய முடியுமே தவிர, மக்கள் மனதில் இருந்து சஸ்பெண்ட் செய்ய முடியாது'' என்று நீண்ட விளக்கம் அளித்தார்.

இதுபற்றி தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ ராதாபுரம் மைக்கேல் ராயப்பனிடம் கேட்டோம். ''தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தேடுக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏக்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்பதையே அவர்களது நடவடிக்கைகள் காட்டுகிறது. 'மக்கள் பிரச்னைகளைச் சொல்லி அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்; அரசிடம் பதில் பெற வேண்டும்’ என்ற நோக்கம் சிறிதளவும் இல்லாமல் வெற்று விளம்பரத்துக்காக குஸ்தி அடிக்கிறார்கள். அரசின் பதிலில் உடன்பாடு இல்லை என்று எதிர்ப்பு தெரிவிக்க, வெளிநடப்பு செய்துவிட்டு மீண்டும் உள்ளே வந்து மன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டு மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசலாம். ஆனால், இவர்களது நோக்கமே சட்டமன்றத்தில் தகராறு செய்துவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதுதான். அரசு மீது, அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும்போது, அவர்கள் அதற்குப் பதில் சொல்வார்கள். அதை லாகவமாக எதிர்கொண்டு பதில் அளிக்கும் ஆற்றல் இல்லாததால்தான் தே.மு.தி.கவினர் கலாட்டா செய்கிறார்கள். ஒரு தடவை, இரண்டு தடவை என்றால் சபாநாயகர் மன்னிப்​பார். ஆனால், தே.மு.தி.கவினர் வேலையே ரகளை செய்வதுதான் என்கிறபோது வெளியேற்றம், சஸ்பெண்ட் என்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது ஆகிறது.

சிட்டிசன் என்றால் ‘குடி’மகன்!

அ.தி.மு.க எம்.எல்.ஏ கடம்பூர் ராஜு பேசும்போது,  'சிட்டிசன் என்றால் குடிமகன்’ என்று பொதுவாகத்தான் சொன்னார். அவர் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால், தே.மு.தி.க உறுப்பினர்களுக்கு கோபம் வந்தது ஏன் என்று தெரியவில்லை. அதற்குப் போட்டியாக, மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மாவைக் குறிப்பிடும் வகையில் சில வார்த்தைகளை தே.மு.தி.க உறுப்பினர் சொன்னார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு சம்பந்தமில்லாத அந்த வார்த்தையை அவைக்​குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதற்காக, சபா​நாயகரை அடிக்கப் பாய்வது, தகாத வார்த்தை​களைச் சொல்வது, சபைக் காவலர்களைத் தாக்குவது என்பதெல்லாம் அத்துமீறிய செயல்கள். இது முதல் தடவை அல்ல. ஏற்கெனவே, அவர்கள் கட்சித் தலைவர் விஜயகாந்த், அமைச்சர்களைப் பார்த்து நாக்கை துருத்தி பேசி, வம்புக்கு இழுத்தார். இரண்டாவது தடவையாக எம்.எல்.ஏவாக இருக்கும் அவருக்கு சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னையை எப்படி அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தெரியவில்லை. அரசியல் அனுபவம் இல்லாததுதான் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம்.

இவர்களோடு இருந்தால் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்றுதான் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களைச் சந்தித்தோம். அந்த நேரத்தில் சட்டமன்றத்தில் பேசிய தமிழழகன் எம்.எல்.ஏ, 'ஓட்டு போட்ட தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் எங்களோடு வாருங்கள்’ என்றார். அதற்கு அவரை சட்டமன்றத்திலேயே அடிக்கப் பாய்ந்தனர் தே.மு.தி.க. உறுப்பினர்கள்.

தமிழழ​கனைப் பாதுகாக்கும் வகை​யில் நான் அவர்களைத் தடுத்தேன். அப்போது, என்னைத் தாக்கியதோடு மட்டு​மல்லாமல் சட்டையையும் கிழித்தனர். அப்போதும் தே.மு.தி.கவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இப்போது, சபாநாயகரை அடிக்கப் பாய்ந்து அமளிதுமளி ஏற்படுத்தியதால் குறைந்தபட்ச தண்டனைதான் கொடுக்கப்பட்டுள்ளது.        

தி.மு.க., பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் முறையாகப் பேசி அரசிடம் பதிலை வாங்குகிறார்கள். ஆனால், தே.மு.தி.க மட்டும்தான் ஜனநாயக மரபுகளுக்கு எதிராகச் செயல்பட்டு பிரச்னையை திசை திருப்புகிறார்கள். தெருச் சண்டை என்று சொல்வார்களே அதைப்போல மாண்புமிக்க சட்டமன்றத்தில் ரகளை செய்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி வழிநடத்த வேண்டிய அந்தக் கட்சியின் கொறடா சந்திரகுமார், அதிரடியாக அடிக்கப் பாய்​கிறார். அவரை அவர்களது உறுப்பினர்களே அடக்கியும் அடங்காமல் துடிக்கிறார். தொகுதிப் பக்கமே போகாமல்... தொகுதிக்கு எதையும் செய்யாமல் அங்கே போனால் பொதுமக்கள் விரட்டி அடிப்பார்களே என்றுதான் இத்தனையையும் நடத்துகிறார்கள்’ என்று விரிவாகப் பேசினார்.

தாங்கள் இருக்கும் இடம் சட்டசபை என்பதை அனைவரும் உணர்ந்து நடக்கவேண்டும்!

- எஸ்.முத்துகிருஷ்ணன்

அடுத்த கட்டுரைக்கு