Published:Updated:

ஹலோ... நான் நர்மதா பேசுறேன்!

ஹலோ... நான் நர்மதா பேசுறேன்!

காசு கறந்த கால் டாக்ஸி

ர்மதா, பேச்சு ஒன்றையே மூலதனமாக வைத்து இவர் திரட்டியது பல கோடிகள். இவர் நடத்திய கால் டாக்ஸி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றும் பரத்குமார், தனியார் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்றவர். நர்மதா, பரத்குமார் இருவருமே தற்போது இருப்பது சிறையில்.

 என்ன காரணம்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹலோ... நான் நர்மதா பேசுறேன்!

சென்னை மத்திய குற்றப்பிரிவில் நர்மதா மீது புகார் கொடுக்க  வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அயனாவரத்தில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் மற்றும் விற்பனை நிறுவனம் நடத்தி வரும் யுவராஜ் நம்மிடம் பேசினார். 'என்னுடைய செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில், 'வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. எங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் இரண்டரை மடங்கு லாபம் கிடைக்கும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நம்பரில் பேசினேன். அதில் பேசியவர், 'ஹலோ... நான் நர்மதா பேசுறேன். நம்ம ஆபீஸ் வாங்க.. நேர்ல பேசுவோம்’ என்றார். கோயம்பேட்டில் உள்ள 'இந்தியா டிராக் கால் டாக்ஸி’ நிறுவனத்துக்குச் சென்று அவரிடம் பேசினேன். 'நான் சொல்வதை நம்பி எங்கள் கால் டாக்ஸி நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம். எங்களிடம் முதலீடு செய்தவர்களின் பட்டியல் இது. இவர்களிடம் பேசி விசாரித்துவிட்டு முதலீடு செய்யுங்கள்’ என்று நர்மதா சொன்னார். அவர் கொடுத்த செல்போனில் பேசி விசாரித்தேன். அவர்களும் முதலீடு செய்ததற்கு பணம் வருவதாகச் சொன்னார்கள். கடந்த ஏப்ரல் 2014-ல் மூன்று லட்சம் ரூபாயை நர்மதாவிடம் கொடுத்தேன். அப்போது இந்தப் பணத்துக்கு, 'இரண்டரை மடங்கிலிருந்து, மூன்று மடங்கு வரை லாபம் கிடைக்கும்’ என்று அவர் சொன்னார். அடுத்த மாதம் எனது வங்கிக் கணக்கில் அவர்கள் சொன்னதைப்போல பணம் வந்தது. இதனால் ஜூன் மாதத்தில் மீண்டும் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை நண்பர்களிடம் கலெக்‌ஷன் செய்து முதலீடு செய்தேன். அதற்கும் பணம் தந்தார்கள். நம்முடைய பணத்துக்கு நல்ல லாபம் கிடைக்கிறது என்று நம்பி ஜூலையில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். பணம் கொடுத்ததற்கு அக்ரிமென்ட் போட்டார்கள். முதலீடு செய்த பணத்துக்கு 4 மாதங்கள் கரெக்்டாக கால் டாக்ஸி நிறுவனத்திலிருந்து பணம் கொடுத்தார்கள். 5வது மாதம் பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து போனில் கேட்டபோது பிஸினஸ் டல்லாக இருக்கிறது. சேர்த்துக் கொடுத்து விடுவதாக நர்மதா சொன்னார். இதனால் அங்கு முதலீடு செய்தவர்களிடம் விசாரித்தேன். அவர்களுக்கும் பணம் கொடுக்கவில்லை என்று தெரிந்தது. பணத்தை முதலீடு செய்தவர்கள் நர்மதாவிடம் ஒட்டுமொத்தமாகக் கேட்கத் தொடங்கினார்கள். சிலரை நர்மதா தரப்பினர் மிரட்டத் தொடங்கினார்கள். 'பணத்தைத் தர முடியாது. உன்னால் முடிந்ததை செய்துகொள்’ என்று சொன்னார்கள். இதனால் வேறுவழியின்றி வெங்கடகிருஷ்ணன் என்பவர் முதலில் போலீஸில் புகார் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து நான் உள்பட பலர் புகார் கொடுத்திருக்கிறோம். அதன்பேரில் போலீஸார் நர்மதா மற்றும் அங்கு மேலாளராகப் பணியாற்றிய டான்ஸர் பரத்குமாரையும் கைதுசெய்து இருக்கிறார்கள். என்னைப் போன்று ஏமாந்தவர்களின் பணத்தை நர்மதாவிடமிருந்து மீட்டுத் தர வேண்டும். இதுவரை நிறைய பேர் புகார் கொடுத்திருக்கிறார்கள்' என்றார் கண்ணீருடன்.

ஹலோ... நான் நர்மதா பேசுறேன்!

நர்மதா மீது புகார் கொடுத்த சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணனிடம் பேசினோம். 'எஸ்.எம்.எஸ்ஸில் வந்த தகவலின்பேரில் நர்மதா, பரத்குமாரை சந்தித்தேன். 2010-ல் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தேன். அதற்கு அவர்கள் சொன்னதைப்போல கமிஷன் தொகை கொடுத்தனர். பணம் டெபாசிட் செய்ததற்கு அக்ரிமென்ட்டும் போட்டுக் கொடுத்து இருந்தனர். இதன்பிறகு நகைகளை அடகு வைத்து, கடன் வாங்கி எனது பெயரிலும், என்னுடைய மனைவி அமுதா பெயரிலும் தலா 10 லட்சம் ரூபாய் என 20 லட்சம் ரூபாய் நர்மதாவிடம் டெபாசிட் செய்தேன். 16 மாதங்கள் சரியாக கமிஷன் தொகை கொடுத்தார்கள். இதுவரை 8 லட்சம் ரூபாய் வரை கிடைத்துள்ளது. கடந்த 2014 ஆகஸ்ட் மாதத்திலிருந்து கமிஷன் தொகை கொடுக்கவில்லை. இதுகுறித்து நர்மதாவிடம் கேட்டபோது சரிவர பதில் சொல்லவில்லை. அப்போதுதான் நாங்கள் ஏமாந்தது தெரியவந்தது. இதன்பிறகு நர்மதாவும், பரத்குமாரும் தலைமறைவாகிவிட்டனர். இப்போது அடகு வைத்த நகைகளுக்கு வட்டி செலுத்த முடியாமலும், கடனை அடைக்க முடியாமலும் தவித்து வருகிறேன்'' என்றார் விரக்தியுடன்.  

ஹலோ... நான் நர்மதா பேசுறேன்!

மத்திய குற்றப்பிரிவு போலீஸில் விசாரித்தோம். ''கால் டாக்ஸி நிறுவனம் நடத்திய நர்மதா மீது தினந்தோறும் புகார் வந்துகொண்டே இருக்கிறது. இதுவரை 160-ஐத் தாண்டிவிட்டது. இன்னும் எத்தனை புகார்கள் வரும் என்று தெரியவில்லை. நர்மதா, பரத்குமாரை கைது செய்து இருக்கிறோம். விசாரணையில், எல்லோருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாக நர்மதா சொல்லியிருக்கிறார். அவருடைய வங்கிக் கணக்கு மற்றும் சொத்து விவரங்கள் குறித்து விசாரித்துள்ளோம். 170 கார்கள் இருந்துள்ளன. அனைத்து கார்களுக்கும் தவணைத் தொகை செலுத்தாததால் வங்கிகள் பறிமுதல் செய்து இருக்கின்றன. பணப் பரிமாற்றம் அனைத்தும் வங்கிகள் மூலமே நடந்து இருக்கிறது. நர்மதாவின் கால் டாக்ஸி நிறுவனத்தில் டெபாசிட் செய்தவர்களில் பலருக்கு முதலீடு செய்த பணத்தைவிட கூடுதலாக லாபம் கிடைத்துள்ளது. ஆனால், அவர்களும் இப்போது புகார் கொடுத்திருக்கிறார்கள். இதுதான் புகார் அளித்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதற்குக் காரணம். சிறுவயதிலேயே பெரிய தொழிலதிபராக மாற வேண்டும் என்ற ஆசையில் நர்மதா அவசரப்பட்டுவிட்டார். இப்போது மாட்டிக்கொண்டு தவிக்கிறார்'' என்று சொல்கிறார்கள்.

ஹலோ... நான் நர்மதா பேசுறேன்!

மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து நர்மதாவிடம் விசாரணை நடந்தது. அப்போது, 'யாரையும் ஏமாற்ற வேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை. எல்லோரும் நல்லா இருக்கணும்... எல்லோருக்கும் நிறைய லாபம் கிடைக்கணும் என்ற ஒரே நோக்கத்துகாகத்தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தேன். நான் இந்தத் தொழிலை ஆரம்பித்தபோது, போட்டிகள் அதிகம் இல்லை. ஆனால், தற்போது நிறைய கால் டாக்ஸி நிறுவனங்கள் வந்துவிட்டன. குறைந்த வாடகைக்கு கார்களைக் கொடுக்கிறார்கள். அதில் இருந்தே எனக்குத் தொழிலில் பிரச்னை ஆரம்பமானது. நிறைய நஷ்டம்.... இதை நான் யார்கிட்ட சொல்ல முடியும்? பணம் கொடுத்தவர்கள் என்னைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். நிச்சயம் நான் வெளியில் வருவேன். வந்ததும் எல்லோருடைய பணத்தையும் செட்டில் செய்வேன். யாருடைய பணமும் எனக்குத் தேவை இல்லை. நான்கு மாதம் எனக்கு அவகாசம் கொடுங்கள். இந்தப் பிரச்னைகள் எல்லாவற்றையும் சரி செய்கிறேன்’ என்று அழுதபடியே சொன்னாராம்.

ஆசைதானே இந்த துன்பத்துக்கும் காரணம்!

எஸ்.மகேஷ், படங்கள்: தி.குமரகுருபரன்