Published:Updated:

நாட்டியாஞ்சலியைத் தொடர்ந்து பாலாலயம்!

நாட்டியாஞ்சலியைத் தொடர்ந்து பாலாலயம்!

தொடர் போராட்டத்தில் சிதம்பரம் தீட்சிதர்கள்

சிதம்பரம் தீட்சிதர்களை வைத்து தினமும் பிரச்னை எழுந்து வருகிறது!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் திருப்பணி செய்யப்பட்டு, வரும் சித்திரை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனால், கருவறையில் உள்ள நடராஜர் சுவாமியை இரண்டு மாத காலம் தேவசபையில் வைத்து பூஜை செய்கிறார்கள் தீட்சிதர்கள். இந்தச் செயல் கோயில் விதிக்கும் சாஸ்திரத்துக்்கும் எதிரானது என்று, நாட்டியாஞ்சலிக்கு எதிர்ப்பு தெரிவித்தது போலவே, இந்தப் பாலாலயத்துக்கும் கடும் எதிர்ப்புடன் களத்தில் நிற்கிறார்கள் இன்னொரு கோஷ்டி தீட்சிதர்கள். கட்டுமானப் பணிகளின்போது சுவாமி சிலைகளை வேறு இடத்தில் வைத்து பூஜிப்பதன் பெயர்தான் பாலாலயம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாட்டியாஞ்சலியைத் தொடர்ந்து பாலாலயம்!

பாலாலயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கைலாச சங்கர தீட்சிதர், ''பதஞ்சலி முனிவரால் வகுக்கப்பட்ட ஆறு கால பூஜையானது, கருவறையில் உள்ள சுவாமிக்கு தினமும் முறைப்படி நடைபெற்று வருகிறது. தற்போது பாலாலயம் என்ற பெயரில் கோயில் வழக்கத்தில் எப்போதும் இல்லாத வகையில் சிற்சபையில் உள்ள சுவாமியை இரண்டு மாதங்கள் தேவசபையில் வைத்து பூஜை செய்கிறார்கள். இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. கடந்த காலங்களில்கூட பாலாலயம் ஒரு வாரத்துக்குள்தான் செய்யப்பட்டது. இப்படி பாலாலயம் இரண்டு மாதங்கள் என்பதும் அதனால் பூஜை முறையை மாற்றியமைப்பதும் கோயில் மரபுக்கு முற்றிலும் எதிரானது. அஷ்டமங்கல தேவபிரசங்கம் பார்க்காமல், கோயில் விதிமுறைகள், சம்பிரதாயங்கள் போன்றவை கருத்தில் கொள்ளாமல் செய்யப்படும் நடவடிக்கைகளால் தீமைகள் ஏற்படலாம்.

முதலில் வண்ணம் மட்டுமே பூசப்படும் என்றார்கள். தற்போது சிற்சபையில் உள்ள தூண்களை எடுத்து பல வேலைகள் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் தங்கக் கூரைக்கு ஆபத்து ஏற்படும். உலகத்தின் மையப் பகுதியாகக் கருதப்படும் இந்தக் கருவறையில் இரண்டு மாதங்கள் திருப்பணி செய்யும் அளவுக்கு எதுவும் பாழடைந்து கிடக்கவில்லை. திருப்பணிக்கு அவசியமும் இல்லை. அதுமட்டுமில்லாமல் பாலாலயத்தின்போது, சிதம்பர ரகசியம் உள்ள ஸ்தானத்தை யார் பூஜை செய்வது. அதனால் சிதம்பர ரகசியம் காக்கப்படுமா? இது தனி நபர் தீட்சிதர் ஒருவரின் முடிவால் செய்யப்படும் திருப்பணி. ஆகையால் உடனடியாகக் கோயில் திருப்பணி கமிட்டி ஒன்றை அமைத்து, அதன்படி ஒரு வார காலத்துக்குள் மட்டுமே பாலாலயம் செய்யவேண்டும். கருவறையில் உள்ள சுவாமியை மாதக் கணக்கில் தேவசபையில் வைப்பதால் அவற்றின் மகிமையே போய்விடும்'' என்று சொன்னார்.

நாட்டியாஞ்சலியைத் தொடர்ந்து பாலாலயம்!

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் உமாநாத தீட்சிதர், 'பாலாலயம் என்பது, கோயில் திருப்பணியின்போது சுவாமியின் மந்திர ரூபமான ஜீவனை கலசத்தில் கொண்டுவந்து திருப்பணி முடியும்வரை யாகசாலையில் வைத்து பூஜை செய்வது. அதற்கு குறிப்பிட்ட நாட்கள் என்பது முக்கியம் இல்லை. நல்ல நாளா என்பதுதான் முக்கியம். அதுவும், கோயிலில் நடைபெறும் திருப்பணி வேலைகளை பொருத்துதான் எவ்வளவு நாட்கள் பாலாலயம் என்பதை குறிப்பிடப்படும். இதனால் கோயில் விதிகளும் பூஜை முறைகளும் எப்போதும் மாறாது' என்று சொல்கிறார்.

'லட்சக்கணக்கானோர் கூடும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிக்குக் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடிநீர், சாலை, கழிப்பிடம் போன்றவற்றைப்பற்றி இதுவரை கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளவேயில்லை. உலகத்தின் பல பகுதிகளிலிருந்து வரும் வருமானங்களைப் பற்றித்தான் அவர்களின் கவலையே. இது நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியிலேயே வெட்டவெளிச்சமானது. தீட்சிதர்களுக்குள்ளே பல குழுக்கள் உள்ளன. அவர்கள் இப்போது தனித்தனியே வசூல்வேட்டை செய்வதால் வந்த பிரச்னைதான் இது. தீட்சிதர்களின் ஆளுகையில் இருந்தாலும் இதனை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும்்'' என்று கோரிக்கை வைக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு.

இதுகுறித்து கோயில் நிர்வாக செயலாளர் பாஸ்கர தீட்சிதரிடம் பேசினோம். ''நிதி வசூல் என்பதெல்லாம் பொய்யான தகவல். இப்போதுதான் கோயில் திருப்பணி ஆரம்​பிக்கப்பட்டுள்ளது. எந்தப் பிரச்னையானாலும் கமிட்டி மூலம் பேசி முடிவு எடுக்கப்​படும்'' என்று அவர் சொன்னார்.

இந்த நிலையில், ''தீட்சிதர்​களுக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம்'' என்று தீட்சிதர் ஒருவர் கோயிலுக்குள் தட்டி வைக்க, அடுத்த பிரச்னைக்கு ரெடியாகிவிட்டது சிதம்பரம்!

க.பூபாலன், படங்கள்: எஸ்.தேவராஜன்