Published:Updated:

ஒரு எஸ்.எம்.எஸ். ஒரு வாட்ச்... இரண்டு பேரன்கள்!

துடித்து அடங்கிய பாட்டி

தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள் வரம் வாங்கி வந்தவர்கள். அன்பும் அரவணைப்பும் நிறைந்த உருவம்தானே பாட்டி. பெற்றவர்களைவிட பாட்டி மீது அளவில்லா பாசம் வைத்திருக்கும் எத்தனையோ பேரக் குழந்தைகளை நாம் இன்னும் பார்க்கிறோம். திண்டுக்கல்லில் நடந்திருக்கும் சம்பவமோ வேதனையின் உச்சம்!

ஒரு எஸ்.எம்.எஸ். ஒரு வாட்ச்... இரண்டு பேரன்கள்!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தையல் ஆசிரியையான ராஜகுமாரி, கடந்த 5-ம் தேதி இரவு வீட்டுக்குள் இறந்துகிடந்தார்.  ஹார்ட் அட்டாக்கில் ராஜகுமாரி இறந்திருக்கலாம் என உறவுகள் நினைத்தன. இறுதிச்சடங்குக்கு ஊரும், உறவுகளும் கூடின. அந்த சமயத்தில்தான் ராஜகுமாரி பாட்டியின் செல்போன் அலறியது. அதை எடுத்துப் பேசினார் அவரது உறவினர் ஒருவர். போன் பேசி முடித்துவிட்டு வைத்தபோதுதான் அந்த செல்லுக்கு வந்த ஒரு மெசேஜைப் பார்க்கிறார். அதிகாலை 4 மணிக்கு ராஜகுமாரி பாட்டியின் வங்கிக் கணக்கில் இருந்து 19,600 ரூபாய் எடுக்கப்பட்டதாக வந்திருந்தது அந்த மெசேஜ். இதை மற்ற உறவினர்களுக்கும் சொல்ல... உடனடியாக பாட்டியின் உறவினர்கள் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போலீஸார் விசாரணையில் இறங்கினர். பணம் எடுக்கப்பட்ட ஏ.டி.எம் சென்டரில் இருந்த சி.சி.டி.வி கேமராவை சோதனை செய்தபோது, மங்கிகேப் அணிந்த ஒரு இளைஞன் பணம் எடுத்தது பதிவாகி இருந்தது. அந்த உருவத்தைப் பார்த்ததும் போலீஸாரின் சந்தேகப்பார்வை, அதே வீட்டின் மாடியில் வசித்த பிளஸ் டூ மாணவன் ஒருவன் மீது படிகிறது. ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த அந்த மாணவனை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். 10-ம் தேதி வரை விசாரித்தனர். இதனால் அந்த மாணவன் பொதுத்தேர்வு எழுத முடியாமல் போனது.

ஒரு எஸ்.எம்.எஸ். ஒரு வாட்ச்... இரண்டு பேரன்கள்!

இதற்கிடையில் கேமராவில் பதிவான உருவம் அணிந்திருந்த வாட்ச்சை போலீஸ் கவனிக்கிறது. விசாரணைக்காக அழைத்துவந்த மாணவன் கட்டியிருந்த வாட்ச் அது அல்ல...! பாட்டி கொலை நடந்த வீட்டுக்கு மறுபடியும் போலீஸ் போகிறது. துக்க வீட்டில் இருந்தவர்களின் கைகளை மட்டும் போலீஸ் கண்கள் தேடின. அதில் ஒரு கையில் கட்டியிருந்த வாட்ச்... கேமராவில் பதிவான உருவம் அணிந்திருந்த வாட்சுடன் ஒத்துப்போகிறது. அது கோடீஸ்வரன் என்பவருடைய கைகள். இறந்துபோன ராஜகுமாரியின் அக்காள் பேரன் கோடீஸ்வரன். அவரை போலீஸ் பிடித்ததும் அவர் இன்னொருவரைக் கைகாட்டுகிறார். அவர் இன்னொரு பேரன் ஞானமணிகண்டன்.

''பாட்டி தூங்கினதும் பீரோவுல இருந்து 3 ஆயிரம் பணத்தையும், அவரோட ஏ.டி.எம் கார்டையும் எடுத்துட்டோம். அவங்க தூங்கும்போது நாங்கதான் பக்கத்துல இருந்தோம். பணத்தைத் திருடியது நாங்கள்தான் என்பது தெரிந்தால் அசிங்கமாகிவிடும். அதனால் பாட்டியை கொலை செய்யலாம் என முடிவுக்கு வந்தோம். பாட்டிக்குப் பக்கத்துல ஒரு தலையணை இருந்தது. அதை எடுத்து பாட்டியின் முகத்தில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டோம். பாட்டியின் கால் மட்டும் துடித்தது. கொஞ்ச நேரத்துல அது அப்படியே அடங்கிடுச்சு!'' என்று பேரன்கள் இருவரும் சொல்லியிருக்கிறார்கள். இந்த விஷயம் தெரிந்ததும், கொலையாளிகளின் பெற்றோர் அவமானத்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

ஒரு எஸ்.எம்.எஸ். ஒரு வாட்ச்... இரண்டு பேரன்கள்!

'அந்தப் பசங்க ரெண்டு பேரும் ஆடம்பரமா செலவு செய்வாங்க. அவங்களைப் படிக்க வெச்சதே பாட்டி ராஜகுமாரிதான். அந்தப் பசங்க ரெண்டு பேரு மேலயும் பாட்டி உசிரையே வெச்சிருந்தாங்க. அவனுங்களுக்கு எப்படி பாட்டியைக் கொல்ல மனசு வந்துச்சோ தெரியலை. 'பணம் கொடு பாட்டி’னு கேட்டிருந்தா சொத்து எல்லாத்தையும்கூட கொடுத்திருப்பாங்க. அப்படிப்பட்ட பாட்டியை தன்னோட பசங்க கொலை பண்ணிட்டாங்களே என்ற வேதனையிலதான் அவங்க அப்பாவும் அம்மாவும் விஷத்தைக் குடிச்சுட்டாங்க!'' என்று வேதனையோடு சொல்கிறார்கள் ராஜகுமாரி பாட்டியின் உறவினர்கள்.

போலீஸாரின் அவசரத்தால் பிளஸ் டூ மாணவன் ஒருவன் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ''சந்தேகம் வந்ததால்தான் விசாரித்தோம். கொலை வழக்கில் சந்தேகத்துக்குள்ளான ஒருவரை விசாரிக்க வேண்டியது போலீஸாரின் கடமை. இல்லை என்றால் குற்றவாளி தப்பிவிட வாய்ப்பு உண்டு. அந்த மாணவனுக்கு சிறப்பு அனுமதி கேட்டு தேர்வு எழுத முடியுமா என்பது குறித்து கல்வி அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்!'' என்று சொல்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

உறவுகளின் உன்னதத்தை பள்ளிப் பருவத்திலேயே பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும்!

ஆர்.குமரேசன்

அடுத்த கட்டுரைக்கு