Published:Updated:

கிரானைட்... அடுத்து கார்னெட்!

பகீர் கிளப்பும் மணல் வழக்கு

பிரீமியம் ஸ்டோரி

'தமிழகத்தில் தாதுமணல் மற்றும் மோனோசைட் கனிமங்களை எடுப்பதில் தனியார் முதலாளிகள் பெரும் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசாங்கமும் அரசு நிர்வாகமும்  துணை போகின்றன. தாதுமணல் கொள்ளையர்களை  வெளிப்படையாகக் காப்பாற்றவும் செய்கின்றன. நீதிமன்றங்கள்  பிறப்பிக்கும் கடுமையான உத்தரவுகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் இவர்கள் கடைபிடிப்பதோ, மதிப்பதோ இல்லை'என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார், விஞ்ஞானியும் பேராசிரியருமான விக்டர் ராஜமாணிக்கம்.

கிரானைட்... அடுத்து கார்னெட்!

தமிழகத்தில்  தாதுமணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை தொடர்பாக நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று கோரும் அந்த மனுவில், 'கனிமவளத் துறை முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம், சுற்றுச்சூழல் துறை சட்டம், நீர்வளத் துறை சட்டம், நிலவளத் துறை சட்டம் மற்றும் இவற்றோடு தொடர்புடைய சட்டங்கள் அனைத்தும் தாதுமணல் அள்ளுவதைக் கட்டுப்படுத்தவும் முறைப்​படுத்தவும் செய்கின்றன. இவற்றோடு கூடுதலாக கடற்கரை ஓரங்களில் தாதுமணல் அள்ளுவதை கட​லோரப் பாதுகாப்புச் சட்டங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஆனால், இந்த விதிமுறைகள் எதையும் வைகுண்டராஜனும் அவருக்குச் சொந்தமான வி.வி.மினரல்ஸ் நிறுவனமும் பின்பற்றுவதில்லை.

தமிழக  கடலோரப் பகுதிகளில் இவர்கள் 59 தாதுமணல் குவாரிகளை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களின் உரிமையாளர் தமிழகத்தில் ஆளும் கட்சியாக  உள்ள அ.தி.மு.க-வுடன் நெருக்கமான உறவு வைத்துள்ளார். இவர்கள் செய்யும் முறைகேடுகளுக்கும், தாதுமணல் அள்ளுவதில் அவர்கள் செய்யும் விதிமுறை மீறல்களுக்கும் தமிழக அரசு பெரிய அளவில் துணைபோகிறது.

இதை எதிர்த்து, தயா தேவதாஸ் என்பவர்சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த நேரத்தில், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும் தாதுமணல் கொள்ளை மற்றும் விதிமுறை மீறல் குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை அளித்தார். அதன் அடிப்படையில், அந்த மணல் குவாரிகளுக்கு சீல் வைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்திப் சிங் பேடி தலைமையில் விசாரணைக்கும் உத்தரவிட்டது. ஆனால், அந்த விசாரணை அறிக்கையை வெளியிடக்கூடாது என்று அதற்கும் இவர்கள் இடைக்காலத் தடை வாங்கி உள்ளார்கள்.

கிரானைட்... அடுத்து கார்னெட்!

மேலும், தூத்துக்குடி,​ திரு​நெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இவர்கள் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த முறைகேடுகள் பற்றி பல முறை மாநில அரசின் அனைத்து துறைகளுக்கும் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை. அவர்கள், தாதுமணல் கொள்ளை நடக்கவில்லை என்றும் கனிம வளக் கொள்ளை நடக்கவில்லை என்றும் மத்திய அரசுக்கு அறிக்கை கொடுக்கின்றனர். எனவே, இது தொடர்பாக நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் கமிஷன் அமைத்து இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு இருந்தார் அவர்.

இந்த மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அமர்வில் நடந்து வருகிறது. ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதுபற்றி மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், கடந்த வாரத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் மட்டும் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மத்திய அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் கோபமடைந்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், 'மத்திய அரசு மற்றும் வி.வி.மினரல்ஸ் பங்குதாரர் எஸ்.வைகுண்டராஜன் உள்பட இதர எதிர் மனுதாரர்கள் அனைவரும் நான்கு வார காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதில் ஏதாவது காலதாமதமானால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என்று எச்சரித்தனர்.

தாது மணல் அதிபர்கள் சங்கத் தலைவரான தயா தேவதாஸ், 'தாது மணல் தொழிலில் வைகுண்டராஜன் நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளை அரசாங்கமே மறைக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை. இன்னும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்த பிறகு, தமிழக அரசு செய்த தவறுகள் பற்றிய உண்மைகள் வெளிவரும்' என்றார்.

கிரானைட் விவகாரத்தைக் கையில் எடுத்த நீதிமன்றத்தில் கார்னெட் விவகாரம் சிக்கி உள்ளது!

ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு